Sunday, 24 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE - 7

விமான தளத்திலும் விமானத்திலும் அதன் பின் டாக்சியில் வீடு வந்து சேரும் வரையிலும் கூட சித்ராங்கி ஒரு வித பதட்டத்தோடும் பயத்தோடுமே காணப்பட்டாள். ரஞ்சனுக்கு அவள் நிலை புரிந்தது. ஆதரவாக அவள் கையை பிடித்து அமுக்கிவிட்டான். அவன் தொடுகையை விரும்பாதவள் போல கையை மெல்ல இழுத்துக் கொண்டாள்... அரை புன்னகை செய்தாள்....
திக்கு தெரியாத காட்டில் மாட்டிகொண்டு முழிக்கும் சிறு குழந்தை போல இருந்தது அவள் மருண்ட முகம். எப்போதுமே குழந்தை குமரியாகத்தான் இருப்பாள். இப்போது மேலும் கலவரம் சூழ்ந்து, ‘என்ன நடக்கிறது இங்கே, நான் ஏன் இங்கே இருக்கிறேன்.... எங்கே செல்கிறேன்.... எதற்கு.... இவர்கள் யார்..... என் உறவுகள் என்பது உண்மைதானா?’ என்று கலக்கம் தோன்ற மெளனமாக அமர்ந்திருந்தாள்.

விமானம் தரை தொட வெளியே வந்து தங்கள் இருவரின் சிறு பையுடன் ஒரு டாக்சி பிடித்து அவளுடன் வீட்டை அடைந்தான்.
“அம்மாடீ வந்துட்டியாடீ கண்ணு, எங்க வயித்தில பாலை வார்த்தியேமா” என்று மனம் நிறைந்து ஆனந்தக் கண்ணீருடன் வாசலிலேயே எதிர்கொண்டனர் அன்னையர் இருவரும். பணி பெண்ணிடம் கூறி ஆரத்தி கரைத்து திருஷ்டி சுற்றி உள்ளே அழைத்துக்கொண்டனர். சித்ராங்கிக்கோ அனைத்துமே புதிதாக இருந்தது. மலங்க மலங்க விழித்தாள். மெல்ல அவள் கையை பற்றியும் படாமலும் பிடித்தபடி உள்ளே அழைத்துச் சென்றான்.

“அம்மாடா, குட்டி” என்று கலாவிற்கு சிவகாமி உணர்த்த அது தயக்கத்துடன் “அம்மா” என்றபடி அருகே வந்து நின்றது. அழகு தெய்வமாக அருகே வந்த குழந்தையை ஒரு தாயின் இயர்கையான உணர்வுடன் வாரி எடுத்துக்கொண்டாள் சித்ரா. ஏன் அள்ளிக்கொண்டோம் என்ற அவளது உள் மனக் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. ஏனோ அந்தக் குழந்தையை பார்த்ததும் தூக்கி கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது போலும் என எண்ணிக்கொண்டாள்.
“நீ என் மம்மியா?” என்றது அந்த மழலை. அவள் சந்தேகமாக ஆம் என்பது போல மெல்ல தலை அசைத்தாள். அழுந்த கன்னத்தில் முத்தமிட்டது. அன்னையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததோ என்னவோ. அவளும் புன்னகைத்தபடி அழுந்த முத்தமிட்டாள்.

“வா சித்து, இதுதான் உங்கம்மா, இது எங்கம்மா” என்று அறிமுகம் செய்துவைத்தான்.
“அம்மா” என்று சொல்லி பார்த்துக்கொண்டாள். “அம்மா” என்று போய் தன் அன்னையை கட்டிக்கொண்டாள்.
“என் கண்ணே, வந்திட்டியாடி கண்ணு” என்று கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள் அந்த தாய்.

அடுத்து தன் அத்தையிடம் வந்தவள் “உங்களை நான் எப்படி கூப்பிடணும்?” என்று மெல்ல கேட்டாள்.
“என்னையும் நீ எப்போதுமே அத்தையா நினைச்சதும் இல்லை... அப்படி அழைத்ததும் இல்லை..... அம்மான்னு தான் என்னையும் கூப்பிடுவே” என்றார். “அம்மா” என்று அவரையும் கட்டிக்கொண்டாள்.
“நீ வந்ததே போதுமடி கண்ணு, நெஞ்சு நிறைஞ்சு போச்சு” என்று முகம் வழித்தார்.
“உக்காருடாமா என்ன சாப்பிடற, எப்போ என்ன சாப்பிட்டீங்களோ, வாங்க எல்லாம் தயாரா இருக்கு, சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றார்.
பசி தோன்ற மௌனமாகவே பசியாரினர்.

அதன்பின் என்ன எப்படி நடந்தது எப்படி கண்டுபிடித்தான் ரஞ்சன் என இரு அன்னைகளும் கேட்க விரிவாக விவரித்தான் ரஞ்சன்.
“அந்தக் கடவுள்தான் கூட இருந்து காப்பாத்தினார்” என்று கூறிக்கொண்டார். சற்று நேரத்தில் “போ மா, போய் படுத்துக்கோ, கலாவும் தூங்கி விழறா பாரு.... நான் என் ரூமில வெச்சுக்கறேன் அவள” என்று எழுந்தார்.
“இல்ல அவள என் கூடவே...” என்று கை நீட்டி வாங்கிக்கொண்டாள்.

