Friday, 13 March 2020

MANGALAM MAMI - 6மங்களம் மாமி 6
“நமஸ்தேஸ்து மஹாமாயே ஷ்ரீபீடே ஸுரபூசிதே |
ஷங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” 
மங்களம் தன் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமான தேவியின் அமர்ந்த நிலையிலான ஐம்பொன் சிலை ஒன்று பூஜா மண்டபத்தின் நடுவில் வீற்றிருந்தது
அன்று மாசி பௌர்ணமி... விசேஷமாக பூஜை நடந்துகொண்டிருந்தது.
கை நிறைய ரோஜா மல்லி பூக்களை எடுத்து அம்மன் மீது சார்த்தியபடி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருந்தார் மங்களம்.
அவரை பார்க்கவே மகாலட்சுமி போலத்தான் இருந்தது. பளீரென்ற முகம். நெற்றியில் அரக்கு வண்ண குங்குமம் நெற்றி வகிட்டிலும் நீண்டது. வெள்ளி கம்பிகள் கருப்புடன் போட்டி போட்ட கூந்தல். அதி காலை தலை குளித்து ஈர முடி கற்றைகளை கீழே ஒரு சிறு முடிச்சிட்டு அதில் ஒரு ஜாண் மல்லி சரத்தை சொருகி இருந்தார்.
அரக்கு வண்ண மடிசாராக கட்டிய சன்ன ஜரிகை மென் பட்டுப் புடவை அவரது வெளிர் நிறத்திற்கு மிக பொருத்தமாக இருந்தது. சிறு வயது முதல் கட்டி பழகியதால் மாமியின் மடிசாரு பாங்காக அமைந்திருந்தது. அக்கம் பக்கம் சுற்றத்தின் கல்யாணம் எதுவாகினும் மடிசாரு பக்குவமாக கட்டிவிட எல்லோருமே மாமியைத்தான் அழைப்பார்கள். அரக்கு வண்ண புடவையோடு போட்டி போட்டது மாமியின் கைகளில் பற்றியிருந்த மருதாணி.
ஒரு வருடத்தின் பெரும்பான்மையான மாதங்கள் மாமியின் கைகளில் மருதோன்றி தான் இருக்கும். சமீபத்தில் இட்டதால் அரக்காக மிளிர்ந்தது. மருதாணி சிவந்த மணக்கும் கைகளால் அம்மனுக்கு கை நிறைய பூ எடுத்து சாரத்தி பூஜை செய்வதென்பது அம்மனுக்கு மிகவும் உகந்தது. இதை தன் குடும்பத்துக்கு பல முறை எடுத்துச் சொல்லி செய்ய வைத்திருக்கிறார் மங்களம்.
விரல் நகங்களில் பவழ சிவப்பு சந்திரன்கள் எப்போதும் காணப்படும்.
பூஜை முடித்து நமஸ்கரித்து எழுந்தார் ‘அம்பிகே காப்பாத்துடீமா’ என்றபடி. நேரே வைத்தியிடம் வந்து அவரையும் நமஸ்கரித்தாள்.
அதற்குள் கடைக்குட்டி செல்ல பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டது. “எழுந்துட்டியாடி கண்ணம்மா?” என வாரி கொண்டார்
“பாட்டி உன் கை காமி” என அவரது உள்ளங்கையை எடுத்து முகர்ந்து பார்த்தது அம்மு.
“பாட்டி, வாசன பாட்டி... ஜம்முனு வாசன” என சிரித்தது. இவரும் சிரித்தார். “ஏண்டீ மா உன் கை கூடத்தான் மணக்கறது. நீ முகர்ந்து பாரு” என்றார் தன் மருதோன்றிய குட்டி கைகளை முகர்ந்து பார்த்து, “வாசன இருக்கு பாட்டி, ஆனாலும் உன் கை போல இல்லை” என உதட்டை பிதுக்கினாள். “செல்லம்” என கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார்.
அவர் முத்தமிடுவதே அலாதி. சிறு குழந்தைகள் மகள் மருமகள் யாராகினும் கன்னத்தில் உதடு படாமல் ஆனால் அழுந்த மூடிய உதடுகளுடன் பதித்து முஹர்வார். எச்சில் படாது. hygiene ஆனால் முத்தத்தின் அதே ஸ்பரிசம் சந்தோஷம்.
அப்போதே மூக்கு நுனியால் அம்முவின் கன்னத்திலும் சீண்ட அதே கிளுகிளுவென சிரித்தது. “கிச்சு கிச்சு மூட்றது பாட்டி” என்று இன்னமும் சிரித்தாள்.
அவளை இடுப்பில் தூக்கியபடி சமையலறைக்கு சென்றவர் அங்கே மாட்டு பெண்ணுடன் சமையல் வேளைகளில் கலந்து கொண்டார்.
