Sunday 8 March 2020

MAA THAVAM PURINDHA MAADHAR


மா தவம் புரிந்த மாதர்

“ஹலோ சாரதா ஹியர்”
“மேடம் வணக்கம், நாங்க பெண்மை மாத இதழ்லேர்ந்துஅழைக்கறோம்
“வணக்கம், சொல்லுங்க”
“முதல்ல எங்க பத்திரிக்கை சார்பில உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேடம்” என்றாள் அனு

“ஒ மிக்க நன்றி....ஆனா எதுக்கு?” என்றார் சாரதா
“உங்களுக்கு அகில இந்திய அளவில பெண் சாதனையாளர், “வுமன் அச்சீவர் ஆப் த இயர்னு” பட்டம் குடுத்திருக்காங்களே, அதுக்காகத்தான் மேடம்.”
“ஒ அப்படியா, எனக்கு இன்னும் இந்த செய்தி வரலைமா.... ரொம்ப நன்றி..... ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆனா இதுக்கு நான் தகுதியானவதானானு சந்தேகமா இருக்கு” என்றார் சாரதா
“என்ன மேடம் அப்படி சொல்லீட்டீங்க, உங்களுக்கில்லாம வேற யாருக்கு இந்தத் தகுதி இருக்க முடியும்.... உங்க அறிவு, திறமை, சேவை மனப்பான்மை, மட்டுமல்லாம நீங்க சகலகலாவல்லியா திகழறீங்க.... எல்லா துறையிலயும் சாதிக்கிறீங்க.... போதாதா என்ன”
“எனக்கு புகழ்ச்சி பிடிக்காது மா அனு” என்றார்.

“சரி மேடம், இனி பேசலை, ஒரு சின்ன ரிக்வெஸ்ட்” என்றாள் அனு
“என்ன சொல்லுங்களேன்?” என்றார்
“உங்களோட ஒரு சின்ன பேட்டி தேவை... இது உங்கள உலகுக்கு படம் பிடிச்சு காட்ட இல்லை, மற்ற பெண்களுக்கு உங்கள வழிகாட்டியா இருக்க உற்சாகப்படுத்தி ஊகுவிக்கத் தான் மேடம் பிளீஸ், மாட்டேன்னு சொல்லீடாதீங்க” என்றாள் அனு

“ம்ம் எனக்கு இந்த பேட்டிய எல்லாம் தந்து பழக்கம்மே இல்லையேமா” என்றார்.
“அதப்பத்தி நீங்க கவலையே படாதீங்க மேடம், ஒரு நாள் முழுவதும் உங்களோட நானும் எங்க காமிரமானும் இருக்க அனுமதி குடுங்க... அது போதும் மிச்சத்த நாங்க பாத்துக்குவோம்” என்றாள்.
“ஒரு நாள் முழுவதுமா?” என்றார் ஆச்சர்யத்துடன்.
“ஆமா மேடம், நீங்க என்ன செய்யறீங்க... எப்படி உங்களின் ஒரு தினம் கழியுதுனு வாசகர்களுக்கு காட்ட விரும்பறோம் அதான், ப்ளீஸ் மேடம்” என்றாள்.
“சரி வர்ற ஞாயிறு வாங்களேன்” என்றார்.
“ரொம்ப நன்றி மேடம்....எப்போ வரட்டும்?” என்றாள்.
“காலை ஆறு மணிக்குன்னு வெச்சுக்கலாமா?” என்றார்.
“கண்டிப்பா மேடம்” என்றாள். ஒகே என வைத்தார்.
‘என்ன, எனக்கு பட்டமா பரிசா... எப்படி.... இதெல்லாம்’ என மனம் சந்தோஷமும்பட்டது ஏதேதோ எண்ணங்களும் சுழன்றன.

அப்படியே தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டாள் சாரதா.
சாரதா எழுபது வயதை நெருங்கும் மாது....
கண் நிறைந்த கணவன் ஒரே ஆசை மகள் என அன்பான அளவான குடும்பம்...
‘இன்று இந்த பெரும் மறியாதையும் பட்டங்களும் வந்ததெப்படி... நான் இருந்த நிலை என்ன...’ என எண்ணி பார்த்தார்.

