Friday 20 March 2020

MANGALAM MAMI -7


மங்களம் மாமி 7 – இன்றைய நிலையை ஒட்டிய ஸ்பெஷல் பதிவு

மங்கா பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார். வீட்டில் ஒருவருக்கு சுகமில்லை எனில் அந்த வீடே களேபரம்தான். அன்றாட நிகழ்வுகள் ஸ்தம்பித்து போகும் நிலை.
அம்மு குட்டிக்கு ஒடம்பு சரியில்லை.
“பாரு பங்கஜா, ரசத்துக்கு சம்பாருக்குன்னு தாளிக்க வேண்டாம். வதக்கல் எதுவும் பண்ணாதே... வெறுமனே வேக வெச்சு தேங்காய் போட்டு பெரட்டிடு. பீன்ஸ் தாளிக்கறச்சே அதுக்கு முன்னலேயேவே கொழந்தைக்கு தனியா எடுத்து வெச்சுடு. காரமா தாளிக்க வேண்டாம். அப்படியா பண்ண வேண்டி வந்தா அடுக்களை கதவை தாழ் போட்டுட்டு பண்ணிடு என்னம்மா” என்றார் எடுத்து சொல்லி.
அனைத்து விவரமும் தெரிந்திருந்த போதும் மாமியார் சொல்கிறார் எனும்போது அதிக அக்கறையுடன் சரி என கூறி ஒவ்வொன்றையும் அதன்படி செய்தாள் பங்கஜா.
“டேய் கருணா, வாசல்ல வேப்பிலை கொத்து சொருக சொன்னேனே செஞ்சியோ?” என வாசப்பக்கம் போய் குரல் ஒசத்தாம அதட்டினார்.
“தோ மா” என ஓடினான். “தா பாருப்பா, கை கால்வ அலம்பீண்டு சுத்தமா பரிச்சு சொருகு” என்றார் பின்னிருந்து. “சரிமா” என குரல் கொடுத்தான்.
“டீ கண்ணம்மா, அம்மியில வேறே எதுவும் அரைக்கறதுக்கு மின்னாடி வேப்பிலை அரைக்கணும். ஒரு கண் வெச்சுக்கோ. இவா ஆரானும் மறந்து போய் மொளகா வெச்சு ஏதானும் அரைச்சுட போறா. அலம்பினாலும் போகாது காரம்” என வேண்டினாள். “சரிதாம்மா” என்றாள் அவள்.
“த பாரு துணிய துவைச்சு சுத்தமா காயபோட்டுடு... நாங்க அப்பறமா எடுத்து வெச்சுகறோம் பொழுது சாயரதுக்கு முன்னேயே” என்றார்
“என்ன பாட்டி இது, கார்த்தாலேர்ந்து என்னவாச்சு, ஏன் இப்படி எல்லாரும் என்னமோ டென்ஷன் ல ஒடறேள்... நீ என்னென்னமோ பேசீண்டே இருக்கியே?” என்றான், அம்முவுக்கு பெரியவன் க்ரிஷ்ணன்
“அதில்லடா கண்ணா, அம்முவுக்கு முடியலையோன்னோ அதான்” என்றார்.
“சரி அம்முக்கு ஜுரம். எல்லாருக்கும்தானே ஜுரம் வரும், நேக்கும் வந்துதே ரெண்டு மாசம் முந்தி... இதென்ன இத்தனை ஆர்பாட்டம்?” என்றான். சிறுவன் பத்தை நெருங்கி கொண்டிருக்க மண்டைக்குள் ஆயிரம் கேள்விகள் குடைந்தன சிறிய மூளையில்.
“அப்பா, நோக்கு சொன்னா புரியாதுடா... இது வேற ஜுரம் டா” என்றார்.