‘தனியே ரஞ்சனுடன் அவன் அறையிலா.... இரவு முழுவதுமா...’ என்ற தயக்கம் சிறிது நேரமாக அவளை அரித்துக்கொண்டு இருந்தது. அதனால் குழந்தையுடன் செல்லலாம் என்று முடிவு கட்டி இருந்தாள்.
“சரி மா இந்தா” என்று கலாவை அவள் கையில் கொடுத்தார் சிவகாமி.
அவளை ஏந்தியபடி அவள் ரஞ்சன் வழி காட்ட அவனது அறைக்கு சென்றாள். உள்ளே சென்று கட்டிலின் மத்தியில் கலாவை படுக்க வைத்து மெல்ல தட்டி கொடுத்தாள்.
ரஞ்சனுக்கு அவள் நிலை புரிந்தது.
“நான் கொஞ்சம் பேசலாமா குட்டிமா?” என்றான. அவனை என்னவென்பது போல கண்டாள்.
“நீ என் மனைவிதான் ஆனாலும், உன் மனம் என்னை மறுபடி உணர்ந்து, என்னை முழு மனசுடன் ஏற்றுக்கொள்ளும் வரை நான் உன்னை எந்த விதமாகவும் தொந்தரவு செய்ய மாட்டேன்..... நீ எந்த வித தயக்கமோ கவலையோ இல்லாம நிம்மதியா உன் வீடுனு நம்பிக்கையோட படுத்து தூங்கு...... உன்னை எந்த விதத்திலும் நான் ஏமாத்தலைன்னு மட்டும் என்னை நம்பு, அது மட்டும் எனக்கு இப்போ போதும்டா குட்டிமா” என்றான்.

அவள் அவனை நேரே பார்த்து, “இல்ல... அப்படி எல்லாம் சந்தேகம் வரலை... நீங்க என் மேல வெச்சிருக்கற அன்பை உங்க கண்ணுல பார்த்தாலே தெரியுது.... ஆனால் எனக்குதான் எல்லாமே புதுசா இருக்கு.... அட்ஜஸ்ட் பண்ணிக்க கொஞ்சம் அவகாசம்.....” என்று நிறுத்தினாள்.

“கண்டிப்பா, எத்தனை நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ குட்டிமா.... இப்போ நிம்மதியா தூங்கு செல்லம்” என்றான். சரி என கலாவை அணைத்தபடி படுத்தாள். கால்களை மடக்கி வயிறு வரை குறுக்கிக் கொண்டு கலாவை இறுக்கியபடி அவள் ஒன்றி படுத்திருந்ததை பார்த்து ரஞ்சனுக்கு மனம் வலித்தது. இவள் எப்போது சரியாவாள். எப்போது சகஜமாவாள் என பதறியது. பொறுமை மனமே பொறுமை என தேற்றிக்கொண்டான்.

அடுத்த நாள் பொழுது விடிய எழுந்து கொண்டாள் சித்ராங்கி. அவள் எழும் அரவம் கேட்டு ரஞ்சனும் விழித்தான்.
“குட் மார்னிங் குட்டிமா” என்றான் எப்போதும் கூறுவது போல. அவள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து பின் “குட் மார்னிங்” என்றாள்.
“இதை எல்லாம் பாரு சித்து” என்று அழைத்து போய், “இது உன் பிரஷ், இது உன் சோப், இந்த அலமாரி மொத்தமும் உன் துணிமணிகள் டா” என்று காண்பித்தான்.
சரி என பல் துலக்கி முகம் கழுவி வந்தாள். வெளியே சென்று சிவகாமி தந்த காபியுடன் மறுபடி உள்ளே நுழைந்து அவனிடம் நீட்டினாள்.
“அம்மா தரச் சொன்னாங்க” என்றாள். அவன் புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.
இருவருமாக காபி குடித்து முடிக்க அதற்குள் கலா எழுந்தாள். அம்மா என்று அவள் கழுதை கட்டிக்கொள்ள இயல்பாக அவளை கையில் ஏந்தி பாத்ரூமில் அழைத்துச் சென்று பல் துலக்க உதவினாள். அவளுக்கு பால் புகட்டிவிட்டு அவனிடம் தந்துவிட்டு தானும் பின்னோடு குளிக்க கிளம்பினாள்.

“நான் குளிக்கணும்....” என்றாள்.
“குளியேன், உன் துணிமணி எல்லாம் இப்போ காண்பிச்சேனே” என்றான் ரஞ்சன்.
“அதில்லை...” என்றாள் தயக்கத்துடன்.
“பின்ன?” என்றான் புரியாமல்.
“இல்ல.. வந்து... நீங்க கொஞ்சம் வெளிலே.....” என்று மென்று முழுங்கினாள். “ஒ, ஓகே” என்று எழுந்து கலாவை ஏந்தியபடி ஹாலில் சென்று அமர்ந்துகொண்டான். சிரிப்புதான் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்.