சாரதா ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை.... அவளை தொடர்ந்து ஐந்து தம்பிகளும் மூன்று தங்கைகளும் என மழலை பட்டாளமாக விளங்கியது வீடு.
எப்போதும் ஏதோ ஒரு பற்றாக்குறை என ஓடியது..... தந்தை நல்ல வேலையில் இருந்தும் தினசரி சோதனைகள் இருக்கத்தான் செய்தன.
அந்த சூழலில் வளர்ந்தும் சாரதா நன்றாக படித்தாள்.... முதன்மையாக வந்தாள்.... அவர்கள் வாழ்ந்து வந்தது நீலகிரி மலைத் தொடரில் உள்ள பகுதிகளில்..... அங்கே அவள் தந்தை முக்கிய கட்டுமான இஞ்சினியராக இருந்து அணைக்கட்டுகள் கட்டும் பொறுப்பை ஏற்று இருந்தார்.
படித்ததெல்லாம் அங்கே உள்ள சிறு ஊர் பள்ளிகளில் தான்.
பத்தாவது வந்ததும் போர்ட் தேர்வு என்பதால் அவள் தந்தை அவளை தனது அண்ணன் வீட்டில் சென்னையில் கொண்டு சேர்த்தார்.

பெரியமாவுக்கு அவளையும் அவளது குடும்பத்தையும் அறவே பிடிக்காது, கொடுமைகள் பல செய்து இன்னல்கள் பல தந்தாள் அவள்.
ஓயாது ஒழியாது அவளுக்கு வேலை வைத்தாள்.... காலை சமையலை முடித்த பின் ரெண்டு வாய் அள்ளி தின்றுவிட்டு பாவாடை தடுக்க பள்ளிக்கு ஓடுவாள் சாரதா.
சில சமயம் பாவடையில் முழங்கையில் என அப்பி இருக்கும் கரியை கண்டு, கூட படிக்கும் மாணவிகள் சிரிப்பர்.... அவளும் சிரித்து மழுப்பிவிடுவாள்.... கண்கள் குளம் கட்டும்.

பெரியம்மாவை கொண்டு பிறந்த அவரது மகளும் அவ்வண்ணமே, ஆனால் பெரியப்பாவும் அவரது இரு மகன்களும் சாரதாவின் மீது உயிரையே வைத்திருந்தனர் என்பது மட்டுமே ஆறுதல்.
பார்த்து பார்த்து இவளுக்கு என பெரியப்பா எது வாங்கி வந்தாலும் அது தாய் மகள் இருவரது கண்ணையும் கரிக்கும்..... பட்டுப் பாவாடை முதல் சாதா சீட்டி பாவாடை வரை இவளது புதுசுகளை தான் கட்டிய பின் தான் சாரதா கட்ட வேண்டும் என கட்டி வீணாக்குபவள் அவள் அக்கா.... இவளுக்கும் அது தவிர்க்கவோ தடுக்கவோ வழி இல்லாமல் தான் ஒப்புவாள்.

இத்தனைக்கிடையில் பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் செய்தாள் சாரதா.... மேலே கல்லூரி சென்று படித்து பட்டம் பெற கொள்ளை ஆசை.
கலர் கலர் உடை உடுத்தி அக்கா செல்வது போல தானும் கல்லூரி செல்ல விருப்பம்.... தந்தையிடம் முறையிட்டாள்.

“இல்லைமா உனக்கு பிறகு தம்பி தங்கைங்க இருக்காங்க, ஆம்பிளை பிள்ளைங்க படிச்சா குடும்பத்துக்கு நல்லது, அதுனால உன்னை மேலே படிக்க வைக்க என்னால முடியாது டா” என அன்பாகவே மறுத்துவிட்டார் அவர்.
அவரின் பேச்சை மீறி எதுவுமில்லை ஆகவே, கை வேலைகள், சமையல், தோட்டம், வீட்டை அலங்கரிப்பு செய்வது, தம்பி தங்கைகளை பார்த்து பேணுவது என தன் நேரத்தை நல்லபடி செலவிட்டுக்கொண்டாள் சாரதா.