கோடை இன்னமும் துவங்கவே இல்லை... வெக்கையாகத்தான் இருந்தது.
“என்ன டிபன் பங்கஜா?” என கேட்டார்.
“உப்புமாதான் மா, கூட தேங்காய் சட்னி” என்றாள்..
“சரி குடு நான் கிளர்றேன்” என வாங்கிக் கொண்டார்.
நல்லெண்ணெய் காயவிட்டு கடுகு உளுந்து கடலை பருப்புகள் பெருங்காய பொடி கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி துண்டுகள் போட்டு வதக்கி பக்குவமாக வாசனையாக தாளித்தார். தாளிப்பே வீடு மணத்தது.
ஒன்றுக்கு மூன்று அளவு தண்ணீர் கொதிக்க வைத்து தாளித்ததன் மீது விட்டுவிட்டு உப்பையும் போட்டு, அதன் மேலே இடது கையால் சிறுது சிறிதாக ரவையை தூவியபடி வலது கையால் கட்டி படாமல் கிளறினார். அடுப்பை சிம்மில் வைத்தபடி நன்றாக கிளறி மேலே ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு நன்றாக மேலும் கீழும் பதமாக கிளறி மூடி வைத்தார். ஐந்து நிமிடத்தில்  மணக்கும் ஆவி பறக்கும் உப்புமா தயார் ஆனது. அருகே நின்ற பங்கஜத்திற்கு அதை பார்த்ததுமே நாக்கு ஊறியது. புன்னகைத்து கொண்டாள்.
‘அம்மா கை பக்குவம் தனிதான். ஒரு கட்டிதட்டி இல்லாம என்னமாத்தான் கேசரி மாதிரி செய்வாரோ...’ என உள்ளே மெச்சிகொண்டாள்.
“ஆயிரம்தான் சட்னி இருந்தாலும், இந்த உன் ஸ்பெஷல் உப்புமாக்கு எலுமிச்சை ஊறுகாய்தான் பெஸ்ட்” என சுவைத்து உண்டார் வைத்தி. “அதெப்பிடி, உப்புமா நா ஒலகமே வெறுக்கறது.... நீ மட்டும் இத அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் பதம் மாறாம சுவையா செய்யறே மங்கா?” என மெச்சிகொண்டார்.
“போறுமே. உப்புமா பண்றது ஒரு பெரிய வித்தையா என்ன... காலங்கார்த்தால உங்களுக்கு என்னை வம்புக்கு இழுக்கணும்...” என செம்மை படர்ந்த கன்னத்துடன் முனகினாள் மங்களம்.
“இல்லை, நிஜம்மா தான் சொல்றேன்.... ஆஹா அமிர்தம் போ” என உப்புமா உண்டு முடித்து அதன் பின் நெஞ்சை கரிக்காமல் இருக்க அவள் தந்த நீர் மோரையும் குடித்துவிட்டு ஸ்லாகித்தார்.
“பாட்டி நேக்கு கையில” என வந்துது அம்முகுட்டி.
“என்னடீது பாட்டிய தொந்தரவு பண்ணாம நீயே சாப்பிடு. நோக்கு வயசாகலையா?” என திட்டினாள் இரண்டாம் மாட்டு பெண் மாலதி.
“விடு மாலதி இதிலென்ன சரமம்”.
“ம்மா, நானே சாப்டுப்பேன்... ஆனா பாட்டி கை வாசன. அந்த கையில எடுத்து வாயில தந்தா ஜோரா இருக்கும்... நோக்கு தெரியாதா... நீயும் சாப்பிடு... நோக்கும் பிடிக்கும்” என்றாளே பார்க்கணும். பக்கென சிரித்துவிட்டனர் இரு பெண்களும்.
“வாயை பார்த்தியோன்னோ இந்த குட்டிக்கு” என திருஷ்டி வழித்தார்.
“ஆனாலும் அம்மா, அவ சொல்றதேன்னமோ நெஜம்தான். அந்த சிவந்த மணக்கும் கையால உங்க கை பக்குவத்தோட செஞ்ச சப்பாட்டை வாங்கி சாப்பிடுவது அமிர்தம்தான்” என்றாள் மாலதி மனம் நெறைய
“அதெப்பிடிமா வருஷம் முழுவதும் சலிக்காம மருதாணி இட்டுக்கறேள். அவ்ளோ பிடிக்குமா?” என்று கேட்டாள்
“ஆமாண்டீமா சின்னப்போலேர்ந்தே மருதாணி னா ரொம்ப இஷ்டம்.
எங்க அத்தைபாட்டி என்ன பக்கத்திலே உக்கார வெச்சு ஒரு கதை சொல்லுவார் அந்த காலத்திலே”.
