Friday, 14 February 2020

MANGALAM MAMI - 2 - Kadhalar Dhina Special


மங்களம் மாமி – 2
கால் நீட்டி வசதியாக ஊஞ்சலில் அமர்ந்தபடி பவழமல்லி தொடுத்து கொண்டிருந்தாள் மங்களம். அந்த பூவின் அழகு, அதன் ரம்மியமான மணம் மயக்கும் வாசம் அவரையும் மீறி அவரை கொள்ளைகொண்டது. ‘சுவாமிக்கு போடற பூவை முகர்ந்து பார்க்கப்டாது, தலையில் சூட்டி அழகு பார்க்கப்டாதுனு சொல்லுவா, ஆனா இதன் மணம் தானாவே வந்து மூக்கினுள்ளே நுழைந்து என்னுளே வ்யாபிக்கறதே...’ என வியந்தபடி தொடுத்தார். அந்த சின்னஞ்சிறு பூவின் கொள்ளை அழகு அதன் ஆரேஞ் நிற சிறு காம்பு ஆஹா. கோர்த்து மாலையாக்கி சுவாமி படங்களுக்கு போட தயாராக்கிக்கொண்டிருந்தாள்.
கூடவே செம்பருத்தி, அரளி, ஜாதி, நந்தியாவட்டை கனகாம்பரம் என முறம் நிறைய பூக்கள் சிரித்தன. அவற்றின் அழகும் சுகந்தமும் மனதை மயக்க மனம் எங்கோ சல்லாபித்தது.
அவளுக்கு பன்னிரண்டு வயதில் திருமணம். எப்போதுமே பூரண பெண்மைத்தனம் நிரம்பியவளாக வளர்ந்தவள் மங்களம். தலை நிறைய பூ, புன்சிரிப்பு, மருதாணி, நீண்ட தலை பின்னல், நீண்ட கருவிழிகளில் கண்மை, அகன்ற நெற்றியில் சிறிய திலகம் என வளைய வருபவள். தங்கம் என்றில்லாவிடினும் கை நிறைய கண்ணாடி வளையல்கள் கழுத்தில் ஏதோ ஒரு மணிமாலை காதுகளில் ஜிமிக்கி என இருப்பாள். அலங்கார பூஷிதை என்பார்கள் அது போல சித்தாடை கட்டிய பாலாதிருபுரசுந்தரி தான்.
அவளை முதன் முதலில் பெண் பார்க்க வந்ததே வைதீஸ்வரந்தான். பதினெட்டே வயது. சங்கோஜமாக ஒரு மூலை நாற்காலியில் ஒடுங்கி பவ்யமாக அமர்ந்திருந்தான். நெற்றியில் மூன்றாம் பிறையாக சந்தன தீற்றல். பிரகாசமான கண்கள். காபிப்பொடி கலர் பான்ட் சந்தன நிற சட்டை. படிய வாரிய கிராப். அவள் காபியுடன் தடுமாறி முன்னே நடந்தாள். பாவாடை தாவணியில் இருந்தாள். ஆழ் நீல பட்டு பாவாடையில் அரக்கு நிற பார்டர் அரக்கு தாவணி நீலநிற ப்ளவுஸ். ஜிமிக்கி காதில் ஆட குஞ்சலம் பின்னே ஆட, கொலுசு சத்தம் சன்னமாக கிணுகிணுக்க மென் நடையில் வந்து காபி கொடுத்தாள். எங்கே கொட்டி விடுவாளோ என அவள் தாய் இரண்டிரண்டாக கொடுத்து விட்டார்.
கொடுத்துவிட்டு பாயில் அன்னையின் அருகே சென்று அமர்ந்தாள். “ஏதானும் பாடுடீம்மா கொழந்தே” என்றார் அவள் வருங்கால மாமியார். அவள் திகிலாக அன்னையை காண... “என்ன பயம், பாடு... ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடு” என்று ஊக்குவித்தார். “சின்னசிறு பெண்போலே பாடறேனே?” என அவர் காதோரம் கூறினாள். சரி என்றார் அவரும்.
இவளும் மெல்லிய குரலில் அதிராமல் ஆனால் தேனாக பாடினாள். கேட்ட அனைவருக்கும் கண்முன்னே சித்தாடை இடையணிந்த அந்த ஸ்ரீதுர்கை சிரித்திருந்தாள். பரவசமாகினர். ரசித்து லயித்து போனான் வைத்தி.
“என்னடா, உனக்கு ஓக்கேவா?” என கேட்டனர். அவன் மெளனமாக தலை குனிந்து புன்னகைதான்.
“மாப்ள ரொம்ப அடக்கம், கூச்சம்” என்று பேசிக்கொண்டனர்.
“இங்கேதான் இப்படி... காலேஜ்ல கேளுங்கோ இவனப்பத்தி, பெரிய பேச்சாளனாக்கும்” என்று சிலாகித்தனர்.
போய் தகவல் சொல்கிறோம் என்ற அனாவசிய பந்தா இல்லாமல் “நிச்சயத்துக்கு நாள் பார்த்துட்டு சொல்றோம். ரொம்ப திருப்தி. கொழந்தைக்கு நீங்க என்ன பண்ணணுமோ அத போடுங்கோ போறும்” என சென்றுவிட்டனர். ஆத்தில எல்லாருக்குமே ஏக திருப்தி சந்தோஷம். நல்ல வரன் சட்டென அமைந்ததில்.
நிச்சயம் நடந்தது. இந்தக் காலம் போல பெண்ணை அழைத்துப் போவது வழக்கமில்லை. குடும்பத்து பெரியோர்கள் போய் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.
கல்யாண வேலைகள் ஜரூராக நடந்தது. ஆத்து வாசல்ல தெருவையே அடைத்து பந்தல் போடப்பட்டது. பக்கவாட்டில மண்டபம் மேடை அலங்காரம். மாவிலையும் பட்டு துணியும்தான் அந்த கால அலங்காரம் வேறென்ன.... இவள் அப்பா, முதன் முதலில் இவளது கல்யாணத்திற்கு என, கலர் சீரியல் பல்ப் போட வைத்தார். ஊரே வேடிக்கை பார்த்தது அந்த வண்ண வண்ண விளக்குகள் அணைந்து எரிவதை.
நாலு நாள் கல்யாணம். பிள்ளை வீட்டினர் வந்து தங்க தனியாக பக்கத்து தெருவில் அவாளுக்கு ஜாகை. அவாளுக்கு குறையில்லாம கவனிக்க தனியா ரெண்டு மனுஷா. மச்சினன் பாலு கூட இருந்து கை கொடுத்தான் நாணாவுக்கு. மைத்துனனாயிற்றே.
விரதம், ஜானவாசம், பொண்ணழைப்பு எல்லாம் தடபுடலாக நடந்தது. மருதோன்றிய விரல்களும் செம்மை ஏறிய கன்னங்களும் சிவந்த உதடுகளும் கண்மை நீட்டிய கருவண்டு கண்களுமாக அரக்கு வண்ண கூரை பொடவையை கட்டிக்கொண்டு பொன் பொதியாக பொம்மை போல தன் தந்தையின் மடியில் வந்தமர்ந்தாள் மங்களம். அந்த ஒன்பது கெஜ மடிசாத்து பொடவையை அந்த சிறு இடையாளுக்கு, குழந்தை பெண்ணிற்கு கட்டுவதற்குள் வியர்த்துதான் போனது வீட்டு பெண்டிருக்கு.
“பபூன் மாதிரி இருந்தே” என பின்னாளில் கிண்டலடித்தார் வைத்தீ.
மங்கள நாண் கட்டி அவளை சாஸ்வதமாக தனதாக்கி கொண்டான் வைத்தி.
மங்களம் உடனேயே புக்காம் போய்விட்டாள்.
“ஒண்ணுமே தெரியாது, கொழந்தே அவோ.... மாமி, ஏதானும் தப்பு பண்ணின... பேசினா மன்னிச்சுடுங்கோ” என சம்பந்தி மாமியின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள் மங்களத்தின் அன்னை காமாக்ஷி.