தேர்வு முடிவுகள் வந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே “இன்னிக்கி மாலை உன்னை பொண்ணு பார்க்க வராங்க சாரு.... ரெடியா இரும்மா” என்றார் தந்தை.
‘என்னது இதுக்குள்ளவா, எனக்கா திருமணமா?’ எனும் வார்த்தைகள் வெளி வராமல் திகைப்பில் தொண்டையிலேயே நின்று போயின.
“என்னம்மா?” என்றாள்.
“ஒவ்வொருத்தரா நாங்க கரை ஏத்தினாதானே உண்டு மா, உனக்கு புரியாதா என்ன.... போ மா ரெடியாகு போ” என்றார் அன்னை நல்ல விதமாக எடுத்துச் சொல்லி.
புடவையே கட்டி அறியாதவள் தடுக்கி விழ சோளக்கொல்லை பொம்மை போல சேலை உடுத்தி நின்றாள்.
தாய் கொடுத்த காபி பலகாரதட்டுடன், வந்தவர் முன்னே சென்று நின்றாள்.
ஏறெடுத்து பார்க்கவும் பயம்.

“இங்க வா, உன் பேர் என்ன.... இப்படி வந்து எம்பக்கத்தில உக்காரு” என்றார் ஒரு மாது. தட்டை அனைவருக்கும் நீட்டிவிட்டு தந்தையை பார்வையால் சம்மதம் கேட்டபடி அவர் அருகிலே போய் அமர்ந்தாள்.
“சாரதா” என்றாள் மெல்ல.
“இதப் பாத்தியா இது என் அப்பா இது என் அம்மா, இது என் தம்பி, நான் அவனுடைய அக்கா, அவன நன்னா பாத்துக்கோ, அவன்தான் உன்னை பண்ணிக்கப் போறான்” என்றார். அவள் குனிந்தபடியே இருந்தாள்.
“தலையை நிமிர்ந்து பாரு” என்றார் சற்றே குரலில் அதட்டல்... குரலே அப்படிதானா என பயந்தபடி மெல்ல தலை நிமிர்ந்து அவனைக் கண்டாள்.
சந்தன நிற ஷர்ட், காபி பொடி கலர் பான்ட், கோல்ட்ரிம் கண்ணாடி...படிய வாரிய கிராப், என கண்ணை நிறைத்தான்..... அவனும் அவளை அந்த நொடியில் காண தலை கவிழ்ந்தாள்.
திரும்பி பார்ப்பதற்குள் நிச்சயமும் கல்யாணமும் நடந்து அவன் முன்னில் முதல் இரவு அறையில் இருந்தாள்

“உக்காரு, முதல்ல சிலது பேசலாம் என்ன” என்றான் அன்பாக.
‘ம்ம்’ என தலை ஆட்டினாள்க விழ்ந்தபடி.
“இப்படி தரைய பார்த்து மண்டைய ஆட்டினா எப்படி?” என சிரித்தான் ஷங்கர்.

அவள் வெட்கத்துடன் அவனை ஏறிட்டாள்.
“இப்போ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுத்து.... எங்காம் கொஞ்சம் முற்போக்கானது....உங்காம் கட்டுப்பெட்டின்னு சொல்ல வரலை..... ஆனாலும் உங்காத்து பேச்சு வழக்கு பழக்கம் எல்லாம் பார்க்கும்போது எனக்கு புரிஞ்சுது இது”

“நீ ஒரு ஆபிசரோட பெண்டாட்டி.... எங்க ஆபிஸ்காரா எல்லாம் சில சமயம் ஆத்துக்கு வருவா, நாம நாலு இடத்துக்கு போவோம், நீ இப்படி குனிஞ்ச தலையும் பழம் புடவையுமா கதவு பின்னாடி ஒளிஞ்சுண்டு நின்னா போறாது, எப்போதுமே பளிச்சுன்னு டிரஸ் பண்ணீண்டு நல்லபடி முன்னே வந்து எம்பக்கத்தில நின்னு எல்லாரோடவும் சகஜமா பேசணும் பழகணும்.... தினமும் ஆத்தில பேப்பர் வரும், படிச்சு உன் அங்கிலத்த இன்னமும் மேம்படுத்திக்கோ. உனக்கு கொஞ்சம் தெரியும்தான் ஆனாலும் இன்னமும் தெரிஞ்சுக்கோ”