தன் துணிகள் என்று ரஞ்சன் கூறிய அலமாரியை திறந்து தனக்கு கண்ணுக்கு பிடித்த ஒரு புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு அந்த புடவையும் அதன் ப்ளவுசும் தனக்கு கன கச்சிதமாக பொருந்தியதை பார்த்தாள்.
‘உண்மைதான், என்னோடதுதான் போல....’ என்று சிறு புன்னகை வந்தது. மெல்ல வெளியே வந்தாள்.

அவளை அந்த ரோஜா வண்ண சேலையில் கண்டவனுக்கு ஆசை பொங்கியது..... அந்தப் புடவை போன கல்யாண நாளுக்கு என அவனே பார்த்து பார்த்து வாங்கியது..... அதை அவள் உடுத்தி எதிரே வந்தாலே அவன் ஒரு கணமும் தள்ளி நிற்க மாட்டான்..... அவளுடனேயே இழைந்து கொண்டு திரிவான்..... அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அவளுக்கு அந்தப் புடவை.... ஆனால் இப்போது, பெரியதொரு பெருமூச்சுதான் வெளியேறியது.
“சித்து, ஆஸ் யூஷுவல், அசத்தலா இருக்கு உனக்கு இந்தப் புடவை” என்று மட்டும் கூறினான். அதை கேட்டு அவளையும் அறியாமல் அவள் கன்னத்தில் நாணப் பூக்கள் மலர்ந்தன. அவனை கண்ணோடு கண் காணாது கிச்சனுள் சென்று மறைந்தாள்.

அங்கே சமையல் நடந்துகொண்டு இருக்க கூடவே இருந்து தனக்கு தெரிந்த வகையில் உதவினாள்.
“என்ன சிவகாமி இது, சொந்த அம்மாவையே மறந்துட்டாளே இவ இப்படி...?” என்று அங்கே கற்பகம் சிவகாமியிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
“போகுது அண்ணி, ஏதோ அதுமட்டும் பொண்ணு கிடைச்சாளேன்னு சந்தோஷப்படுவோம்..... மெல்ல மெல்ல புரிஞ்சுக்குவா” என்று தேற்றினார்.

“ஆனாலும், மாப்ள கிடந்து தவிச்ச தவிப்புக்கு கடவுள் நல்ல வேளையா அவளை காப்பாற்றி குடுத்துட்டாரு..... இவளுக்காக அவர் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமா.....” என்று மாய்ந்து போனார் கற்பகம்.

“இவளை நினைச்சு உருகி அவருக்கு ஏதானும் ஆகிடுமோன்னு நான் பயந்துட்டேன் அண்ணி” என்றார் சிவகாமி.
“அதை சொல்லு, எனக்கும் அதே கலக்கம் தான்.... ஆனாலும் சிவகாமி நாம எத்தனையோ பேர் இனி சித்ரா வர மாட்டா கார்யம் பண்ணிடலாம்னு சொன்ன போதும் கூட அதை மறுத்து உன்னையே திட்டிட்டு, ‘கண்டிப்பா என் சித்ராங்கி என்னிடம் வந்து சேருவா, அவளுக்கு எதுவும் ஆகி இருக்காதுன்னு கெட்டியா நம்பினாரு பாரு, அதுக்கே அவர பாராட்டணும்...... நம்பிக்கை தான் தெய்வம்னு சும்மாவா சொல்றாங்க..... அவர் நம்பிக்கை இப்போ பலிச்சுடுத்தே” என்று சிரித்துக்கொண்டார்.

இதை எல்லாம் எட்ட இருந்து கேட்ட சித்ராங்கிக்கோ ‘அட என் மேல் இவ்வளவு அன்பா இவருக்கு, இப்படி எல்லாம் சொன்னாராமே, இப்படி எல்லாம் பேசினாராமே’ என்று எண்ணி எண்ணி பரவசம் கொண்டாள்

அவன் மேல் பெருத்த மரியாதையும் மதிப்பும் தோன்றத் துவங்கியது, ஆனாலும் தெரியாத புரியாத புதிய ஆடவன் என்ற தயக்கம் இன்னமும் இருந்தது.
சமையல் ஆனபின் அவனுடன் கலாவுக்கும் சிற்றுண்டி குடுத்து அவன் ஆபிசிற்கு கிளம்ப உதவினாள்.