“என்ன மன்னி நீங்க, இத சொல்லணுமா என்ன.... எனக்கும் ரெண்டு பொண்கள் இருக்கா. அவ பாட்டுக்கு ஜம்முனு இருப்போ அவாளோட பழகீண்டு.
மெல்ல மெல்ல தானே கத்துப்போ. இல்லேனா நான் எதுக்கு இருக்கேன், கத்து குடுத்துக்கறேன். கவலைய விடுங்கோ. எம்மாட்டுபொண்ணுக்கு என்ன... ஜாம் ஜாம்னு குடித்தனம் பண்ணுவோ.... நீங்களே பார்க்கதானே போறேள்” என மங்களத்தின் முகம் வழித்தார் மாமியார்.
மாட்டு வண்டியில் வைத்தியுடன் நாத்தனார் இருவருடனும் ஏறி அமர்ந்து பக்கத்து ஊர் பிரயாணம்.
அங்கே சென்று மெல்ல மெல்ல தட்டு தடுமாறி குடித்தனம். தாம்பத்தியம் என்றால் என்னவென்றே தெரியாத சிறு பெண்.
வைத்தியும் அறியாதவன்தான். சேர்ந்தே இயற்கையுடன் கைகோர்த்து கற்று தேர்ந்தனர்.
முதல் இரவன்று அவளை பால் சொம்புடன் உள்ளே விட்டு கதவடைக்க. “ஐயோ, கதவ பூட்டாதீங்கோ நேக்கு பயம்” என்று தீனமாக குரல் கொடுத்தாள் குழந்தை.
“எதுக்கு பயம், நான் இருக்கேனோல்லியோ. வா இங்க வந்து உக்காரு” என பக்குவமாக பேசி அழைத்து வந்தான் வைத்தீ.
“மாமி, இல்ல இல்ல, அம்மா இத உன்.. உங்க... கிட்ட குடுக்க சொன்னா” என ஓளறிகொட்டி கிளறி மூடினாள். அவன் புன்னகைத்தான்.
“அம்மானே சொல்லு. மாமி வேண்டாம். இனி எங்கம்மா உனக்கும் அம்மாதானே...” என்றான் தலை சாய்த்து.
“ஆமாம் எங்கம்மா சொன்னா” என்றாள்.
“என்னை, நீங்கனு சொல்லு, நீன்னு சொன்னா எனக்கொண்ணும் இல்லை, பார்க்கறவா உன்னை தப்பா நெனச்சுப்பா இல்லியா... அதான் சொன்னேன்“ என்றான்.
“ம்ம் சரி” என்று மண்டையை ஆட்டினாள். கூடவே ஜிமிக்கி ஆடியது.
“உக்காரு” என்றதும் எம்பி படுக்கை மேலே ஏறினாள்.
“அச்சிச்சோ” என மருதோன்றிய கைகளால் வாய்பொத்தி மீண்டும் கீழே குதித்தாள்.
“என்னாச்சு?” என்றான்
“இல்ல, உங்கள நமஸ்கரிக்கணும், பால் குடுத்துட்டு தான் உக்காரலாம்னு அம்மா சொன்னா” என்றாள். அவனை குனிந்து நமஸ்கரிக்க போனாள். “போறும் போறும். இதெல்லாம் வேண்டாம். நான் என்ன சாமியா என்ன. பெரியவாளுக்கு பண்ணினா போறும்” என தூக்கி நிறுத்தினான்.
முதல் ஸ்பரிசம். அவன் கை பிடித்த இடத்தில ஏதோ செய்தததோ, ஏதோ தோன்றியதோ, ஏதோ சொல்லொணா உணர்வு அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. ‘இன்னொரு ஆண் அவளை தொடுவதாவது...’ என கொஞ்சம் வியர்த்தது. அவன் கைகளை தன் கையிலிருந்து எடுத்துவிட முயன்றாள்.
“என்னாச்சு, நான் ஒன்ன தொடப்டாதா?” என்றான் சிறு சிரிப்புடன்.
“தொடலாமா... மத்த ஆம்பளேல் யாரையும் தொடவிடப்டாதுன்னு அம்மா சொல்லி இருக்காளே...” என்றாள் வெகுளியாக.
அவன் கடகடவென சிரித்தான். அவளுக்கு சிரிக்கணுமா இல்லை ஏதானும் தவறாக சொல்லிவிட்டோமா என உணர முடியவில்லை.
“மத்தவாளும் நானும் ஒண்ணா, நான் நோக்கு தாலி கட்டி இருக்கேனோல்லியோ, நான் ஒன்னோட ஆம்படையான் இல்லியா மங்களம்?” என்றான்.
“ஆமா” என்று குனிந்து மாங்கல்யத்தை எடுத்து தொட்டு தடவி பார்த்து புன்னகைத்தாள்.
“அத விடு. இந்தா இந்த பால குடி” என அவன் கொஞ்சம் விட்டு குடித்துவிட்டு அவளிடம் தந்தான்.
“அச்சிச்சோ” என்றாள் மீண்டும்
“இப்போ என்ன?”
“இல்லே, நாந்தான் பாலவிட்டு தரணும்னு அம்மா...” என்று கையை பின்னே காண்பித்து அவன் சிரித்த முகத்தை பார்த்து பாதியில் நிறுத்தினாள்.
“நீ கீல் குடுத்த பொம்மை இல்லை மங்கா. ஒரு மனுஷி. அம்மா சொன்னத எல்லாம் கேட்டுக்கணும்தான். ஆனா எதெது எந்த நேரத்தில எப்படி நடந்துக்கணுமோ அப்படி, மத்தவாளுக்கு மரியாதை குறைவில்லாமைக்கு, ஆனா உன் மனசு சொல்றபடி நீ செய்யலாம் நடந்துக்கலாம்... புரியறதா நான் சொல்றது?” என்றான் வாஞ்சையாக.
“ம்ம்” என மண்டையை ஆட்டினாள். பாதியும் புரியவில்லை என்பதை அவள் மருண்ட கண்கள் கூறின.
“இந்த மருதாணி யாரு வெச்சுவிட்டா.... கல்யாண புடவையில நோக்கு எந்த வண்ணம் ரொம்ப பிடிச்சுது..... என்னை பார்த்தியோ. எந்த டிரஸ் நேக்கு நன்னா இருந்துது?” என பல பொது கேள்விகள் கேட்டு அவளை சகஜமாக்கினான்.
அவள் முணுமுணுப்பாக ஆனால் கண்கள் அகல ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்தாள். அவள் கண்னில் தூக்கம் சொக்குவதை கண்டான். அவனுக்குமே அயர்ச்சியாக இருந்ததுதான்.
“சரி படுத்துக்கோ” என்றான்.
‘குழந்தையுடன் போய் என்னத்த...’ எனத் தோன்றியது
வருடம் திரும்புவதற்குள் வைத்தியை அவளும், அவளை அவனும் மிக நன்றாக உணர்ந்திருந்தனர். கணவன் என்ற மகத்துவத்தை அறியாவிடினும், ‘இவன் என் உற்ற தோழன், துணைவன், என் நலன் காப்பவன், எனக்கு நல்லதை சொல்பவன், செய்பவன்’ என்ற கருத்து மிக ஆழமாக அவள் மனதில் ஏறி அமர்ந்தது.
‘இனி எனக்கு எல்லாமே இவன்தான்’ என்ற ஒட்டுதல் மிக கெட்டியாக உறுதிபட்டுப்போனது அந்த பிஞ்சு உள்ளத்தில். அதன் பலனாய் அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்றாள். அவனது பெற்றோர் கூட பிறந்தோர் என்பதால் அவர்களும் அவளுக்கு பிரியமானவர்களாகிப் போயினர்.