“நாலு விதம் நன்னா சமைக்க புக்ஸ் வாங்கி தரேன், தினுசு தினுசா கத்துக்கோ, உனக்கு தெரிஞ்சபிடிச்ச எல்லா திறமைகளையும் நீ வளர்த்துக்கணும்..... என்னோட மனைவின்னு அந்தஸ்தோட மட்டுமில்லாம சாரதாவா நீ தலை நிமிர்ந்து உன் தனித்துவத்தோட நிற்கணும்” என்றான். அவன் சொல்ல சொல்ல அவள் கண்கள் அகல அவனையே பார்த்தாள்.
“என்ன, நான் ஏதானும் தப்பா சொன்னேன்னு உனக்கு தோணறதா?” என கேட்டான்.
இல்லை என தலையை அசைத்தாள்.
“பின்ன?” என்றான்.
“இந்த காலத்தில இப்படியும் ஒருத்தரா....பெண்டாட்டிய அடக்கி வைக்கறவா பத்திதான் நான் கேள்விப் பட்டிருக்கேன், அதான் ஆச்சர்யமா இருந்துது” என்றாள் கொஞ்சம் நாணியபடி.
“அடிசக்கை....இவளோ பேசத் தெரியுமா உனக்கு.,....அப்பறம் என்னவெல்லாம் தெரியும்?” என அங்கே அன்பின் அடிப்படையில் அன்று அப்படித் துவங்கியது அவர்களது அன்னியோன்னியமான தாம்பத்யம்.
நினைவுகளில் இருந்து மீண்டு லேசாக சிவந்து எழுந்தாள் சாரதா.

“என்னம்மா?” என்றார் ஷங்கர். “யாரு போன்ல?” என்றார்.
“ம்ம் ஆமா, எனக்கு என்னமோ பட்டம் குடுத்திருக்காளாம்.. அதுக்கு பேட்டி வேணும்னு” என்றாள்.
“பேஷ், கங்க்ராட்ஸ் மா” என்றார்.
ஒரு வயதுக்கு பின் மனைவியை தாயாக பார்த்து அம்மா வென அழைக்கும் சில ஆண்களில் அவரும் ஒருவர்.....அவளும் தான் “சங்கர்பா” என்றுதான் அவரை அழைப்பாள்.

ஞாயிறு காலை ஒரு எப்எம் ரேடியோவில் அவளது ப்ரோக்ராம் இருந்தது..... அதற்காக சனி இரவு பத்து மணி வரை கூட அமர்ந்து இணைய தளங்களில் இருந்து கருத்துக்கள் தேர்வு செய்துகொண்டு இருந்தாள் சாரதா.
“என்னம்மா பண்றே, இன்னும் தூங்கல, நாளைக்கு காலையிலேயே பேட்டி வேற இருக்கு போலிருக்கே.... உடம்பு கெட்டுடப் போறதுமா” என்றார்
“ஆமா, ஆனா ரேடியோ ப்ரோக்ராம் இருக்குங்க.... அதுக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் திரட்டிண்டு இருக்கேன்.... தோ வந்துடறேன் படுக்க வேண்டியதுதான்” என பதில் கூறினாள்.

காலை கண் விழித்து எழுந்து காலை கடன்களை முடித்து சுவாமிக்கு விளக்கேற்றி வணங்கி நாளை துவங்கினாள் சாரதா..... பாலை காய்ச்சி காபி போட்டு ஷங்கரை எழுப்பி இன்முகத்துடன் கொடுத்தாள்....தானும் குடித்தாள்....பின்னோடுபோய் குளித்து வந்து அழகிய ஜரியிட்ட பருத்தி புடவையை உடுத்தினாள்.... தலையை சுற்றி சிறு கொண்டையாக்கி அதில் ஒரு முழம் மல்லிகையை சூடினாள்..... நெற்றியில் இட்ட பெரிய வட்ட கும்குமபொட்டு..... காதிலும் மூக்கிலும் வைரங்கள் மினுங்க மஞ்சள் பூசிய முகம்.... வாய் ஓரம் அழகிய நிறைந்த சிரிப்பு.... கைகளில் எப்போதுமே சிவக்க இருக்கும் மருதாணி, என மங்களகரமாக தயார் ஆனாள்.

“வணக்கம் மேடம்” என வந்தாள் அனு. இவளைக் கண்டவளுக்கு உடனே விழுந்து வணங்கத் தோன்றியது.
“வாசு ஒரு ஸ்நாப்” என்றாள். அவனும் எடுத்தான்.
“நேரே துவங்கலாமா?” என ஆரம்பித்தனர்.

“இன்னிக்கி எப்எம் ல ஒரு ரேடியோ ப்ரோக்ராம் இருக்கு, அங்க போகணும்” என்றார் சாரதா.
“என் கூடவே என் கார்ல வந்துடுங்க” என தானே தன் இண்டிகாவை ஓட்டினார்.
அங்கே செல்ல, வணக்கங்கள் முடிந்து நிகழ்ச்சியத் துவங்கினார் தொகுப்பாளர்.