“நான் கிளம்பட்டுமா.... நீ தனியா மேனேஜ் பண்ணிக்குவேதானே, உனக்கு இங்க ஒரு பயமும் வேண்டாம்..... எது வேணும்னாலும் இதோ இந்த நம்பருக்கு போன் பண்ணு, என்ன சரியா” என்று நூறு முறை கூறிவிட்டு கிளம்பினான். சரி என்று தலையை ஆட்டினாள்

கலா தன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருக்க அவள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே தங்களது இரும்பு பீரோவை குடைந்தாள்.... அதில் சில போட்டோ ஆல்பங்கள் இருப்பதை கண்டு வெளியே எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக பார்க்க துவங்கினாள்.... முதன் முதலாக அவளை ஏதோ கல்யாணத்தில் கண்டான் போலும், அதிலிருந்து அவள் பாவாடை தாவணி அணிந்து திரியும் சில படங்களில் துடங்கி சமீபத்தில் கலாவுடன் அவளது பிறந்த நாள் அன்று எடுத்த படங்கள் வரை அனைத்தையும் அதில் கண்டாள்.
முக்கியமாக அவர்களது திருமண மற்றும் தேன் நிலவு படங்களை காண காண அவன் அவள் மீது வைத்திருக்கும் காதலின் தீவிரமும் அன்பின் பரிமாணமும் அவளை திக்குமுக்காட வைத்தது. கண்ணில் அவளையும் அறியாமல் கண்ணீர் பெருகியது.....

அதில் ஒரு படத்தில் அவன் அவள் கால் விரல்களுக்கு மெட்டி போட்டுகொண்டு இருந்தான்... அவள் வலது பாதத்தின் க்ளோஸ் அப் இருந்தது.... அதில் அழகான மருதாணி பொட்டு பொட்டாக டிசைன் இருக்க, அதன் நடுவே கருப்பாக த்ரிஷ்டிக்கு வைத்தது போல அழகிய ஒரு மச்சம், அது அவள் அழகிய வெண்புறா பாதங்களின் அழகுக்கு அழகு சேர்த்தது.... அந்த மச்சத்தை வருடியபடி ரஞ்சனின் கையும் அதில் தெரிந்தது..... ‘இது, இப்படி இங்கே...’ என ஒரு நொடி அதிர்ந்து சிலிர்த்து தன் பாதத்தை பார்த்தாள். அதில் உள்ள அந்த அதே மச்சத்தை வருடி கொண்டாள். அப்போதுதான் அவன் அவள் பாதங்களில் விரலால் வருடியதுபோல அவளுக்கு குருகுருவென்றது.
வலது பாதத்தை அருகே இழுத்து அந்த மச்சத்தை மீண்டும் பார்த்தாள்.... அவனை போல அதை மெல்ல வருடினாள். முகம் மேலும் சிவந்தது.

‘எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்து வந்தோள்ளோம், எனக்கு ஏன் இந்த விபத்து, எனக்கு ஏன் பழசெல்லாம், முக்கியமாக இவரை மறந்து போனது..... என் மேல் உயிரையே வைத்திருக்கும் இவரிடம் நான் பாரா முகமாக எப்படி இருப்பேன்’ என்று புழுங்கினாள்.

“சித்ரா, வா மா சாப்பிடலாம்” என்று அழைத்து அருகே அமர்த்திக்கொண்டு கதை பேசியபடி அவளை பார்த்து பார்த்து உண்ண வைத்தனர் அன்னையர். கலாவுக்கும் ஊட்டியபடி சாப்பிட்டு முடித்தாள். அம்மா என்று அழைத்து கொஞ்சம் சகஜமாக பேசத் துவங்கினாள்.

அன்னையர் இருவரும் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் பழைய கதை பேசி ஒவ்வொன்றையும் அவளுக்கு நினவு கூற உதவுமோ என்று எண்ணத்துடன் பேசியபடி இருந்தனர்.

அங்கே ஆபிசில் ரஞ்சனுக்கு வேலை ஓடவில்லை. ‘சித்து என்ன செய்கிறாளோ எப்படி இருக்கிறாளோ..... டாக்டர் வேறு, எந்த மாற்றங்களையும் உடனே அவருக்கு தெரிவிக்கும்படி கூறி உள்ளாரே’ என்று எண்ணி கலங்கினான். மாலை ஆறு மணி எப்போது ஆகும் என பதறி ஓடி வீட்டை அடைந்தான்.
“சித்து, எப்படிடா இருக்கே குட்டிமா?” என்றான் வந்ததுமே,
“நல்லா இருக்கேன்” என்பது போல தலையை ஆட்டினாள். அவனிடம் நேரே முகம் பார்த்து இன்னமும் ஒரு வார்த்தை பேச அவளுக்கு கூச்சமாகத்தான் இருந்தது.

இதே கதியில் வாழ்க்கை இயந்திரத் தனமாக சில மாதங்கள் ஓடி மறைந்தன. ஒவ்வொரு நாளும் பொழுதும் ரஞ்சன் அவள் மீது காட்டும் அன்பும் காதலும் பரிவும் கண்டு உணர்ந்து மெல்ல மெல்ல அவன்பால் சித்ராங்கிக்கும் அன்பு ஏற்படத் துவங்கி இருந்தது. ஆனால் அது அவன் அவள் கணவன் என்ற நிற்பந்தத்தினால் அல்லாமல் அவளாகவே மனம் கனிந்து ஒவ்வொரு செய்கையிலும் அவனின் அன்பை புரிந்து ஏற்பட்ட காதலாக இருந்தது.