அம்மா அப்பா நினவு வரும்தான் வைத்தியிடம் தனிமையில் கூறுவாள். “ஏன்னா” என அழைக்க கற்றிருந்தாள்.
இப்போது நினைத்தாலும் சிரித்து புரைக்கேறியது மங்களத்திற்கு.
அந்நாளில் ஒரு நாள், ஏதோ பேச்சு வாக்கில், நல்ல காலத்திற்கு தங்கள் அறையில்தான், பேசும்போது “அப்பிடி இல்லடா வைத்தீ” என்றாளே பார்க்கணும்.
ஸ்தம்பித்து நின்று பின் கடகடவென சிரித்து தீர்த்தான் வைத்தீ.
“ஐயய்யோ மன்னிச்சுடுங்கோ மன்னிச்சுடுங்கோ நா” என் வாய் பொத்தி கண்ணில் நீர் நிறைய அப்படியே ஸ்தம்பித்து போனாள் மங்களம்.
“இப்போ என்னவாயிடுத்து இத்தனை கலங்கற மங்களம். விடும்மா, இதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நிஜத்தில் அழகா இருந்துது நீ சொன்னது. எனக்கு ரொம்ப பிடிச்சுது.... இன்னொரு தரம் கூப்புடுடி” என அருகே வந்து அவள் மோவையை பிடித்து கெஞ்சினான் கண்களில் குறும்பு கூத்தாட.
“ராம ராமா, மானமே போச்சு... போங்கோன்னா” என வெட்கமும் வேதனையுமாக ஓடியே விட்டாள் மங்களம்.
வீட்டு வேலைகள் பொறுப்புகள்.... தான் அதில் செய்ய வேண்டியவை.... குடும்பத்தாருடனான உறவுகள், பணிவிடைகள் என ஒவ்வொன்றாய் வேகமாக கற்று தேர்ந்தாள் மங்களம்.
நாள் கணக்கு மாதங்களாகி வருடத்தை நெருங்க, எப்போதோ இயற்கை தன் பணியை செவ்வனே செய்தது.
தெரிந்து தெரியாமல் தடுக்கி தடுமாறி நிகழ வேண்டியவை இனிதே நடந்தேறியது. பலன் மங்களம் தன் பதினான்காம் வயதில் முதல் குழந்தை உண்டானாள். அவளுக்கு என்ன தெரியும் கணக்கும் கர்ப்பமும் மாமியார் தான் அவளை கண்டுபிடித்து கேட்டார்.
“ஏண்டீ மங்கா, என்னாச்சு, இந்த மாசம் இன்னும் ஆகலை போலிருக்கே...?” என. அப்போதுதான் அவளுமே அதை உணர்ந்தாள்.
“ஆமாம் போலிருக்கு மா” என்றாள்.
“ஆமாம் போலிருக்கு மா வா.... நன்ன்ன்னா இருக்கு.... என்னடி ஏதானும் விசேஷம் வெச்சிருக்கியோ?” என அவள் பளபளத்த முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். ஏதோ சந்தேகம் தோன்றியது.
பின்னோடு அந்த ஊர் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து அவளை பரிசோதிக்க வைத்தார். அவர் நாடி பிடித்து, “ரெட்ட நாடி பளிச்சுன்னு விளங்குதுங்களே, வம்ஸவ்ருத்திதான்.... சந்தோஷமா?” என சிரித்துவிட்டு தக்ஷணை வாங்கிக்கொண்டு கிளம்பினார். அனைவருக்கும் ரொம்ப சந்தோஷம். மங்களத்தின் தாய் வீட்டிற்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டது.
“வாடா வைத்தீ, உன் ஆம்படையா குளிக்காம இருக்காடா... சந்தோஷமா” என கிண்டலடித்தனர். அவன் உள்ளுக்குள்ளே பரவசமானான். புன்னகைத்தான். அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.
அன்று இரவு வைத்தீ அவள் கைகளை பிடித்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். “நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா... நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா வரப்போறது” என சந்தோஷித்தான். பிள்ளை உண்டானதும் அதன் முக்கியத்துவமும் தெரியாவிடினும், தன் மனதுக்கு ஆப்தனை மகிழ்வித்தோம் என புரிந்து அவளும் புளங்காகிதம் அடைந்தாள். வெட்கம் தானே ஏறி கன்னத்தில் செம்மை சூடிக்கொண்டது. தலை கவிழ்ந்தாள்.
“நோக்கு பொண்ணு வேணுமா புள்ளை வேணுமா மங்களம்?” என்றான்.
“உங்களுக்கு?” என்றாள் வெட்கத்துடன்.
“நேக்கு பெண் குழந்தை வேணும்னு இருக்கு.... பகவான் சங்கல்பம் என்னவோ பார்போம்” என்றான்.
கண்கள் அகல “பெண் தான் வேணும்னு நேக்கும் தோணித்து.... அழகழகா அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம். பொண்ணுதான் என்னிக்குமே நல்லது ஆத்துக்கு.
‘சமுத்து என்னத்த பெத்தா தலைச்சன் பொண்ண பெத்தான்னு’ எங்கம்மா என்னைப் பார்த்து சொல்லீண்டே இருப்போ” என்றாள் கண்களில் கனவுகளுடன்.
பின்னோடு பக்ஷணங்கள் செய்து எடுத்துக்கொண்டு விசாரிக்க வந்தனர் நாணா காமாக்ஷி தம்பதியினர். நாள் பார்த்து மசக்கைக்கு அழைத்துச் சென்றனர்.
பெரியோர் முதலில் ஆண் வாரிசு வேண்டும் குலம் விளங்கணும் என கணக்கு போட்டனர்.
இறைவன் அவர்களுக்கு செவி சாய்த்தான் போல, ஆண் தான் முதலில் பிறந்தது.
பூச்சூட்டல் முடிந்து இதே போல கால் நீட்டி அமர்ந்து, ஒரு மாலை, பூ தொடுத்த ஞாபகம் இப்போது வந்தது மங்களத்திற்கு.
யோசனையில் பூரித்திருந்தவளை திடுக்கிட வைத்தது அவர் குரல்..,
“என்ன... என்ன யோசனை மங்களம்?” என்றபடி உள்ளே நுழைந்த வைத்தி குரல் கேட்டு, “வந்துட்டேளா?” என சட்டென இறங்கினாள் ஊஞ்சலைவிட்டு. பூக்கள் தெறித்து சிதறின.
“என்ன என்ன அவசரம், நான்தானே வந்தேன்... எதுக்கு இப்படி அவசரமா எழுந்துப்பானேன். இத்தனை வயசுக்கு நீ மாறலை மங்கா.”
“சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ தேவி?” என கைநிறைய அள்ளிய ஜாதி மல்லியை முகர்ந்தார். அவள் முகம் அருகே வந்து கையில் இருந்த பூவை ஊதினார். அவள் முகம் தலை எங்கும் ஜாதி மல்லி பறந்து விழுந்தது.
“போறுமே, என்ன இது யாரானும் பார்க்கப் போறா...” என வெட்கம் முகம் மலர கன்னம் சிவக்க, கூச்சமும் பயமும் போட்டி போட சிலிர்த்தாள் மங்களம்.
அவரை நிமிர்ந்து பார்த்தாள் ஒரு நொடி, பின் தலையை குனிந்து கொண்டாள். தன் சட்ட ஆபீஸ் சென்று வந்ததால் வெள்ளை பான்ட் ஷர்ட், அதன்மேல் கருப்பு கோட் அணிந்து ராஜா போல ஆஜானுபாகுவாக நின்றார். பளீரென்ற முகம் தீஷிண்யமான கண்கள். கூரான நாசி. நெற்றியில் பட்டையான விபூதி. சாக்ஷாத் சுந்தரேஸ்வரர் தான் எனத் தோன்ற வைத்தது.
அதே நேரம் இவளை ஆழ்ந்து கண்ட வைத்தி, “சும்மா சொல்லப்டாதுடீ மங்களம், இந்த வயசிலும் நீ ஆனாலும் அழகுதான். அந்த வெக்க சிவப்ப பாரு...” என அவள் சிவந்த கன்னத்தை தீண்டினார்.