“இன்றைய சிறப்பு விருந்தினர் நமக்கு அசலே நன்கு அறிமுகம் ஆன சாரதா ஷங்கர் அவர்கள்..... நம்மோடு அவரின் எண்ணங்களை பகிர்ந்துகொள்வார்...... நாட்டுப்புற பாடல்களை பற்றிய உங்கள் கேள்விகளை இந்த எண்ணை அழைத்து அல்லது எஸ்எம்எஸ் அனுப்பி நீங்கள் கேட்கலாம்.”
சாரதா பேசத்துவங்கினார்.
“நாட்டுப்புற பாடல்கள் நம்ம கலாசாரத்தோட ஒன்றி போயிருக்கற ஒண்ணு, ஒரு குழந்தை பிறப்பில் இருந்து ஒரு சாவு விழுந்தது வரை நாட்டுப் பாடல்கள் இருக்கு.....கல்யாணமா, சீமந்தமா, கருமாதியா, காது குத்தலா.....கருணையை காதலா, காமமா, கனிவா, முரட்டுத்தனமா, கோபமா வீரமா... எதை எடுத்தாலும் அதில கிராமப்புறம் ரசம் சொட்ட பாடல்கள் நிரம்பி இருக்கு” என மேற்கோள் இட்டு காட்டினார்... பாடியும் காண்பித்தார்......

இப்படியாக ஒரு மணி நேரம் செல்ல, அங்கிருந்து நேரே சாய் பஜன் மண்டலிக்கு சென்றார்..... அங்கே அவரது பஜனை தோழிகளுடன் அமர்ந்து ஷிர்தி சாய் பாபா முன் சில கானங்கங்கள் எழுப்பினார்.
அது முடிந்து நேரே அரபிந்தோ அன்னையின் ஆசிரமத்திற்குச் சென்றார்..... அங்கே சென்று த்யானத்தில் அமர்ந்தார்..... அரை மணி கழிய பூ வைத்து வணங்கி எழுந்தார்.

வெளியே வந்தவர் நேரே வீட்டிற்கு வந்தார்..... கை கால் கழுவி சமையல் அறையில் நுழைந்தவர், சிற்றுண்டி சரியாக பதமாக சமைக்கப்பட்டுள்ளதா என ருசி பார்த்தார்.
“சாம்பார்ல உப்பு கூட இருக்கே சாந்தி” என மென்மையாக கூறி உடனே குளிர்சாதன பெட்டியில் இருந்த சப்பாத்தி மாவை ஒரு சிறு உருண்டை எடுத்து உருட்டி கொதிக்கும் சாம்பாரில் போட்டார்..... ஒரு கொதி வந்ததும் இரக்க, டேஸ்ட் சரியாக இருந்தது.

“இதெல்லாம் நீங்க உங்க டிவி ப்ரோக்ராம்ல சொல்லும் கிச்சன் டிப்ஸ் இல்லையா மேடம்?” என சிரித்தாள் அனு.
“ஆம் மா, தினமும் நாம நடத்தும் வாழ்க்கையில் சந்திக்கும் சில இடர்கள் இவை..... அதற்காக நாம கலவரப்பட வேண்டிய அவசியம் இல்லை..... வழி வழியா நம்ம அம்மா பாட்டி அத்தைனு நமக்கு சொல்லி குடுத்துட்டுப் போனதை தான் நாம பாலோ பண்றோம்” என சிரித்தார்.
“கணவருடனும் இவர்களுடனும் அளவாக சிற்றுண்டி உண்ட பின் “போலாமா?” என எழுந்தார்.

“உங்களுக்கு ஒய்வு தேவைனா நாங்க காத்திருப்போம் மேடம்” என்றாள் அனு.
“இல்லைமா போலாம்” என்றார் உற்சாகமாக.
சென்னையை தாண்டிச் சென்றது கார்..... இப்போது டிரைவர் வண்டியை செலுத்தினார்.... அங்கே இருந்த ஒரு ஆசிரமத்திற்குள் சென்று நின்றது வண்டி..... பின் டிக்கியிலிருந்து பழக்கூடைகள், மிட்டாய்கள், நிறைய சத்தான காய்கறிகள் என வெளியே எடுத்துச் சென்றான் டிரைவர்.