“அந்த அம்பிகைக்கு வெறும் கையால பூஜை பண்றதவிட மருதாணி இட்டுண்டு பூஜை பண்ணினா பூ போட்டா அத்தனை பிடிக்குமாம். அவ்ளோ இஷ்டமாம். அது ஒண்ணு அப்போவே மனசில ஒரைச்சுடுத்து.”
“இன்னமும் சொல்லுவா... சீதாப்ராட்டியார் லங்கையில அசோக வனத்தில இருக்கறச்சே அவ ஓயாம ஸ்ரீராமர நெனச்சுண்டே அழுதுண்டே பொலம்புவளாம். எப்போ வந்து தன்ன மீட்டுண்டு போவாரோ.... எப்போ, தான், அவருக்கு மீண்டும் பணிவிடை செய்வோமொன்னு உண்ணாம உறங்காம தவம் இருந்தாளாம். அப்போ அவ பக்கத்துலே இருந்த ஒரு மருதாணி மரம் மட்டும் அவரோட புலம்பலை கேட்டு தலை அசைத்து அவ மேலே பூங்காற்று வீசி அந்த மணமும் ஸ்பரிசமும் அவருக்கு பெரும் ஆறுதல் கொடுத்துதாம். “கவலைப் படாதே சீதே, சீக்கிரம் உன் ராமபிரான் வந்துடுவார் உன்ன மீட்டு அழைச்சுண்டு போக னு தைர்யம் சொல்லித்தாம். அது அவருக்கும் பெரும் நிம்மதியும் ஆறுதலும் கொடுத்துதாம்”.
அதனால சீதை மீண்டும் ஸ்ரீராமரோட அயோத்தி வந்த பின்னே அவரண்ட ஒரு நா தனிமையில இதை விவரிச்சு சொன்னாளாம். மருதாணிதான் நேக்கு அங்கே அத்தனை ஆறுதல்... நீங்க அவசியம் அவளுக்கு ஏதானும் வரம் பிரசாதிக்கணும்னு  வேண்டீண்டாளாம்.
ஸ்ரீராமர் மனசு நெறஞ்சு போய், “மருதாணி எல்லா சுபகார்யங்களிலேயும் முதன்மையா எல்லாரும் கையில வெச்சு கொண்டாடுவா... முக்கியமா கல்யாணப் பொண்ணுக்கு மங்களகரமா முதன் முதலில் மருதாணி வெச்சுதான் கல்யாண விசேஷங்கள் தொடங்குவா. எங்கெங்கு மங்களம் இருக்கோ அங்கெல்லாம் நீ முக்கியமா இருப்பேனு ஆசீர்வதித்தாராம்.
அதனாலதான் தென்னிந்தியாவிழும் சரி  வட இந்தியாவிலும் சரி மெஹெந்தி மருதாணி இடர்துனு கல்யாணப் பொண்ணுக்கு முதல்ல துவங்கறா.”
அது மட்டுமல்ல. அது கிருமி நாசினியும் கூட... தோல் வியாதி அரிப்புனு எதுவும் நெருங்காது. அந்த காத்து பட்டாலே அந்த மணமும் ஸ்பரிசமும் அத்தனை நல்லது. அதனாலதான் துளசிக்கு இணையா எல்லாரும் மருதாணிய கொண்டாடறா” என்றார்.
மருதாணி நா மங்களகரம். அதான் என் மனசுக்கும் மிக  நெருங்கிய  தோழியாயிட்டா அவள்” என்றார். மாலதி கேட்டு பிரமித்து போனாள். “அம்மா நானும் இன்னிக்கி வெச்சுக்கட்டுமா?” என்றாள் ஆசையாக
“நீங்க வெச்சு விடறேளா?” என்றாள்.
“அதுகென்ன பேஷா வெச்சுவிடறேன்” என்று புன்னகைத்தார் மங்களம்.
இதை எல்லாம் கேட்டபடி வந்த பெரிய பிள்ளை, “அம்மா, அப்போ எல்லாம் பண்ணுவியே அதப்போல இன்னிக்கும் உன் மருதாணி கையால நிலா சாப்பாடு உருட்டி கையில போடறியா மா.... இன்னிக்கி பௌர்ணமி ஆச்சே...?” என்றான் ஆசையாக ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி.
“என்னடா, இன்னமும் சின்னக் குழந்தையாடா நீ” என்றபோதிலும் மனம் புளங்காகிதம் அடைந்தது.
“பங்கஜா, என் மூத்த கொழந்தைக்கு ஆசைய பாரத்தியோ. சாதத்த வேளையோட வெச்சு ஆற வெச்சுடு. புளியோதரை பண்ணிடு. மிச்சத்துக்கு இருக்கவே இருக்கு தாளிச்ச தயிர் சாதம். இன்னிக்கி ராத்திரிக்கு எல்லாருக்குமே மேலே மொட்ட மாடியில நெலா சாப்பாடு” என்றார். ஹைய்யா என குதித்தார்கள் பிள்ளைகள்.