“போங்கோ நா” என வெட்கம் மிகுந்து அவர் மார்பிலேயே தலை கவிழ்ந்தாள் மங்களம்.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.






Thursday, 6 February 2020

MANGALAM MAMI - 1


மங்களம் மாமி 1
சுவர் கோழி ஒரு புறம் கூவ, இப்போதே கூவிடலாமா வேண்டாமா என மெல்ல சோம்பல் முறித்தபடி மெல்லிய குரல் எழுப்பும் சேவல் ஒரு புறம்... ம்ம்மா என அதிகாலை அழைப்பாக பாலுக்கு அழும் கன்றின் குரல் ஒரு பக்கம், இதோ பொழுது இனிதே விடியப் போகிறது.

இன்று தானே முஹூர்த்தம் என அந்த ஆக்ரஹாரத்து பெண்கள் எல்லாம் மளமளவென எழுந்து அவரவர் ஆத்து தினப்படி காரியங்களை காலை கடன்களை முடிக்க ஓடுகின்றனர். 
“வேளையோட கெளம்பி விடீகார்தால வந்துருங்கோடி” என மாமி ஆணை, செல்ல ஆணை. மீர முடியுமோ.

பலருக்கு பெரியம்மா, சிலருக்கு மன்னி, அக்கா, மாமி. சிறிய வயதினருக்கு குழந்தைகளுக்கு பாட்டி. 
அந்த ஆக்ரஹாரமே கொண்டாடும் மங்களம் வைதீஸ்வரன் தம்பதியினரின் அறுபதாம் கல்யாண முகூர்த்தமாக்கும் இன்னிக்கி.


ஆத்து பொண்டுகளில் வயது முதிர்ந்தோர் சிலர் மங்களத்திற்கு நலங்கு வைத்தனர். மருதாணியில் சிவந்த பாதங்களும் கைகளும் மேலும் மங்களமாக திகழ்ந்தது. மாமி குளித்து வர, அவரே பாங்காக மடிசாரு கட்டிக்கொண்டார். மரகத பச்சையில் மாம்பழ கலர் பார்டர் மிளிர்ந்தது. தலை துவாலையை அவிழ்த்து கூட இருந்தோர் அழுந்த துடைத்தனர். ஒருத்தி அதற்குள் புகைய புகைய அந்த அதிகாலையில் சாம்பிராணி கொண்டு வந்தாள்.

“என்னத்துக்குடீமா இப்படி அவஸ்த படுத்திக்கறேள்... தினமும் நான் தலைக்கு விட்டுக்கறதுதானே....” என்றார் மாமி செல்ல கோபமாக.
“ஒரு அவஸ்தையுமில்லை அவ செரியாதான் செய்யறா, நீ பொண்ணா லக்ஷணமா இன்னிக்கி வாயே தெறக்காம இரு மங்கா” என அதட்டல் விழுந்தது. மங்களத்தின் நாத்தனார் தான்.
“நீ ஒண்ணும் சித்தாடை கட்டீண்ட சின்ன பொண் இல்லை, இன்னிக்கி, இப்போ ஒரு தரம், பின்னோட அபிஷேகத்துக்கு ஒருதரம்னு தலைக்கு விட்டுக்கணும், ஈரம் அடிதலையில நின்னு போய் வலி தலை தெறிக்கும் ஹோமத்தில உட்கார முடியாது”  
அழகாக சாம்பிராணியில் உலர்தினர். பட்டு போன்ற நீண்ட முடி காய்ந்தே போனது. வெள்ளிகளுடன் மின்னிய கருங்கூந்தலை ஆசையாக பின்னினர். மல்லி கனகாம்பரம், மரூ மரிகொழுந்து என நெருக்க கட்டிய தஞ்சாவூர் கதம்பம் கொண்டு பின்னலை சுற்றினார். கீழே சொல்ல சொல்ல கேட்காமல் குஞ்சலம் வேறு. மங்கா வாயை திறப்பதாவது. சிவந்தே போனது முகம்.
அந்த நாளில் மணமாகியது கனவு போல புகை மூட்டமாகத்தான் நினைவு. மிகவும் சிறு பெண். பன்னிரெண்டே வயது மங்காவிற்கு. அவருக்கோ பதினெட்டு. பி யு சி முடித்து பின் லா படிக்கச் சேர்ந்துள்ளதாக பேசிக்கொண்டனர். இவள் என்ன அறிவாள்.
ஐந்தாம் வகுப்பு முடித்ததுமே போதும் என நிறுத்திவிட்டனர். ஆம் ஆறாம் வகுப்பிற்கு பக்கத்து டவுனுக்கு செல்ல வேண்டும், சைக்கிளில் அல்லது டவுன் பஸ்ஸில். அப்பாவிற்கு அனுப்பலாம் என யோசனை இருந்தாலும் “என்னதிது வழக்கமில்லாம வழக்கமா இன்னிக்கோ நாளைக்கோ பெரியவளாகிடுவோ, அவள போய் டவுனுக்கு அனுப்பறதாவது?” என உள்ளே இருந்து பாட்டி போட்ட சத்தத்தில் மொத்த வீடும் அடங்கி போனது.
மற்ற நகைகள் சூட்டி மங்களத்திற்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் இரண்டு கையிலும் அடுக்கினர் பச்சையும் மஞ்சளுமாக. கூடவே தங்க வைர வளையல்களும் ஜொலித்தன. ரெண்டு மூக்கிலும் வைர பேசரி. காதுகளில் வைர தோடு அதன் கீழே முத்து சரம் மல்லிமொட்டாக தொடுத்திருந்தது.
“அம்மா ஜிமிக்கி” என மாட்டுபொண் ஆசைபட்டாள்.
“அவ்வ்வா, என்னடி பங்கஜா, இப்படி அழும்பு பண்றேள். சிரிப்பாடீ எல்லாரும்...” என கண்ணால் கெஞ்சினாள்.
“என்னம்மா, நீங்கதான் இப்படி ஒரே அடியா வெட்கப்படறேள். எங்காத்தில பெரியம்மா ராக்கொடி சுட்டி ஜிமிக்கி மாட்டல் எல்லாம் போட்டுண்டா, ஜடை வெச்சு பின்னினோம்” என்றாள் பங்கஜா.
அடிப்பாவி என மோவையில் கை வைத்து அதிசயித்தார் மங்கா. சிரிப்புதான் வந்தது.
நாழியாச்சு என மிரட்டவே பிறந்த சிலர் இருப்பார்கள் அல்லவா எல்லோர் வீட்டிலும் அந்த ஜென்மம் ஆளோடியில் நின்றபடி உள்ளே பெருங்குரல் எடுத்து விரட்டி கொண்டிருந்தது.
வாசலில் பெரிய மாக்கோலம், செம்மண் கரையிட்டு. மாவிலை தோரணம் சிவப்பு பச்சை கரை கட்டிய பந்தல், முகூர்த்த பந்தக்கால் வாழைமரம் என வாசல் ஜொலித்தது. அந்த தெருவே விழாகோலம்தான் போங்கோ.
பின்னாடி இருந்த நிலத்தில் தோண்டி காடி அடுப்பு வெட்டி முகூர்த்த காலை உணவும் மதிய விருந்தும் தடபுடலாக சாமா ஐயர் தயாரிக்க துவங்கிவிட்டார். நாலு நாள் முன்பே அவர் முன்னின்று பாட்டிகள் மாமிகளை துணைக்க வைத்துக்கொண்டு திரட்டிப்பால், பருப்பு தேங்காய்கூடு, லட்டு, மைசூர்பாகு, அதிரசம், முறுக்கு வகைகள் என ஜமாய்திருந்தார். கூடம் தாண்டி ஆக்ராஹாரமே மணத்தது. இன்றும் தான்.