“இதெல்லாம் எங்க பார்ம்ஹவுசில விளையறது, அங்கே வீணாகறத இங்கே கொண்டு வார இறுதியில குடுத்துடுவேன்” என்றார்.
உள்ளே சென்று “என்ன அன்னம்மா, உன் பெண்ணுகிட்டேர்ந்து இன்னிக்கி போன் வந்துதா..... உன் பேரன் எப்படி இருக்கானாம்?” என விசாரித்தார்.
“என்னங்கய்யா சாரதி சர், உங்க மூட்டு வலி தேவலையா, நான் அந்தத் தைலம் தந்தேனே, அதை தடவறீங்கதானே?” என கேட்டாள்.

“அம்மா சாரதா மா” என சூழ்ந்து கொண்டனர்.....அனைவரது குசல விசாரிப்புகளையும் புலம்பல்களையும் பொறுமையாக கேட்டார் சமாதானமாக பேசினார் புன்சிரிப்புடன் அன்பாக அரவணைத்தார்.
ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து கிளம்பி நேரே வேறே ஒரு டிவிசானல் ஆபிசிற்கு சென்றது வண்டி.
‘சமையலில் இது புது வகை’ என நிகழ்ச்சி.... அதில் நார்த் இந்திய முறைப்படி செய்யும் ‘கோளா உருண்டை குழம்பை’ செய்முறை விளக்கம் செய்து காட்டினார் சாரதா.

அது முடிந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர்....
“உண்டுவிட்டு நீ கொஞ்சம் உக்கார்ந்து டிவி பாரு அனு....நான் அரை மாணீல வரேன்” என உள்ளே சென்றுவிட்டார்.
“என்னமா எப்படி போச்சு?” என்றார் ஷங்கர். அவருடன்தான் உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது....முடிந்தவரையிலும் அனைத்து வேளைகளும் அவருடனேயே காபி பலகாரம் சாப்பாடு உண்பது என்ற கொள்கையை கடைபிடித்தார் சாரதா

“நல்லா இருந்துதுங்க” என்றாள் அதே சிரிப்பு மாறாமல்.
“நம்ம அனிதா போன் ஏதானும் பண்ணாளா.... அஸ்வத்கு ஜுரம் குறஞ்சுதாமா, ஏதானும் சொன்னாளா?” எனக் கேட்டார்.
“ஆமா மா கூப்டா, நீ கவலைப்படுவேன்னு.....நிகழ்ச்சியில இருந்தா பேச முடியாதுனு மொபைல்ல கூப்பிடலைன்னா, ஜுரம் சரியா போச்சாம்....நல்லா விளையடறான்னு சொல்லச் சொன்னா மா” என்றார்.
“ஒ தாங்க்காட்” என படுக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
“இன்னிக்கி முதுகு கொஞ்சம் வலி” என்றார் செல்ல சிணுங்கலாக.
“ஆமா, ஓய்ச்சல் ஒழிவே இல்லாம உழைக்கிற, கொஞ்சம் ஸ்லொ பண்ணிக்கோ உன் காரியங்களனு நான் சொன்னா கேட்டாதானே” என்றார் ஆதுரமாக ஷங்கர்.
“அதெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை, இன்னிக்கி யோகா பண்ணி இருந்தா போயிருக்கும், அதுக்கு நேரமில்லை....அதுனாலதான்” என பாசத்துடன் அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். அவர் அவள் தலை கோதினார்.

கொஞ்சம் படுத்திருந்துவிட்டு எழுந்து தன்னை சீர் செய்துகொண்டு
“நான் கிளம்பட்டுமா?” என்றாள்.
“என்னமா, திரும்ப எங்கே?” என்றார்.
“எல்லாம் நம்ம ‘மகளிர் மட்டும்’ க்குதான்” என்றாள் சிரித்தபடி.
“ஓ, உன் செல்லப்பெண்கள கொஞ்ச போறியாக்கும்” என சிரித்தார். “ஆமா” என சிரித்தாள்.

நேரே அங்கே செல்ல, அந்த ‘மகளிர் மட்டும்’ சேவா சமூகத்தில் பல இள வயது பெண்கள், பாட்டு நாட்டியம், தையல், கம்ப்யுடர், ஆர்ட் வேலைகள், கைத் தொழில்கள் என கற்று வந்தனர்..... அவற்றை மேற்பார்வையிட்டார் சாரதா.
‘மேடம் இது... மேடம் அது’ என பெண்கள் முறையிட்டனர்....
“அம்மா அனுஷா, நான் சொன்ன இடத்துக்கு போனியா மா... என்ன சொன்னாங்க?” என கேட்டார். “ஆமா மா, போனேன்... வேலை கிடைச்சுடுத்து மா” என இவர் பாதம் பணிந்து வணங்கினாள்.
“ஓ நல்லது, என் கால்ல ஏம்மா?” என அணைத்துக்கொண்டார்.