“ஒ, அப்போ கொஞ்சம் சீரியஸா.... டாக்டர் மாமாவ கூப்பிடணுமே...?” என்றான் அக்கறையாக
“இல்லை வேண்டாம், தானே செரியா போய்டும்” என்றார்
“அதெப்பிடி பாட்டி, சீரியஸ்னு சொல்றே, தானே செரியாயிடும்னு சொல்றே ஒண்ணுமே புரியலை போ” என அலுத்துக்கொண்டான்
பெரியவன் கணேஷன் அவனை அருகமர்த்தி புரிய வைத்தான்
“கண்ணா இதை மீஸில்ஸ் னு சொல்லுவா. சையண்டிபிகா பார்த்தா ஒடம்பு சூடு ஜாஸ்தியா போய் சருமம் வழியா வெளிப்படும் ஒரு நோய். அது பிம்ப்ளில்னு சொல்வாளே அதுபோல தோல்மேல வெடிக்கும். மூணு நாள் நெறைய இருக்கும். அதை கட்டுபடுத்ததான் வேப்பிலை ரொம்ப குளிர்ச்சி னு அரைச்சு போடுவா... கூடவே மஞ்சள் இருக்கோல்லியோ அதையும் அரைச்சுப்பா. அதைவிட சிறந்த ஆண்டிசெப்டிக் கிருமி நாசினி கிடையாது. உள்ளுக்கும் நெறைய இளநி கஞ்சி ஜூசுனு குளிர்ச்சியா தருவா. உடல் உள்ளும் புறமும் குளிர்ந்து கொஞ்சம் கொஞ்சமா இந்த நோயினுடைய தன்மை குறையும். அஞ்சா நாள் ஏழாம் நாள் னு பார்த்து இறங்கு முகமா இருந்தா தலைக்கு மஞ்சள் வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை விட்டு ஸ்னானம் பண்ணி வைப்பா. அம்மனுக்கு அபிஷேகம் பூஜைன்னு போய் செஞ்சுட்டு வருவா” என்றான்.
ஏதோ புரிந்தது. நிறைய புரியவில்லை.
“ஒ அப்படியா” என கூறிக்கொண்டான்.
“இந்த உவ்வாக்கும் சாமிக்கும் என்ன சம்பந்தம்?” என கேட்டான்
கணேஷ் என்னவென்று சொல்லுவான். அந்த காலத்துலேர்ந்து மனுஷாளுக்கு ஒண்ணைச் சொல்லி அவாள அதை ஒத்துக்க வைக்கறதுங்கறது கஷ்டம், இப்போ ஒன்னையே எடுத்துக்கோ... நாங்க என்னென்னமோ எடுத்து சொல்றோம்... நீ அதை என்னிக்கானும் பெரியவா சொல்றா அதுல என்னமோ விஷயம் இருக்கு னு சொல்லி புரிஞ்சுண்டு ஒழுங்கா செஞ்சிருக்கியோ.... இல்லை இல்லியா, அதேபோல்தான் நெறையா மனுஷா, அந்த காலத்துலேர்ந்து இந்த காலம் வரை”
“அப்போ அவாள எப்படியானும் நல்லத மட்டுமே பண்ண வைக்கணும்னு சாமி குத்தம் சாமிக்கு வேண்டி சாமிக்கு பண்ணணும்னு பகவான் பேரை சொன்னா, ஒடனே ஒ சாமிக்கு வேண்டியா னு ஒடனே கேட்டுப்பா, அதன்படி செய்வா... அதனால அப்படி சொல்லப்பட்டது. போறுமா இன்னும் ஏதானும் பாக்கி இருக்கா?”
“புரிஞ்சுது, இப்போ நான் என்ன பண்ணணும்?” என்றான்
“நோக்கு அம்முவ பிடிக்கும் இல்லியா அவ ஒன் தங்கைதானே சோ அவளுக்காக நீ செலது பண்ணணும்”
“நேக்கொண்ணும் அம்முவ பிடிக்காது ஆனாலும் சொல்லு, பாவம் போனாபோறது செய்யறேன்” என்றான்.
“போக்கிரி” என்றான் கணேஷ்.
வெளியில போய் வெளையாட வேண்டாம். இது சட்டுன்னு அம்முகிட்டேர்ந்து நோக்கு பரவலாம். சோ நீயும் ஜாக்ரதயா இருக்கணும். வாசப்பக்கம் கொல்லைப்பக்கம் அலைஞ்சாலும் ஆத்துக்குள்ள வரும்போதே, தினமுமே கூட, கை கால் அலம்பீண்டு உள்ள வரணும்.