வைதீஸ்வரனாத்து காபிக்கெனவே மனுஷாள் வர்ற வீடு அது. இன்னிக்கி முஹூர்த்தம் வேற கேக்கணுமா என்ன. காபி பல ஈடு ஆறாக பெருகி ஓடியது. கும்பகோணம் டிக்ரீ காபிக்கு உபயோகபடுத்தும் பதத்தில் கூட நின்று தானே காபி பொடி அரைத்து வந்தான் கணேசன். அவன்தான் மூத்தவன். சின்னவன் சுப்ரமணியன். ஒரே பெண் பாலாம்பிகை. பாலானு சொல்லுவா... ஆத்துக்கு கடைக்குட்டி செல்லம். டெல்லியில வாக்கப்பட்டிருக்கா. எல்லோருமே குழந்தேளோட வந்துட்டா வேளையோட. செலவும்தான் வேலையும் இழுத்து போட்டுண்டு பொறுப்பாக செய்ததுகள் கொழந்தேள்.
மாப்பிளை ரொம்ப தோரணை எல்லாம் இல்லாத சாதா மனுஷன். நல்லவர். மாமி மாமானு ரொம்ப பிரியம்.
நாட்டு பெண்ண சொல்லுங்கோ. பங்கஜம், மங்களத்தோடவே புழங்கியதாலோ என்னமோ அப்படியே அவரோட குணம். தங்கம். அடுத்தவலும் அப்படிதான். அதிகம் பட்டுக்க மாட்டா ஆனா வஞ்சனை இல்லை மனசுல. தெரியாது, சொன்னா செய்வள். பாவம் சமத்துதான்.
ஆம் நிறைய பேரக்குழந்தேள் ஓடி திரிந்தது. பட்டு பாவாடை கால் கொலுசுமாக சிரிப்பும் கலகலப்புமாக வீடு திமிலோகப்பட்டது.
“இந்த வாண்ட பாரேன், இன்னும் நாலடி எடுத்து நடக்க தெரியல இவனுக்கு... பெரிய பசங்களுக்கு சரியா ஒடனும்ங்கறது... டேய் டேய் விழுந்துட போறே டா கண்ணா. இப்போதான் முன்பல் ரெண்டு வந்திருக்கு அதுவும் போய்ட போறது” என பாலா அவன் பின்னாலேயே சிரித்தபடி ஓடினாள். கணவனிடம் அவன் பொறுப்பை கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள். சமையலறையில் என்ன தேவை என பார்க்க.
“என்ன மன்னி, காபி கடை ஆச்சா, நான் வேணா கலக்கவா?” என்றபடி
“காபி கடை ஓயறதாவது பாலா, நோக்கு தெரியாதோ, இந்த கடைக்கு நோ ஸ்டாப்” என்றனர் இருவரும் சிரித்தபடி. 
“வாஸ்தவம் மன்னி. அண்ணா  அறைச்சுண்டு வந்தாலே காபி தனி சுவைதான். அப்படியே நேக்கும் அறவா தாங்கோளேன்” என சந்தடி சாக்கில் அவள் சிந்து பாடிவிட்டாள்.

வாச பக்கவாட்டில் தான் கூரை வேய்ந்து மணமேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கேதான் ஹோமம் வளர்க்க எல்லாம் ரெடி.
“பொண்ணும் மாப்பிள்ளையும் வரலாமே, நாழி ஆறது” என சாஸ்த்ரிகளின் ஒரு குரலுக்கு பல குரல் உள்ளே வரை ரயில் வண்டி விட்டு அசரீரிகள் போல முழங்கின.
“ஆச்சு, தோ இன்னும் ஒரே நிமிஷம்” என மங்காவின் பின் கொசுவத்தை பின்னே காலின் கீழ் இழுத்து விட்டு தன் கை அணைப்பில் மங்களத்தை அழைத்துக்கொண்டு நடந்தார் அவளின் நாத்தனார் கற்பகம்.
“படபடனு இருக்கு கா” என்றாள்.
“போறுமே, யாரேனும் கேட்டா சிரிக்க போறா. நடக்கபோறது உன் முத கல்யாணம் இல்லை டீ மக்கு, அறுபதாம் கல்யாணம். நன்னா சிரிச்சு அன்று அனுபவிக்காததையும் சேர்த்து அனுபவிப்பியா... இவ ஒரு மக்கு” என சொல்லி காதோடு சிரித்தார். இவளும் சிவந்து சிரித்தாள்.
வைத்தி அங்கிருந்தே ஓர கண்ணால் பார்த்தார். அப்பா மகாலக்ஷ்மியேதான், சும்மா சொல்லப்டாது இவ நெறத்துக்கு பச்சை தூக்கறது” என எண்ணிக்கொண்டார். அவரை மறந்தும் ஏறெடுத்து பார்கவில்லை மங்கா. போதாதா இந்த சுற்றத்திற்கு கேலி பேசி மானத்தையே வாங்கிபிடும்ங்கள்
ஹோமத்தில் அமர்ந்து மந்திரங்களை உதிர்த்து பின்னோடு அபிஷேகத்திற்கு என அழைத்துச் சென்றனர். வாசப்பக்கம் மாமரத்தடியில் வைத்து சின்னவன் சுப்பிரமணி எனும் மணி ஜிலீர் என குளிர் தாக்காமல் பதமாக வெந்நீர் கலந்து விளாவி வைத்திருந்தான். அனைவரும் ஜல்லடையில் தங்கள் கை மோதிரம் வளையல் செயின் என கழட்டி அதிலிட அதன் மூலமாக குடத்து நீரை முதலில் தம்பதியை விட மூத்தோர் விட்டனர். கைகூப்பி நமஸ்கரித்து சிரம் தாழ்த்தி ஏற்று கொண்டனர் வைத்தியும் மங்களமும்.
பின் சின்னதும் பெரிதுமாக “நானு நானும்தான் விடுவேன், நீ சின்னவோ கெடையாது. இல்லேனா அழுவேன் என்ற சலசலப்போடு சரிடி எல்லாரும் உண்டு. ஆனா சட்டுன்னு ஆகட்டும் தாத்தா பாட்டிக்கு குளிருமோன்னோ” என அனைவருமே குடத்தின் நீரை தலை மேல் வார்த்தனர். அவரவர் ஆசைக்கு என. முடிந்து சட்டென ஆண்கள் வைத்தியையும் பெண்கள் மங்காவையும் குளிர் தாக்காது கையணைத்து சரசரவென உள்ளே இட்டுசென்று உடை மாற்ற உதவினர்.
மங்காவின் சகோதரன் பொறந்தாம் சீர் கொண்டு வந்திருந்தான். பொன்வண்டு கலரில் அரக்கு பார்டர் மடிசாரு, அவருக்கு மயில்கண் பத்தாரும்.  தலை துவட்டி மீண்டும் புகை போட்டு அதை பதவிசாக கட்டினர். மற்ற நகைகள் புதிய மாலை என அலங்கரித்து ஐந்தே நிமிடத்தில் மாமி மீண்டும் ரெடி போர் டேக் .
மாமாவும் என்ன கொறைச்சலா என்ன. தோ புதிய பத்தாறு மயில்கண்ணில் மைதீட்டிய கண்களுடன் நெற்றியில் பட்டையான விபூதி குங்குமத்துடன் நெஞ்சில் புலிநக செயின் ஆட அங்கவ்ஸ்த்ரம் தரித்து மாப்பிளையா கொக்கா என வந்தார் ராஜநடையுடன்.
பெரியோர் அனைவரும் ஆசிகள் கூறி எடுத்து தந்த மஞ்சள் கையிற்றை மீண்டும் மனமுவந்து மங்காவின் கழுத்தில் ஆசை ஆசையாக கட்டி முடித்தார் வைத்தீ. கற்பகம் கண் நிறைந்து மறைக்க நாத்தனார் முடிச்சிட்டாள். கைகூப்பி வணங்கி குனிந்த தலையுடன் சிவந்த கன்னங்களுடனும் மற்றுமொரு முறை தாலி வாங்கிகொண்டாள் மங்கா.