அங்கே ஒரு மணி நேரம் கழிந்தது.
அங்கிருந்து நேரே வேறே டிவிசானல், அங்கே மகளிர் தினத்துக்காக என ஸ்பெஷல் ப்ரோக்ராம்.... அதில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை முன் வைத்தார்....
“நீயா நானானு கணவன் மனைவிக்குள்ள போட்டி பொறாமை வந்தா, அங்கே அன்னியோன்னியம் ஜன்னல் வழியா ஓடிப் போய்டும்..... விட்டுக் கொடுத்தல் ஒன்றுதான் வெகு நாள் வரை தாம்பத்தியத்தை காத்து நிற்கும்..... இதை ஒவ்வொரு பொண்ணும், படித்திருந்தாலும், சம்பாதிச்சாலும், புரிஞ்சு நடக்கணும்...... அதே போல ஆண்களும் பெண்ணை காலடியில் மிதிக்கும் மிதியடியாக நினைக்காமல் தன்னோடு சரி நிகர் சமானமாக நினைத்து எல்லாவற்றையும் பகிர்ந்துக்கணும்...... அவளை நல்ல அன்னையாக மனைவியாக மகளாக சிநேகிதியாக மந்திரியாக மரியாதை கொடுத்து நடத்தணும், அப்போ புரிதல் தானா ஏற்படும்” என்றார் முத்தாய்ப்பாக...... பலத்த கைதட்டலுக்கு நடுவில் விடை பெற்றார்.
அங்கிருந்து நேரே அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று அன்னையை கடல் ஓரக்கோவிலில் வணங்கி விட்டு சிறிது நேரம் தயானம் செய்ய அமர்ந்தார்.

அங்கேயே மண்டபத்தில் ஓரமாக அமர,
“என்ன அனு, எப்படி தோணிச்சு உனக்கு.....ஏதானும் கேட்கணும்னா கேக்கலாமே” என்றாள்.
“பிரமிப்பா இருக்கு மேடம்” என்றாள் அனு நிஜமாகவே திகைத்து.

“மேடம் தப்பா நினைக்கலேன்னா சில கேள்விகள்” என்றாள்.
“ஷ்யூர் கேளு” என்றார்
“உங்களுக்கு எழுபதை நெருங்கும் வயசுன்னு...” என தயங்கினாள்.
“ஆமா அறுபத்தி ஒன்பதாகுது எனக்கு” என்றார்.
“இந்த வயசில இந்த எனர்ஜி, இந்தப் புத்துணற்ச்சியுடன் சிரித்த முகம், இப்படி ஓடி ஆடி திரிந்து எல்லாவற்றிலும் கை தேர்ந்து... எப்படி மேடம்?” என்றாள்

“சிம்பிள், வாழ்க்கையை நல்லபடி கற்று தேர்ந்து, அதனை ஒரு கிரமசிக்ஷனை பிரகாரம் வாழறேன்...அதுனாலனு சொல்லலாம்.... ஆனால் முதல் முக்கிய காரணம் என் கணவர்”

“பெரிய குடும்பத்து மூத்த பெண்ணாக பிறந்து, ஆசைப்பட்டும் மேலே படிக்கச் முடியாமல் போய் திருமணமாகி வந்தவள் நான்... என்னை மேலே படிக்க ஊக்குவித்தார்.....பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணி நாலு பேரோட சகஜமா பேசறது பழகறது எப்படின்னு கத்து குடுத்தார்......ப்ரைவேட்டா டிக்ரீ படிச்சு தேர்ந்தேன்...... சிறு தொழில் கை தொழில் முன்னேற்றம் பத்தி தீசிஸ் பண்ணினேன்..... மகளிர் சுய வாய்ப்பு குழு அமைத்தேன்......”