“தாங்க்யு மா” என அருகே வந்து கன்னத்தை தொட்டு சென்றான் பெரிய பிள்ளை.
“வயசுதான் ஆறது இன்னமும் கொழந்தத்தனம் போகல” என சிரித்தார்.
“இப்படி ஒரு அம்மா கெடைச்சாக்க, யாருக்குமே பெரிசாகணும்னு தோணாதும்மா” என மாலதியும் பங்கஜாவும் இரு பக்கமும் வந்து அவளை அணைத்துக்கொண்டனர், தோள் மேல் தலைவைத்து.
மங்களம் இரு கைகளாலும் அவர்கள் கன்னத்தை வருடினார்.
மடியில் படுத்துக்கொண்டு மழலை பேசும் பேரன் பேத்திகள்... தோளில் தலை சாய்க்கும் மருமகள்கள்... கன்னம் வருடிச் செல்லும் மகன்கள் கண்ணாலையே இந்த வயதிலும் காதல் பார்வையாக  வருடிச் செல்லும் கணவன். அங்கே மங்களம் நிறைந்திருந்தது.
அன்று இரவு மொட்டை மாடியில் எட்டு மணி அளவில் வானில் தங்கமாக ஜொலித்தது பூரண சந்திரன். பளீரென இருந்தது சுற்றுபுறம்
ஒரு குண்டானில் புளியோதரை... அதற்கு தோதாக கருவடாம் அரிசி அப்பளாம் பொரித்தது. தாளித்த தச்சு மம்மம். அதற்கு மாகாணிகிழங்கு வடுமாங்காய் என இரு சிறிய கிண்ணங்களில். செம்பில் குடிநீர் சகிதம் எல்லோரும் ஆஜர்.
மற்ற நாட்களில் “சாப்பிட வாங்கோ நாழியாறது நாங்க அடுக்களைய ஒழிக்க வேண்டாமா...?” னு அழைத்தாலும் சாப்பிட வராமல் படுத்தும் பிள்ளைகள் இன்று முதலாவதாகா அங்கே ஆஜர். நேக்கு முதல்ல நோக்கு இல்லை நேக்கு மொதல்ல என குடும்பி பிடி சண்டை வேறு.
“பேசாம சமத்தா உக்காரணும். இல்லேனா நான் தரமாட்டேன்” என அன்பு கட்டளை போட்டார் மங்களம். கப்சிப்.
கடைக்குட்டி அம்மு முதல் வைதீஸ்வரன் வரை அனைவரும் வட்டமாக அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர். மங்களம் அவரவர் வயசுகேற்ப சிறிய பெரிய உருண்டைகள் உருட்டி கையில் போட்டுக்கொண்டே வந்தார் அவரவர் சிறு இலை சீந்தில் வடாம் ஊறுகாய் என தொட்டுக்கொண்டு உண்டு மகிழ்ந்தனர்.
“நீயும் நடு நடுல ஒரு வா போட்டுண்டுடு மங்கா, தனியாவா சாப்பிடுவே” என்றார் வைத்தி.
“இருக்கட்டும், நான் எல்லாருக்கும் தந்துட்டு நாலு வா போட்டுக்கறேன்” என்றாள்.
“அதெல்லாம் இல்லை, நீயும்தான் சாப்படணம் எங்களோட” என பிள்ளைகள் அடம் பிடித்து நடு நடுவே உண்ண வைத்துகள்.
அம்முகுட்டி, “பாட்டி, நீ எங்க எல்லாருக்கும் ஊட்டறியே... நான் நோக்கு ஊட்டறேன்” என தன் பிஞ்சு கைகளில் வாங்கிய உருண்டையை அவள் வாயருகே கொண்டு நீட்டியது. மேலும் கீழும் சிந்தினாலும்... அதன் பாசம் நீர் திரையிட்டு கண்ணை மறைத்தது மங்காவிற்கு. வாயில் ஆசையாக வாங்கிக்கொண்டாள், புரங்கையால் கண்ணை துடைத்தவாறு.
“என் பட்டு செல்லமடி நீ” என கொஞ்சிகொண்டார்.
எல்லோருக்கும் வயிறும் மனமும் ஒருங்கே நிறைந்தது.
வணக்கம் மீண்டும் சந்திப்போம்.


5 comments:

 1. Mangalakaramana story.....Arumai

  ReplyDelete
 2. ARUMAI,ARUMAI,ARUMAI.
  Peayar mattumalla
  Kathaiya mangalaharama irukku.
  Kudumpam Endral ippadi than irukanum
  Manasu nirainthu irukku

  ReplyDelete