ஷூ சப்பலோட ஆத்துக்குள்ள வரப்டாது. அங்க நீ எது மேல நடந்தையோ மிதிச்சியோ அந்த கிருமி எல்லாம் ஆத்துக்குள்ள வந்துடும் இல்லியா...” என்றான்
“வாலிட் பாயின்ட் பெரியப்பா” என்றான்.
“டேய் பெரிய மனுஷா” என்றான் கணேஷ் சிரித்து.
“பத்தியமா அம்மா பெரியம்மா என்ன சாதம் போடறாளோ அத சமத்தா சாப்பிடணும். வாசல்ல விக்கறத ரோட்ல வர்ற எதையும் யார் கொடுத்ததையும் வாங்கி சாப்டப்டாது. தலைய தொட்டா தூசி ஓட்டடை தொட்டா, கண்ணை கசக்கினா, மூக்கை நோண்டினா, ஒடனே போய் கை அலம்பணும். செய்வியோ.... கண்ணை கசக்கப்டாது. அனாவசியமா பப்ளிக்ல மூக்கை காதை குடையப் படாது” என்றான்.
“ஆச்சா லிஸ்ட்?” என்றான்
“ஓத வாங்குவே படவா” என்று அவனை செல்லமாக அடிக்க கை ஓங்கினான்.
“பண்றேன் பெரியப்பா, நான் குட் பாய்” என்றான். அவனை இறுக்கி அணைத்து உச்சியில் முத்தமிட்டான் கணேஷன்.
“புரிஞ்சுதோன்னோ, அந்த அறை பக்கம் போகாம அவ கிட்ட பேச்சு குடுத்து எப்போதும் போல அவள சிணுகீழ்தாம நீ பாட்டுக்கு சமத்தா உன் பாடத்தை படிச்சுட்டு வெளையாடு” என்றாள் மங்கா. உதட்டை பிதுக்கி அழகு காட்டினான். அவளுக்கு சிரிப்பு வந்தது.
ஆம் அம்முவிற்கு அந்த அம்மன் வந்து இறங்கி இருந்தாள்.
மற்றவருக்கும் பரவக்கூடும் முக்கியமாக குழந்தைகளுக்கு என கண்ணனை அருகே விடாமல் அந்த அறையை சுத்தமாக வைத்துக் கொண்டனர்.
வேப்பிலை மஞ்சள் அரைத்து பத்து போட்டனர்.
காரம் உப்பு அதிகமின்றி அந்த வீட்டின் அனைவருமே பத்தியமாக சாப்பிடனர்.
வாசலில் வேப்பிலை சொருகி அந்நிய மனிதர் உள்ளே வருவதை தவிர்த்தனர்.
நாலே நாளில் அம்முவுக்கு இறங்கு முகமாக அதிக தழும்புகளின்றி மாயமாகிவிட்டாள் அம்மன். தலைக்கு முதல் தண்ணீர் விட்டாயிற்று. 
கொரோனாவிற்கும் இதற்கும் அதிக வித்யாசம் இல்லை என இப்போது தோன்றுகிறது அல்லவா, சுத்தம் சுகாதாரம், தனிமை, கூட, எந்த ரூபமோ பெயரோ சக்தியோ..... அதன் உதவியும் கிட்டட்டும் – social distancing, restrain, resolve - பெரியோர் கற்றோர் சொன்னதை செய்வோம்.
அடுத்து வரும் நாட்களில் நாம் பல காலம் கூடி வாழ... கோடி நன்மை பெற..... சிறிது காலம் தனித்திருப்போம், ஒதுங்கி இருப்போம். ‘துஷ்டனை கண்டால் தூர விலகு’ என்றனர் அல்லவா – இவன் துஷ்டன் அல்ல கொலைபாதகன் கொரோனா. நம்மையும் காத்து மற்றோரையும் காத்தருளுவோம். இப்போது நமக்கு நாமேதான் கடவுள்.
வாங்க, கொஞ்சம் கவலை மறந்து சிரிப்போம்... :)
இதனிடையில் நல்ல வேனிற் காலம், மே மாதம் தகித்து அக்னி நக்ஷத்திரம் துவங்கி இருந்தது.
வீட்டில் பேரன் பேத்திகள் அனைவருக்கும் பரீட்சை முடிந்து விடுமுறை. “இதுகள இந்த லீவு நாள்ல கட்டி மேய்க்கறது இருக்கே, பகவானே...” என பெண்டிர் அலுத்துக்கொண்டனர்.