“கைவிடப்பட்டோருக்காக நடத்தப்படும் ஆசிரமங்கள் பலதும் நல்லபடி நடப்பதில்லை, அதை அவ்வப்போது சென்று பார்த்து கை கொடுக்க நேரம் ஒதுக்கினேன்..... நம்ம கண் பார்வையில தவறு நடக்காது பாரு, அதான்...... இதற்கு அத்தனைக்கும் என் அன்பான கணவர் கூடவே நடந்தார்....”

“எப்போ வேணுமோ அப்போ பக்கபலமா இருந்தார், பெரும்பாலான நேரங்கள்ள, நான் விழுந்தால் தாங்கும் வகையில் என் பின்னே நின்றார்...... பல விஷயங்களில் என்னை உற்சாகப்படுத்தி சாதிக்க வைக்க முன் உதாரணமா முன்னே இருந்தார்...... எனக்குள்ளே எப்போதுமே இருந்து என்னை எல்லாவற்றிலும் சிறக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்...அவ்வளவே” என்றார் வெள்ளைச் சிரிப்புடன்.

“களைப்பே இல்லாம ஆரோக்கியமா இந்த வயசில..?” என்றாள் அனு.
“ம்ம், அளவான சாப்பாடு... சத்தான சாப்பாடு.... நிறைய காய் பழங்கள் பால் கீரை வகைகள் தானியங்கள், அளவான உப்பு சர்க்கரை எண்ணை...... போதததற்கு யோகா, தியானம், ஆர்ட் ஆப் லிவிங் போன்றவை...... மனசுக்கு பிடித்தமானத செய்ய முயலும்போது அதற்குண்டான உற்காகம் தானே வந்துடும் அனு..... கூட மனதுக்கு இனிமையானவர் துணையிருக்க புரிந்த மனதுடன் சேர்ந்து நடக்க, வாழ்க்கை பாதை இலகுவாகுது....”

“எல்லாருக்கும் இப்படி அமையுமா என்றால், ஒரு வேளை இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த புரிதலையும் அன்பையும் நாம்தான் கை நீட்டி வரவேற்று ஏற்றுகொள்ளணும், தானா வராது மா..... உனக்குக் கல்யாணம் ஆனாலும் நீ இதை ஞாபகம் வெச்சு நடக்கணும்” என்றார் அன்பாக.

“உங்க மகள் பற்றி...?” என்றாள்.
“எங்க இனிய தாம்பத்தியத்தின் முத்து, எங்கள் மகள், அனுஷா......நல்லா படிச்சு வேலைக்கு போய்கிட்டு, மணமாகி கணவனுடன் அன்பாக மும்பையில குடித்தனம் பண்ணுகிறா, நல்ல பண்பான அன்பான மருமகன் சந்தர்... எங்களுக்கு ஒரு பேரப் பிள்ளை அச்வத்தும் உண்டு, சுட்டி பயல்..... எங்கள் கண்ணின் மணி போன்றவன்” என்றார்.

“இன்னும் ஏதேனும்?” என்றார்.
“உங்க ஆசிகள் மட்டுமே மேடம்” என வணங்கினாள்.
“காட் ப்லெஸ்யு மை சைல்ட்” என்றார் மனதார.
“கிளம்பலாமா?” என எழுந்தார்.

பிரமிப்பு மாறாமல் அனு விடை பெற்றாள்.
வீட்டை அடைந்த சாரதா ஓய்வாக சோபாவில் அமர்ந்திருந்த சங்கரிடம் வந்து அருகே அமர்ந்தாள். “என்னம்மா ஆச்சா எல்லாம்?” என்றார்.
“ஆமா, இனி என் நேரம் எல்லாம் உங்களுக்க மட்டுமே” என்றாள் அவர் கன்னத்தை கையால் தடவி. அவர் தன் கையால் அவள் தோள்களை அணைத்துக்கொண்டார்.
“இன்னிக்கி என்னாச்சு தெரியுமா” என அவர் அவரின் நாள் எப்படிச் சென்றது என்பதை அவளுடன் பகிரத் துவங்கினார்..... அவளும் ஆர்வத்துடன் அதை கேட்டுக்கொண்டாள்.
அங்கே அவர்களின் இனிய தாம்பத்தியத்திற்குள் இனி நாம் இருப்பது நமக்கு கவுரவம் அல்ல அல்லவா.....கிளம்புவோமா அன்பு நட்புகளே...
வணக்கம்





6 comments:

  1. சிறப்பான பகிர்வு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. Excellent write up of companionship and key to success in a woman's life. KalakkiteaL!

    ReplyDelete