அவள் மெல்ல மனம் கனிகிறாள் என்று உணர்ந்தே இருந்தான் ரஞ்சன்....
‘குட்டிமா சித்துமா’ என்று எப்போதும் போலவே கொஞ்சி மகிழ்ந்தான்.... ஆனால் அவளை அத்துமீறி தொட முயலவில்லை.... அதையும் மீறி இருவரும் ஒரே அறையில் தான் வாழ்ந்து வந்தனர்.... அவனுக்குண்டான அனைத்து பணிவிடைகளையும் அவளே பார்த்து பார்த்து செய்து வந்தாள்தான்.

“குட்டிமா” என்று இரைந்தான் பாத்ரூமிலிருந்து. அவளும் அங்கே ஓடி வந்து பாத்ரூம் வாயிலில் நின்றாள். மெல்ல கதவை தட்டினாள்.
“என் டவலை மறந்துட்டேன்டா” என்றான். அவள் கட்டிலில் கிடக்கும் டவலை எடுத்து அவனிடம் மெல்ல திறந்த கதவின் மூலம் நீட்டினாள். அதற்கே அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்து போனது. ரஞ்சனுக்கோ மனம் ஏங்கியது. முன்பு இதே போன்ற தருணங்களில் டவலை நீட்டும் சித்துவின் கைகளை பிடித்து அப்படியே உள்ளே இழுத்து அவளுடன் சில்மிஷம் செய்தது நினவு வந்து அவனின் உடலையும் உள்ளத்தையும் தகித்தது.
‘இந்த நிலை எப்போது மாறுமோ.... என் சித்து எப்போது என்னை உணர்வாளோ?’ என்று மாய்ந்து போனான். பெருமூச்சு வெளிப்பட்டது.

இத்தனை நாட்களில் சித்ரகலா மட்டும் தன் தாய் என்று சித்ராவை உணர்ந்து அவளிடம் முழுவதுமாக ஒட்டிக்கொண்டுவிட்டாளே என்று அனைவருக்கும் ஆச்சர்யம்.
“இதான் அண்ணி, அம்மா குழந்தை பாசம் னு நான் நினைக்கிறன்..... கலா எப்படி ஒட்டிகிட்டா பார்த்தீங்களா” என்று சிலாகித்தார் சிவகாமி.
“ஆமா சிவகாமி, சித்ராவும் தான் ஆகட்டும் குழந்தைகிட்ட எவளோ ஒட்டிகிட்டா எத்தனை பாசமா பாத்துக்கறா பார்த்தியா..... போகுது குழந்தைக்கானும் நல்லது.... அசலே கலா குட்டி ரொம்பவே ஏங்கி போயிருந்துது” என்றார்.



Saturday, 23 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE - 6

“சரி வாங்க, நானே உங்கள அவகிட்ட அறிமுகப்படுத்தறேன்..... எப்படி ரியாக்ட் செய்யறானு பார்க்கலாம்” என்று நடந்தார்.
அவளது அறையை அடைய அவள் படுத்து வெறுமனே கண் மூடி கிடந்தாள். “மாயா” என்றார் மெள்ளமாக டாக்டர். அவள் கண் திறக்கவில்லை.
“சித்ராங்கி” என்றார் சற்று உரக்க. யாரோ யாரையோ கூப்பிடுகின்றனர் என்பது போல கண் விழித்தவள் அசைவின்றி கிடந்தாள்.

“மாயா” என்றார் மீண்டும்
“ஆங் என்ன டாக்டர்?” என்று எழுந்து அமர்ந்தாள்.
“இதை பார்த்தியா” என்றார்.
“ஒ நீங்களா, இன்னும் போகலையா?” என்றாள் இவனைக் கண்டு புன்னகையுடன்.
“இப்போ உங்க கை வலி தேவலையா?” என்றாள்.
“ம்ம்ம்” என்றான் பேச்சே வராமல்.

“இது யாருன்னு உனக்கு தெரியுமா?” என்றார் கோபிநாத்.
“ஒ தெரியுமே, நேத்து பார்த்தேனே.... கையில அடிபட்டு கட்டு போட்டுக்க வந்தாரு..... இன்னிக்கும் என்னை பார்க்க வந்தாரு கொஞ்ச நேரம் முன்னாடி” என்றாள்.
“அதில்லை, இவர் உனக்கு என்ன வேணும் தெரியுமா?” என்றார் அவர்.
“என்ன வேணும்?” என்றாள் அவளும் திரும்ப.
இத்தனை நேரத்திலும் ரஞ்சனின் மனம் உலை களமாக கொதித்துப் போனது. யாரை காண அவன் இத்தனை நாளாக தவித்தானோ, யாருக்காக உயிர் தீ வளர்தானோ, அதில் தன்னையே மாய்த்துக்கொண்டானோ, அவள், அவனது சித்ராங்கி, அவனது குட்டிமா, இதோ ரத்தமும் சதையுமாக அவன் முன்னால் உயிரோடு ஓவியமாக நிற்கிறாள்.