இவ்வாராகத்தானே மங்களம் வைதீஸ்வரன் தம்பதியினரின் அறுபது நன்னா முடிஞ்சுது.
சாப்பிட்ட டிபனே இங்கே ஜீரணிக்கலை, அதுக்குள்ள “எல போட்டாச்சுனு” பின் பக்கமிருந்து சாமா மாமாவின் குரல்.
“நன்னா இருக்கு போங்கோ. வயிறு திம்முன்னு நா இருக்கு.... வாய திறந்தா காக்கா கொத்தும் இப்போவே சாப்பாடாவது...?” என இழுத்தார் ஒரு பெரியவர்.
“அதுக்குதாங்காணும், போட்டதே இட்லி மட்டும்தான். அளவா ரெண்டோட நிறுத்தி இருக்கணும். அதைவிட்டு சாம்பார் கொளம்கட்டி இறங்கி இட்லி மீன் பிடிச்சா இதான் கதின்னேன்” என இன்னொரு பெரிசு காலை வாரியது.
ஆசீர்வாதங்கள் கொடுப்பதும் பெறுவதுமாக நடந்தேறியது. மாலை மாற்ற வைத்தனர். சீண்டி விளையாடினர் சிறுவர் பெரியோர் வயது வித்யாசமின்றி.
“என்ன மாமி, இந்த வயசிலேயும் மருதாணி இப்படி சிவந்திருக்கு, மாமாக்கு அவ்ளோ ஆசையோ மாமி மேல...?” என ஒருத்தி இழுக்க..
“இல்லையோடீ பின்னே வைத்தீ மாமாக்கு மங்களம் மாமி மேல பித்தாச்சே” என கூற கூட்டமே கொல்லென சிரித்தது. மங்காவிற்கோ நாணத்தில் சிவந்து போனது. இதை கேட்ட பெருமிததோடு மந்தகாசமாக அமர்ந்திருந்தார் வைத்தீ. அவர் கைவிரல் மங்காவின் உள்ளங்கையில் கிள்ளியது. ஓரப் பார்வையில் அவரை அடக்கினாள் மிரட்டினாள். அவரும் சாது போல அடங்கி அமர்ந்தார். அவள் களுக்கென சிரித்துவிடாமல் தன்னையே அடக்கினாள்.
“தா பாருடி, நாம இத்தனாம்பேர் கூட இருக்கோம் ஒச்சபடாம தனியா சினிமா ஓட்றாங்கடி சித்தியும் சித்தப்பாவும்” என ஏற்றிவிட்டாள் இன்னொருத்தி. அதுக்கு ஹோ வென சிரித்தனர்.
பந்தி போட்டாச்சு என மீண்டும் குரல். பந்தி விசாரணை, சாப்பிட அனுப்பிவைப்பது தாம்பூலபை கொடுத்து விடை கொடுப்பது என இடுப்பும் காலும் முறிந்தது கணேசன் மணி பாலா தம்பதியருக்கு.
குழந்தைகளை சாப்பிட வைத்து பின்னோடு வைத்தீ மங்காவுடன் இவர்களும் அமர்ந்தனர். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே. இருவரும் பசித்திருக்க, சாப்பிட விடாமல் ஊட்டுங்கோ நீங்க நீங்க என அழவைத்தனர்
“டீ பசிக்கறது அடங்குங்கோடீ” என காதோரம் கடித்தாள் மங்கா..
“சரி சரி பொண்டுகளா வாண்டுகளா அவாள சாப்பிட விடுங்கோ. பாவம் கார்த்தாலேர்ந்து பட்டினியா இருகாளோன்னோ” என கற்பகம் வந்த சிரிப்பை அடக்கி இவர்களையும் அடக்கினார்.
சாப்பிட்டு முடிந்து மீண்டும் வெற்றிலை மடித்து குடுக்க என ரகளையை துவங்கினர்.
அவருக்கும் கொடுத்து தானும் சுவைத்தாள் மங்களம்.
“நலங்கு உண்டுதானே மாமி?” என கேட்டுக்கொண்டாள் ஒருத்தி
“நலங்கா அறுபதுக்கு எதுக்குடி நலங்கெல்லாம்...?” என அவர் இழுக்க
“இது நன்னா இருக்கே... இவா நலங்குக்கு நாங்க அப்போ இருந்தோமா, இல்லையோன்னோ, நாங்க பார்க்கலை கலாட்டா பண்ணலை....”
“இப்போ அதுக்கெல்லாம் அருமையான சான்ஸ். நலங்கு உண்டு உண்டு கண்டிப்பாக உண்டு” என அடம் பிடித்தனர்.
“டீ இதெல்லாம் ரொம்ப ஓவரா போறேள் ஆமா சொல்லிட்டேன்” என வைதார் மங்கா.
“அதெல்லாம் வேண்டாம் கணேசா” என பதவிசாக கூறினார் வைத்தி. “செரிபா. நான் பார்த்துக்கறேன்” என அவன் புரிந்துகொண்டான்
“பாருங்கோ பொண்களா நோ அடம். அப்பறம் உங்களுக்கு வரவேண்டிய சீரெல்லாம் கட் ஆயிடும் யோசிச்சுகோங்கோ” என ஒரு போடு போட்டான்.
“அம்மா, ஆச தோச அதெல்லாம் குறையப்டாது” என என ஒரே குரலில் கத்தினர். பின் அடங்கியது.
நீங்கெல்லாம் சாப்டேளோ, தாம்பூலம் வாங்கிண்டேளா.. நீங்க வந்ததில ரொம்ப சந்தோஷம். மீண்டும் சந்திப்போம்.

Monday, 9 December 2019

பரிசு - சிறு கதை - அனைத்து நிர்பயா, ப்ரியங்கா போன்ற சகோதரிகளுக்கு சமர்ப்பணம்


பொக்கை வாய் சிரிக்கட்டுமா என லேசாக குழி விழுந்தது. அழட்டுமா என கருவண்டு கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
பட்டு போன்ற கையையும் காலையும் ஆட்டியபடி மடியில் பொன் குவியலாக கிடந்த சிசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள்.
‘என்ன, என் குழந்தையை நானே இப்படி கண்கொட்டாமல் பார்க்கிறேனே, தாய் கண்ணோ நாய் கண்ணோ என்பார்களே’ என துணுக்குற்றாள்.
கண்களை சிமிட்டி நிறைந்த கண்ணீர் வெளியே விழுந்திடாமல் உள்ளேயே கரைத்தாள்.
சட்டென நிமிர்ந்தாள். அப்படியே அமர்ந்திருந்தால் ஆக வேண்டிய காரியம் நிறைய உள்ளதே என குழந்தையை பாதுகாப்பாக வாரி எடுத்து நெஞ்சோடு அணைத்து எழுந்தாள்.
நடு வயது நர்ஸ், இவளை பிரசவத்தின்போது தாய் போல தாங்கியவள். இவளை கண்ணில் நீர் நிறைய கண்டாள்.
இது வேண்டுமா என்ற வினா அவள் கண்களில் காணப்பட்டது.
அவளை பார்த்து ஒரு சோக புன்னகை புரிந்தாள்.
“அவங்களை கூப்படறீங்களா சிஸ்டர்?” என்றாள் பணிவாக.
“அவங்க வர்ற நேரம்தான் மா... வரட்டும், வந்த உடனே உள்ளே அனுப்பறேன்” என்றபடி அவர் வெளியே சென்றார்.
‘ஓ என் செல்வமே, உன்னை என் கையில் ஏந்தி மார்போடு அணைத்து அமுதூட்டிட இன்னமும் சிறிது நேரம் உள்ளதா’ என்பது போல பார்த்தாள். அது சிரித்தது.