அந்நேரம் வைத்தீக்கும் கோர்ட் விடுமுறை. என்னத்தை செய்வோமடா கொட்டைடா கொடையடா என செய்வதொன்றும் அறியாமல் வீட்டை சுற்றி சுற்றி வந்தார்.
காலை கடன், குளியல் பூஜை சிற்றுண்டி எல்லாம் ஆயிற்று. ஹிந்து பேபரை, The Hindu முதல் Published By... வரை பாடம் பண்ணியாயிற்று.
பொழுது போகவில்லை.
‘பசிக்ராப்ல இருக்கோ...?’ எனத் தோன்றியது.
‘என்ன பண்ணுவா இந்த பொம்மனாட்டிகள் எப்போ பாரு... இவளுக்கு மட்டும் எப்படி ஓயாம ஏதானும் பண்றதுக்கு இருந்துண்டே இருக்கு?” என நடுகட்டினுள் எட்டிப் பார்த்தார்
மங்கா பங்கஜா மாலதி, கூட, அழைத்த அழைப்புக்கு ஓடியாடி அதை இதை கொண்டு வந்து உதவ என கண்ணம்மா... மும்மரமாக எதையோ அரிவதும் உப்பு மிளகாய் போடுவதும் குலுக்குவதுமாக நடந்தது.
“என்ன இங்கே, ஒரே ரகளையா இருக்கு?” என எட்டிப் பார்த்தார்
“உங்களுக்கு இங்கே என்ன வேலை, வாசல்ல போய் இருங்கோ” என மெல்ல அதட்டினாள் மங்கா.
“என்ன பண்றேள்னு கேட்டேநோல்லியோ?” என்றார்.
“அட ராமா! இந்த பிராம்மணனுக்கு யாரு லீவு விட சொன்னா...” என உள்ளே வைதுகொண்டே, “வேற என்ன நா, ஒண்ணுமே தெரியாததா போல கேட்டாறது.... வெய்யகாலம் ஆரம்பிச்சுடுத்து, ஊறுகாய் போடறோம். இப்போ போட்டாதானே நா வருஷம் மொத்தமும் நமக்கு ஆண்டு வரும்” என்றாள் கை பாட்டுக்கு ஆவக்காயை சீவி கொட்டையை நெம்பி எடுத்துக் கொண்டிருந்தது. வாய் பாட்டுக்கு வைத்திக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.
“பாட்டி, நேக்கு ஒரே ஒரு துண்டு மாங்காய்” என பிள்ளைகள் ஊடாக ஓடி வந்து பச்சை மாங்காய், வடு என எடுத்துக் கொண்டு ஓடின.
“டேய் புளிக்கும் டா, இன்னும் கொட்டை எடுக்கலை. தொண்டைல சிக்கிக்க போறதுடா. இந்த வாலுகளோட முடியலை” என அலுத்துக்கொண்டே வாயாடியபடியே கை விறுவிறுவென வேலை செய்தது பெண்டிருக்கு.
ஸ்வாரசயமாக இருக்க, வைத்தீ அங்கேயே சற்று பக்கமாக நின்று வேடிக்கை பார்த்தார். அவர்கள் ஒரு கைதேர்ந்த மெஷின் ஷாப்பின் அசெம்ப்ளி செக்ஷன் போல தொடர் அடுக்காக வேலை செய்வதைக் கண்டு அதிசயித்தார்.
‘நமக்கு வாய்தான் (ஆமா வக்கீலோன்னோ) கிழியும். கை ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை. இங்கே இவாள பாரு கையும் கை வாயும் ஓயாம... என்னில் ஆரம்பிச்சு எல்லாரோட மண்டையும் உருட்டியாறது...’ என சிரித்துக்கொண்டார்.
அவர் சிரிப்பதை பார்த்து ஒரு முறை முறைத்தாள் மங்கா
“என்ன சிரிப்பு, நாங்க இங்கே அவதி படறது அவ்விடத்தில சிரிப்பு வர்றதோ?” என்றாள் இடக்காக.
“ஐயோ இல்லைடி மங்கா, பார்க்க ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கு கன்வேயர் பெல்ட் மாதிரி அடுக்கடுக்கா சரியா கணிச்சு ஒவ்வொண்ணும் செய்யறேள்” என ஸ்லாகித்தார்.