அவளை கண்டு அவளென உணர்ந்து அவன் மனது இன்னமும் அந்த உணர்வில் பதை பதைத்தது.... உணர்ச்சி பிழம்பாய் அவளை தாவி கட்டி அணைக்க அவன் கைகள் தவித்தன..... ஆனால் அவளுக்கு அவன் இப்போது ஒரு அந்நியன்.... அந்த நிலையில் அவளை அப்படி அணுக அவனால் முடியாது.... ‘பொறுமை மனமே, எட்டும் தூரத்தில் என் சொர்க்கம்.... ஆனால் அவசரப்பட்டு அவளை கைநழுவி போய்விட விடக்கூடாது’ என்று பொறுமை காத்தான்.

“இதான் மா உன் புருஷன்” என்றார் கோபிநாத்.
“என்னது?” என்றாள் திகைத்து. அவனை நேரே கண்டு. தன் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை அவள் கைகள் இறுக பற்றின.
“இல்லை, நீங்க சும்மா சொல்றீங்க, அப்போவே இவர் வந்தாரே.... நேத்து வந்தாரே... அப்போ அவர் என்கிட்டே இதை சொல்லலியே?” என்றாள்.
“ஆம் சொல்லலை..... அவருக்கு அப்போ நீதான்னு தெரியலை... உனக்கும் தெரியும்தானே மாயா, உனக்கு முகம் சிதைஞ்சு ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடந்து உன் முகம் மாறி போயிருக்குன்னு... நான் உனக்கு விளக்கினேனே மா...?” என்றார்.
“ஆமா சொன்ணீங்க அதுக்கு?” என்றாள்.
“அதனால அவருக்கு உன்னை அடையாளம் தெரியலைமா, ஆனாலும் உன் குரல் உன் கண்ணு, உன் ஸ்பரிசம் உன் பேச்சு அவரை குழப்பினதுனாலதான் இன்னிக்கி உன்னை கண்டு தெளியத்தான் அவர் வந்தாரு..... இத்தனை நேரம் என்கிட்டே இதைப்பற்றி பேசினாரு..... எல்லாம் ருசுவாகி போச்சுதுமா....” என்றார்

“அதை நான் எப்படி டாக்டர் நம்பறது?” என்றாள் பாவமாக.
“உன் சந்தேகம் சரிதான் மா, உன் தயக்கம் நியாயமானது.... ஆனாலும் உன் கைப்பையை  கூட அவர் அடையாளம் காட்டீட்டாரு,  அதில இருந்த உன் நகைகளை கூட கரெக்டா சொல்லீட்டாரு மா..... அதில உன் கல்யாண போட்டோ கூட இருக்கு..... உன் சாயலில்தான் இருக்குமா” என்று எடுத்து காண்பித்தார்.

அதை அவசரமாக வாங்கி கண்ணில் நீர் மிதக்க பார்த்தாள்.... அவள் சாயலில் ஒரு பெண்ணும் அவளருகே ரஞ்சனுமாக மாலையும் கழுத்துமாக இருப்பதை கண்டாள்.... பின் அவனை கண்டாள்.... படத்தில் அவள் முகத்தை கண்டாள்.... ‘இந்த கண் காது எல்லாம் என்னைப்போலதான் இருக்கு.... ஆனாலும்.... ஆனாலும்...’ என்றது அவள் மனது.

அவளது பதைப்பு கண்டு “சித்து” என்றான் ஆழமாக காதலெல்லாம் அதில் தேக்கி.
“இல்ல, நான் மாயா” என்றாள்.
“இல்லைமா, உன் இயற் பெயர் சித்ராங்கி” என்றார் டாக்டர்.
“ஒ” என்றாள்.
“ஆம் சித்து, நான் உன்னை இப்படிதான் கூப்பிடுவேன், கூடவே குட்டிமான்னும் கூப்பிடுவேன் டா” என்றான். ‘ஒவ்வொன்றையும் அவளுக்கு சிறு குழந்தைக்கு புகட்டுவது போல இனி சொல்லி புகட்ட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டான். பொறுமையாக கையாளல் வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

‘அவள் கிடைத்ததே போதும், கடவுளே, என் குட்டிமாவை என்னிடம் சேர்த்துவிட்டாய்...... உனக்கு கோடி வணக்கங்கள்..... என  மனமார நன்றி கூறிக்கொண்டான்.... மிச்சம் எதுவுமே அவனுக்கு பெரிசாக தோன்றவில்லை.... அவளருகே சென்றான், மெல்ல அவள் கையை தொடப் போக அவள் கையை விலக்கிக்கொண்டாள்.