‘என்னடீ கண்ணு என்னை பார்த்து சிரிக்கறே, நீயும் ஒரு பெண்ணா நீ வாழணுமானு சிரிக்கிறியா, இல்லே ஏண்டீ உனக்கு புத்தி இப்படி போச்சுன்னு சிரிக்கிறியா, உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குனு சிரிக்கிறியாடீ?’ என்று கொஞ்சினாள்.
நெஞ்சோடு சேர்த்து அமுதூட்டத் துவங்கினாள். தன்னையும் மறந்து அந்த சுகத்தில் கண் மூடினாள்.
மூடிய கண்களுக்குள் மீண்டும் அந்த பயங்கரம்.
அருமை பெருமையாக வளர்க்கப்பட்ட செல்ல மகள் அவள். அவளது பெற்றோரின் இனிய கண்மணி. நன்கு படித்தாள், அறிவும் அன்பும் பண்புமாக வளர்ந்தாள். பார்ப்போரை இன்னும் இன்னும் திரும்பி பார்க்க வைக்கும் சுண்டி இழுக்கும் அழகு.... பளீரென்ற நிறம்.... செதுக்கிய சிற்பமாக உடல் அமைப்பு.
படித்து முடித்த பின் நல்லதொரு பல்நாட்டு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தாள்.
அனைவரையும் போல நடுநிசி வரை ட்யூட்டி. முடித்தபின் கம்பனி கார் வீட்டு வாசல்வரை கொண்டு இறக்கிவிடும். பாதுகாப்பாக போய் வந்தாலும் பெற்றோருக்கு வயிற்றில் கலக்காமல் இல்லைதான். இவள் உள்ளே நுழையும்வரை தாய் விழித்திருப்பாள் என்பதை இவளும் அறிவாள்.
“உடம்பை கெடுத்துக்காதே மா” என்று இவள் திட்டினால்,
“உனக்கென்ன தெரியும் என் கலக்கம்.... நீ வந்துட்டேன்னு தெரிஞ்சாத்தான் நிம்மதியா தூங்கவே முடியறது” என பதில் குடுப்பாள்.
அப்படிப்பட்ட ஒரு இரவு அது..., ஒரு காலத்தில் பேய்கள் உலாவியதாக பூதங்களும் பிசாசுகளும் நிறைந்திருந்ததாக பாட்டி சொன்ன கதையில் ஞாபகம்.
ஆனால் இன்றோ உடல் பசி எடுத்து ஆடும் பேய்களின் நடமாட்டம், பிணங்களை அல்ல உயிர் உறவாடும் பதுமைகளை பிணம்கொத்தி கழுகுகளாக கொத்தித் தின்று உருக்குலைக்கும் கயவான்கள் நிறைந்த உலகம் அல்லவா இது.
நள்ளிரவு இவள் வந்த கம்பனி காப் நின்று போனது. நின்றே போனதோ அந்த காப் ஓட்டுனரும் இதில் கூட்டோ தெய்வமே அறியும்.
அவள் பாதுகாப்பாக காபினுள்ளேயே அமர்ந்திருந்தாள். உள்ளே உதறியது. பயந்து வியர்த்தாள்.
“என்னாச்சு அண்ணே?” என்றாள் துணிச்சலுடன்.
“பார்த்துகிட்டு இருக்கேன் மா” என்று பதில் வந்தது.
அவள் அவனிடம் கவனம் வைத்த அதே நேரத்தில் பின்பக்க இரு கதவுகளையும் திறந்துகொண்டு நுழைந்தனர் இரு கயவர்கள்.
அவளுக்கு புரிந்தது. முயன்றவரை போராடினாள். ஆனால் அவர்களின் முரட்டுத்தனத்தின் முன் தோற்றுப்போனாள்.
மீண்டும் இருவர் என மொத்தம் ஆறு பேர் அவளை சூறையாடி கிழிந்த நாராக எறிந்துவிட்டு ஓடி ஒளிந்தனர். அவளது கத்தலும் அலறலும் அந்த வழியே சென்ற யாரையுமே தடுத்து நிறுத்தவில்லை. திரவுபதிக்கு உதவி கண்ணன் ஓய்ந்தான் போலும் அவனுமே கூட செவி சாய்க்கவில்லை.
வண்டி ஓட்டுனர் எப்போதோ ஓடிவிட்டானோ அல்லது அவனும் இதில் ஒருவனோ வண்டியினின்று அவளை ரோட் ஓரமாக வீசிவிட்டு சென்று இருந்தனர்.
அதிகாலைவரை அப்படியே நினைவிழந்து கிடந்தாள். ரோந்து சுற்றிய போலிஸ் வண்டி அவளை கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர். கேஸ் பதிவாகியது. அலறியபடி ஓடி வந்தனர் பெற்றோர்.
பெரும்பாடுபட்டு மருத்துவர்கள் அவளை பிழைக்க வைத்தனர். நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவள் மீள பல மாதங்கள் ஆகின. உடல் காயங்களுக்கு மருந்துண்டு மனம் காயப்பட்டு ரணப்பட்டு உடைந்து சில்லாகி இருந்ததற்கு மருந்தேது. ஒவ்வொரு இரவும் கனவாக நினைவாக வந்து வந்து பயமுறுத்தியது. தூக்கம் போனது, கண்ணை மூடினால் அந்த பயங்கரம், கனவிலும் நினைவிலும் அலறினாள்
ஆனாலும் அவள் போராடினாள். துணிவை வளர்த்துக்கொண்டாள்.
அனைத்து மீடியாவும் போலிசும் ஏவிய கேள்விகளை ஏற்று நின்றாள். நிமிர்வுடன் பதில் இருத்தாள். உள்ளே உடைந்தாலும் அதை முகத்தில் காண விடவில்லை.
அவள் அடையாளம் காட்டிய நால்வரையும் கைது செய்தனர். கேஸ் நடந்தது. கோர்ட்டில் அவர்களுக்கு தண்டனை இன்றோ என்றோ வரலாம். தொடரும் தொடர்கதையாக இந்த கேஸ் நீண்டுகொண்டே போகலாம். அவள் எதற்கும் துணிந்தாள்.
அதே நேரம் அவள் கருவுற்றிருப்பது தெரிய வந்தது. கலைக்க வேண்டும் என பெற்றோர் ஒற்றைக் காலில் நின்றனர்.
“இல்லை இந்த குழந்தை பெற்றெடுப்பேன்” என்றாள் பிடிவாதமாக.
“உனக்கென்ன பைத்தியமா?” என அதிசயமாக அருவருப்பாக ஆச்சர்யமாக பார்த்தனர் குடும்பமும் உற்றாரும் சுற்றாரும்.
“நீ இதை தனியா வளர்க்க முடியாது. நாளைக்கு உனக்கு ஒரு துணை தேடுவதே பெரும்பாடு எனும்போது, இந்தக் குழந்தையும் கையில் இருந்தால் ஒருவனும் ஏற்க மாட்டான்” என புத்தி கூறினர் பெற்றோர்.
“தெரியும், இத்தனைக்கும்பின் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.... அதையும் மீறி ஆசைப்பட்டாலும் கூட, என்னை ஒருவனும் ஏற்க முன் வரமாட்டான்.... அவனுடைய ஆண் ஜாதியால் மோசம் இழைக்கப்பட்டவள் நான், ஆனாலும் தண்டிக்கப்படுவதும் நானே.... அதுதான் நமது சமுதாயத்தின் சிறப்பு” என விரக்தியாக சிரித்தாள்.
“இத்தனையும் வக்கணையாக பேசும் நீ எல்லாவற்றையும் அறிவு பூர்வமாக சிந்தித்து எதிர்கொண்ட நீ, இந்த முட்டாள்தனத்தை ஏன் செய்ய வேண்டும் என பிடிவாதம் செய்கிறாய்?” என்றனர்.
“எவனோ கயவன் செய்த தவறிற்கு இந்த பச்சை மண் என்ன பாவம் செய்தது. ஜனித்துவிட்ட உயிரை மாய்ப்பது கொலை அல்லவா....?”