“சரி சரி போய் பேப்பர் படிங்கோ” என விரட்டினாள்.
“மங்கா, செத்தபோரம் காபி கிடைக்குமா... ஒரே அலுப்பா, பசிக்ராப்போல தூக்க கலக்கமா இருக்கு. சொடியாவே இல்லை” என்றார்
“இங்கே நாங்க என்ன பண்ணிண்டிருக்கோம்... நடுவால காப்பிய கொண்டா ஜூச கொண்டான்னா நான் எப்படி நகர முடியும்.... ஒண்ணு பண்ணுங்கோ. எல்லாம் ரெடியா மேடை மேல இருக்கு, நீங்களே வேணா அர வா காபி கலந்துக்கோங்கோ” என்றாளே பார்க்கணும்.
“ஐயோ, அடுக்களை இவா டெர்ரிடரி.... அதுல நான் போய் புகுந்து எதையானும் மாற்றியமைச்சுட்டா போச்சு.... காச்மூச்சு” என பயந்தார்.
“நிஜம்மாவ சொல்றே?” என்றார் சந்தேகமாக தயக்கத்துடன்
“ஆமா. நான் எண்ணையில கை வெச்சுண்டிருக்கேன் இப்போ கண்டிப்பா பாதியில எழுந்துக்க முடியாது. எல்லாத்தையும் கிளறி பரணியில போட்டு வாயை கட்டினாதான் ஆகும்.
“அப்படியே இவா வாயையும் கட்ட முடிஞ்சா ரொம்பவே நன்னா இருக்கும் இல்லையோடி பெண்களா?” என அடிக்குரலில் கூற மூன்று பேரும் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள். தன் மண்டைதான் உருள்கிறது என புரிந்து கொண்டார் வைத்தீ.
‘போங்கோடீ, காபி கலக்க நேக்கு தெரியாதா என்ன.... நானே பண்ணிக்கறேன்’ என வீம்பாக சமையல் அறைக்குச் சென்றார். தோளில் கிடந்த துண்டு ஏதோ போருக்கு போகும் வீரன் போல தலைக்கு மேலே தலைப்பாகையாக ஏறி அமர்ந்தது.
இடமும் வலமும் புரியவில்லை.
ஒருவாறாக கேசை பற்றவைத்து அதன் மேல் அத்தனை பெரிய அடுக்கு ஒன்றை வைத்தார். அது சூடு ஏறிக்கொண்டு இருந்தது. எல்லா சமைத்த பாத்திரத்தையும் திறந்து பார்த்துவிட்டு கடைசியாக பால் பாத்திரத்தை கண்டெடுத்தார். ஹிமாலைய வெற்றி போலத் தோன்றியது.
அதை அடுப்பில் இருந்த பாத்திரத்தில் சாய்க்க, சொய் என்ற சத்தத்துடன் சூடேறிய பாத்திரத்தில் பால் விழுந்தது. அடுத்த படையெடுப்பு டிகாக்ஷன் தேடல்.... டிகாக்ஷன் filter இல் தானே இருக்கும் என, மேடை, மர பீரோ, வலை பீரோ, அனைத்தையும் தேட, பில்ட்டர் மட்டும் கண்ணிலேயே படவில்லை. அதற்குள் அடுப்பில் பால் சொட சொடவேன்றது. அதை வேகமாக ஓடி சிம் செய்தார்.
வேறே எதையோ எடுத்து திறக்க, அதில் டிகாக்ஷன் தளும்பியது. “Eurekha” என கத்த வேண்டும் போல ஆசை... கையில் இருக்கும் கரண்டி பறந்து வருமோ என பயந்து வாயை மூடிக்கொண்டார்.
க்ளாசை தேடி எடுத்து அதில் டிகாக்ஷனை கொஞ்சம் விட்டுக்கொண்டார். அதற்குள் பால் புஸ்சென பொங்கி... இமைப்பதற்குள் பொங்கி வழிந்தே விட்டது.
‘போச்சு, இன்னிக்கி அர்ச்சனைதான்...’ என நொந்து போனார்.