“என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான்.
“ஆமாம் சித்ராங்கி, இது உன் கணவன் தான் மா, என்னையானும் நம்பலாமே மா” என்றார் கோபிநாத்.
அவள் கண்ணீர் வழிய இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“உனக்கு ஒரு பெண் குழந்தை கூட இருக்குதாம் சித்ராங்கி” என்றார்.
“என்ன” என்று அதிர்ந்தாள்.
“ஆமா குட்டிமா, நம்ம கலாவுக்கு இப்போ ஒண்ணரை வயசு தாண்டி இருக்கு.... அதைத்தவிர வீட்டுல உங்கம்மாவும் எங்கம்மாவும் காத்திருக்காங்கடா...... உன்னை காணாம நாங்க எல்லாம் தவிச்ச தவிப்பு...... இந்த ஆறு மாசமா நான் என் வாழ்வையே தொலைச்சுட்டு தேடிகிட்டு இருந்தேன் டா குட்டிமா” என்று அவள் கைகளில் தன் முகத்தை பதித்து அழுது தீர்த்தான்.
அவன் அப்படி அழுவதை கண்டு அவளுள் ஏதோ மாற்றங்கள். இவன் உண்மை பேசுகிறான் என்று உணர வைத்தது. மெல்ல அவன் கைகளை தானும் பிடித்துகொண்டாள்.

“அழாதீங்க ப்ளீஸ்” என்றாள். அவன் மெல்ல நிமிர்ந்தான்.
“வாடா குட்டிமா வீட்டுக்கு போகலாம்” என்றான். அவள் கலவரத்துடன் கோபிநாத்தை பார்த்தாள்.
“என்னமா பயம், அழைக்கிறது உன் கணவன் தைர்யமா போ...... அங்கே தான் உங்கம்மா, உன் மகள், உன் அத்தை எல்லாம் இருக்காங்க..... அது உன் குடும்பம், இனி நீ உன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழணும் மகளே” என்றார் அவருக்கே துக்கமாக இருந்தது. மகளாகவே அவளை வரித்தது இப்போது தொண்டையை அடைத்தது.
“போகவா டாக்டர்பா?” என்றாள்.
“ஆம் மகளே நல்லபடியாக போய்வா” என்றார்.

“நான் போய் இந்திராவை அனுப்பறேன் மா.... அவ உனக்கு எல்லாம் பாக் செய்ய உதவுவா... நீ போய் முகம் கழுவி பிரெஷாகிக்கோ... ரெடியாகு மா.... நாங்க இதோ வரோம்” என்று வெளியே நடந்தார்.
“வாங்க ரஞ்சன், நான் உங்க கூட கொஞ்சம் முக்கியமா பேசணும்” என்று அழைத்துச் சென்றார்.

“டாக்டர் இவளுடைய மேற்கொண்டு சிகிச்சை மருந்துகள் எல்லாம் எப்படி..... இவளுக்கு நினவு திரும்புமா?” என்று கேட்டான் ரஞ்சன் அவருடன் வெளியே நடந்தபடி.
“திரும்பலாம், திரும்பாமலும் போகலாம்.... ஆனால் அவள் இப்போது ஒரு கண்ணாடி பாத்திரம் ரஞ்சன், மிகவும் ஜாக்ரதையாக கையாள வேண்டும்..... அவசரப்பட்டா அவளுடைய மன நிலைக்கே ஆபத்து வந்து பைத்தியமாகிடலாம்” என்றார் எச்சரிப்புடன்
“சரி, நான் பத்திரமா பாத்துக்கறேன் டாக்டர்” என்று வாக்களித்தான்.

“மருந்து மாத்திரைகள் எழுதி தரேன், அதை கண்டின்யு பண்ணுங்க, பார்போம் மெல்ல மெல்ல நினவு திரும்புதான்னு..... கொஞ்ச கொஞ்சமா தான் அவளுக்கு தன் வீடு தன் உறவுகள்னு புரியவைக்க முடியும்..... ஒரு வேளை தன் மகளின் முகத்தையும் மழலை பேச்சையும் கேட்டு உடனடியாக கூட நினைவு வந்திடலாம், வராமலும் போகலாம்..... வீட்டில இருக்கிற பெரியவங்க கிட்ட பக்குவமா சொல்லி வையுங்க..... அவகிட்ட பார்த்து கேட்டு நடந்துக்க சொல்லி....”
“கண்டிப்பா சொல்றேன் டாக்டர்.... நான் அவளை என் விழிக்குள் வைத்து கண் இமையால் மூடி காப்பேன்.... நீங்க கவலையே பட வேண்டாம்” என்றான்.

“இன்னொரு முக்கியமான விஷயம் ரஞ்சன்” என்றார்.
“சொல்லுங்க டாக்டர்” என்றான் உன்னிப்பாக.
“என்னதான் நான் இவ்வளோ சொல்லி இருந்தாலும், இன்னமும் அவள் பெண் மனம் உங்களை முழுமையாக தன் கணவனா ஏத்துக்கலை, அதுக்கு நாளாகும், ஏற்காமலே தள்ளியே நிற்கலாம், அதுவும் சாத்தியம்தான்..... ஆனா நீங்க அவகிட்ட அவசரப்பட்டு எதுவும்.....” என்று கூச்சத்துடன் நிறுத்தினார்.