“அப்போது நீயே வளர்க்க போகிறாயா?” என்றனர்.
“இல்லை” என்ராள்.
“பின்னே?” என்றனர் ஆச்சர்யத்துடன்.
“இந்த நாட்டில பிள்ளையில்லாதோர் எத்தனையோ பேர்.... அதனால் ஒதுக்கிவைப்பு, விவாகரத்து, இரண்டாம் மனைவி மணப்பது என மீண்டும் மீண்டும் பெண்களுக்குத்தான் தண்டனைகள்.
அதில் யாரேனும் ஒருவருக்கு இந்தக் குழந்தை வாழ்க்கையின் பரிசாக போய் சேரட்டுமே” என்றாள்.
“நீ சீரழிக்கப்பட்டு அதனால் உதித்த ஜீவன் இது.... இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்” என்று புத்தி கூறினார்.
“நான் ஒன்றுமே மறைக்கப்போவதில்லை. உண்மையை உள்ளது உள்ளபடி கூறியே இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள முன் வருவோருக்கு தர ஆசைப்படுகிறேன்” என்றாள்.
தான் சீரழிக்கப்பட்ட தினம் முதல் தன்னை சிகிச்சை செய்துவந்த தாய்சேய் நல மருத்துவரின் உதவியுடன் அந்தக் குழந்தையை ஏற்க விரும்பும் தம்பதியை சந்தித்தாள்.
பல வருடமாக இயற்கையாகவும் மருத்துவத்தினாலும் பெரும்பாடு பட்டும் கருத்தரிக்க முடியாமல் குழந்தை பேரின்றி தவிக்கும் செல்வ செழிப்பான தம்பதி அவர்.
“பேப்பரில் எல்லாமே பத்தி பத்தியாக படித்திருப்பீங்க, நானும் என் உண்மை வாக்குமூலமாக அனைத்தையும் உங்களிடம் மறைக்காமல் சொல்லிவிட்டேன், இதெல்லாவற்றையும் கேட்ட பின்பும் முழு மனதோடு ஒருவித உறுத்தலும் இன்றி நீங்க இந்த குழந்தைய ஏற்க விரும்பறீங்களா?” என அவர்களை நேர் பார்வையுடன் கேட்டாள்.
“நாளை ஒரு வேளை, இது சேற்றில் முளைத்ததென கூறி சிறுமைபடுத்தினால் நான் அன்று அங்கு வந்து நிற்பேன். நீங்க உலகத்தின் எந்த மூலையில் போய் வாழ்ந்தாலும் நான் வருவேன்... என் சிசுவை உங்களிடம் இருந்து பிரித்துக்கொண்டு வந்துவிடுவேன்” என்றாள் கனல் பறக்கும் கண்களுடன்.
கண்ணில் நீர் வார்த்தபடி “இல்லையம்மா, உன்னை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்.... நீ பட்ட துன்பம் அவமானம் அசிங்கம் அனைத்தையும் மீறி நீ செய்யப் போகும் இந்த செயலால் எங்கள் வாழ்க்கையே மலர ப்போகிறது.... சேற்றில் தானே செந்தாமரையும் மலர்கிறது.... அந்த சகதியில் கால் வைத்து கைவிட்டு தானே அந்தத் தாமரை மலரை பறித்து அதை கடவுளுக்கும் படைக்கிறோம்.... உனக்கு இந்த மாதிரியான எந்த சந்தேகமும் வேண்டாம். இந்தக் குழந்தை எங்கள் உயிராக இருக்கும். அவளை அண்ட நினைக்கும் எந்தத் தீங்கும் எங்கள முழுங்கித்தான் அவளை தீண்ட முடியும்” என்றனர்.
“யாரால நீ கசக்கி எறியப்பட்டிருந்தாலும், இது ஜனித்தது உன் வயிற்றில். உத்தமியாகத்தான் நாங்க உன்ன பார்க்கிறோம். ஜனித்தது யார் மூலமாக என்ற ரிஷிமூலம் நதி மூலம் எங்களுக்கு தேவை இல்லை மங்கை.” என்று கும்பிட்டார் அந்தக் கணவர்.
அவளுக்கு மனம் சமாதானம் அடைந்தது. ஒன்பது மாதங்கள் அவர்களுக்காக தன் சிசுவை பேணி போற்றி தன் மணி வயிற்றில் சுமந்தாள். அவள் செய்வதை முழு மனதுடன் அங்கீகரிக்க முடியாவிடினும் அவளை கண் போல பார்த்துக்கொண்டனர் அவளது பெற்றோர்.
இதோ இன்று காலை சுகப்ரசவம் ஆனது. ரோஸ் நிற டவலில் சுற்றி ரோஜா குவியலாக தான் பெற்ற கண்மணியை இதோ வந்துகொண்டே இருக்கும் அந்த பெற்றோரிடம் சேர்ப்பிக்கப் போகிறாள் இன்னொரு நிற்பயா.
அவர்கள் உள்ளே வந்தனர். வாயெல்லாம் பல்லாக நீர் மிதக்கும் கண்களுடன் ஆசை ஆசையாக தன் மகளை கையில் ஏந்த ஆயிரம் கண்களுடன் கை நீட்டினாள் அந்தப் பெண். அவளை அணைத்தபடி முகமெல்லாம் பூவாக மலர அவள் கணவன் கூடவே.
இருவர் கையிலும் தன் சிசுவை கொடுத்தாள்.... கைகள் நடுங்கின.... உடலின் ஒரு பாகமாக மட்டுமின்றி தன் உயிரையே ஒரு பாகமாக பிரித்து கொடுப்பது போன்ற வலி நெஞ்சை நிறைத்தது.
கண்ணை இருக்க மூடினாள். நிறைந்த கண்ணீரை முழுங்கினாள்.
“இதற்கு கைமாறா நாங்க உனக்கு என்னம்மா செய்யறது?” என வினவினர்.
புன்னகைத்தபடி “நான் என் சிசுவை உங்களுக்கு விற்கவில்லையே” என்றாள்.
“அய்யயோ நாங்க அப்படிச் சொல்ல வரலை, ஆனாலும் உன்னுடைய நல்ல மனசுக்கு நாங்க ஏதானும் செய்யணும்னு ஆசைப் படறோம்” என்றார் அந்த தனவந்தர்.
“எனக்கு என்னுடைய நிலைமையால வேறே எங்கேயும் வேலை கிடைக்குமான்னு தெரியலை, உங்களால எனக்கு ஒரு வேலை வாங்கி குடுக்க முடியுமா...? என்றாள் கூச்சத்துடன்.
“இங்கிருந்து இந்த ஊர் இந்த மண்ணைவிட்டு தூரே தூரே எங்கேயானும் போய்டணும்னு தோணுது.... நான் இங்கேயே இருந்தா என்னை எதையுமே மறக்க விடமாட்டாங்க இந்த போலிசும் மீடியாவும்” என்றாள் மனம் கலங்க.
“இவ்வளவுதானே, நான் இங்கே நடத்தும் என்னுடைய கம்பனியின் மெயின் ஆபிஸ் ந்யு யோர்கில இருக்கு.... அங்கேயே உன்னை அனுப்பி வைக்கறேன்.... வேலையில சேர்ந்துக்கோ” என்றார். மன நிறைவுடன் சரி என்றாள்.
கையில் விழுந்த ரோஜா குவியலை நெஞ்ஜோடு அணைத்தபடி அந்த தாய் முன்னே நடக்க அவளை அணைத்தபடி “நான் நாளைக்கே உனக்கு வேண்டிய உத்தரவுகளோட உன்னை வந்து சந்திக்கிறேன் மா” என்றபடி சென்றார் அந்த கணவர்.
தன் உயிர் தன்னை விட்டு இன்னொருவரின் வாழ்க்கை பரிசாக போவதை நிறைந்த கண்களுடன் கண்டபடி நின்றாள் மங்கை.
முற்றும்.