கிடுக்கி பிடித்து அந்த பெரிய பால் பாத்திரத்தை இறக்கி சாய்த்தார்... கிடுக்கி பலமின்றி ஒரு பக்கமாக சாய்ந்தது. சுட வைத்த பாலில் பாதி கீழே பாதி க்ளாசில்.
‘அட ராமா, ஒரு காபி பண்ண வக்கில்லை நேக்கு... பெரிய அட்வோகேட் ஜெனரல்.... கஷ்டம்’ என தலையில் அடித்து கொள்ளலாம் போல வந்தது. அடுத்தது சர்க்கரை.
‘போனாப் போறது, ஒன்ன பார்க்கவும் பாவமாத்தான் இருக்கு’ என அதிகம் படுத்தாமல் கையில் கிடைத்தது. அதை காபியில் கலந்து க்ளாசை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்.
‘என்னமோ வாசன வர்றதே... கேஸ் off பண்ணேளோ.. என்னது என்னென்னமோ  சத்தம்..... ஒரு காபிக்கு வெண்கல கடையில யானை புகுந்தாப் போல?” என கேட்டாள் மங்கா.
‘ஆமா, கேஸ் off பண்ணினேனோ...?’ என அப்படியே ரிவர்சில் போய் எட்டி பார்த்தார். பாக்கி இருந்த கொஞ்சூண்டு பாலோடு அந்த பாத்திரம் off பண்ணப்படாத கேஸ் மீது தீய்ந்து நிறம் மாறி கருகிக்கொண்டிருந்தது.
‘ஐயோ’ என அவசரமாக கேசை ஆப் செய்தார்.
கையில் க்ளாஸ் காபியை உறிஞ்சியபடி, ‘ம்ம் பரவாயில்லை, நான் போட்ட காபி நன்னாதான் இருக்கு... பேஷ் பேஷ்’ என தன்னை தானே மெச்சிக்கொண்டே வாயிலை நோக்கி நடந்தார்.
“டீ பங்கஜா, என்னமோ நாறற்துடீ செத்த போய் பாரேன்.... இந்த மனுஷன் எதையானும் அடுப்பில விட்டுட்டாரா?” என சந்தேகப்பட்டாள் மங்கா
அவள் உள்ளே சென்று பார்க்க, சமையல் அறை, பெரிய எருமை மாடு ஒன்று கன்று போட்டது போல காணப்பட்டது. சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
“அம்மா, இங்கே வந்து நீங்களே பார்த்துக்கோங்கோ” என நமுட்டு சிரிப்புடன் கூறினாள்.
“என்ன டீ, சொல்லேன் என்னவாம்?” என கை ஊன்றி எழுந்தாள்.
“ரெண்டு கையும் எண்ணெய், காரப்பொடி பிசுக்கு...” என மெல்ல தடுமாறி அடுக்களையில் நுழைய, அங்கே கண்ட காட்சி... “என்ன நா இது, ஒரு காபிக்கா இந்த களேபரம்...”
“உங்களுக்கெல்லாம் யாரு நா லீவு விடச் சொன்னா.... 365 அந்த கோர்ட வெச்சு தொலைக்கப்டாதோ.
“இவாளுக்கு பண்றதுக்கு ஒண்ணுமில்லாம ஆத்துல இருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்” என பொலம்பி இறைந்து தீர்த்தார்.
காதில் ஏதோ விழுந்ததோ இல்லையோ, என ஒரு மேதாவி முகத்துடன் மீண்டும் Times of India பேப்பரில் முகத்தை மறைத்துக்கொண்டு பாக்கி காபியை ரசித்தார் வைத்தீ.
(Work From Home களேபரமும் இப்படித்தான் இருக்கின்றதோ.... பாவம் அதை அனுபவிக்கும் பெண்டிர். பாவம் அவஸ்தை படும் ஆடவர்) அவர்களுக்கு சமர்பணம். நடுவில் குஷியாக உலா வரும் குழந்தைகளுக்கு – என்சொஈஈஈ (ensoiiii)
மீண்டும் சந்திப்போம்.



4 comments:

  1. Very very nice. I have recommended this blog to my son,son-in-law,daughter-in-law and grandson who are all working from home in US and UK for the last 10 days.

    ReplyDelete
  2. ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்க வளமுடன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. ரொம்ப சந்தோஷம்.

      Delete