“புரியுது டாக்டர்..... எனக்கு அவ கிடைச்சதே போதும், அதுக்கு மேல நான் இப்போதைக்கு அவகிட்ட வேறே எதுவுமே எதிர்பார்க்கலை..... அவளாக மாறி என்னை மனமுவந்து எப்போ கணவனா ஏத்துக்கறாளோ, அப்போதான் நானும் அந்த உரிமைகளை அவளிடம் எடுத்துக்கொள்வேன்” என்றான் அவனும் சற்றே கூச்சத்துடன்.

“டாக்டர், ஆறு மாசமா என் குட்டிம்மாவை இங்கேயே வெச்சு அன்புடன் பார்த்துக்கொண்டிருக்கீங்க, அதுக்கு நன்றி சொல்ல கூட எனக்கு தகுதி இல்லை. அத்தனை செலவும் நீங்க ஏற்றுக்கொண்டு செஞ்சிருக்கீங்க, அந்த நன்றி கடனையானும் நான் தீர்க்க ஆசைப்படறேன்... ப்ளீஸ், தயவு பண்ணி எவ்வளவு ஆச்சுனு சொல்லுங்க” என்று கெஞ்சினான்.
“அது இருக்கட்டும் மிஸ்டர் சித்ராஜன், என் மகளின் வாழ்க்கை மீண்டுடுத்து அதுவே எனக்கு போதும்” என நிறைவாக புன்னகைத்தார்.

“இல்லை இல்லை டாக்டர், செலவு நிச்சயம் நிறைய தான் ஆகி இருக்கும், பிளீஸ் டாக்டர் அல்லவ் மீ டு பே” என்றான்.
“சரி உங்க இஷ்டம். நான் பில்லுக்கு ஏற்பாடு செய்யறேன்” என்றார்
“இன்னும் ஒரு விஷயம், நான் அந்த வெங்கட்டை சந்திக்கணுமே, அவர் காண்டாக்ட் உங்க கிட்ட இருக்கா, அவராலதானே என் குட்டிமா எனக்கு மீண்டும் கிடைத்திருக்கா, நான் அவரை கண்டு என் நன்றியை சொல்லணும் மனமார வாழ்த்தணும் டாக்டர்” என்று கேட்டுகொண்டான்.

“கண்டிப்பா, நான் அவர் நம்பர் தரேன், இப்போ வர்ற நேரம்தான்... வந்தாலும் வருவார்.....” எனும்போதே வெங்கட் உள்ளே வந்துகொண்டிருந்தான்.
“உங்க நல்ல நேரம், அதோ பாருங்க நாம பேசிக்கொண்டு இருக்கும்போதே வந்துட்டாரு” என்று கை காண்பித்தார்.
முப்பதை தொடாத வயது, நல்ல உயரம், களையான முகம் என வெங்கட் டாக்டரின் அருகே வந்து,
“ஹலோ டாக்டர், மாயா எப்படி இருக்கா இன்னிக்கி, எனி இம்ப்ரூவ்மென்ட்?” என்று கேட்டான் ஆவலுடன்.
“இல்லைப்பா ஆஸ் யுஷுவலா தான் இருக்கா, ஆனா ஒரு அதிசயம் நடந்தது இன்னிக்கி....” என்று ரஞ்சன் அவளை தேடி வந்து பேசி கண்டுபிடித்த விவரத்தை கூறினார் கோபிநாத்.

“ஒ மை காட், இவ்வளோ நடந்திருக்கா, அப்போ அவளோட கணவர் கிடைச்சுட்டாரா, அவரை நான் பார்க்கலாமா டாக்டர்?” என்றான். ஆச்சர்யம், சந்தோஷம் ஆனால் கண்களில் ஒரு வித கலக்கம் சோகம் என் பல முக பாவங்களும் தோன்றி மறைந்தன.

“இதோ, இவர்தான் அவள் கணவர் சித்தரஞ்சன்” என இவனை அறிமுகம் செய்து வைத்தார்.
“ஒ நீங்கதானா, க்ளாட் டு மீட் யு” என்று கை கொடுத்தான்.
அந்த கைகளை தன் இரு கைகளிலும் பொதிந்து கொண்டு,
“ஐ ஆம் ஸோ தாங்க்புல் மிஸ்டர் வெங்கட், எனக்கு என்னுடைய வாழ்க்கையே மீட்டு குடுத்திருக்கீங்க, என் குட்டிமா இல்லாம நான் இந்த ஆறு மாசமா தவித்த தவிப்பு ,அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்..... ஐ டோன்ட் நோ ஹவ் டு தாங்க் யு..... எவ்வளோ நன்றி சொன்னாலும் போதாது” என்றான் கண்ணில் நீர் பொங்க.

“ஒ நத்திங், இது மனித இயற்கை, உதவ முடிஞ்சதுல எனக்குதான் சந்தோஷம், அதைவிட, உங்களை எப்படி எங்க தேடி கண்டுபிடிப்பதுனு டாக்டர் அனுதினமும் குழம்பி இருந்தார்.... கடவுள் சித்தம் போல, நீங்களே இங்கே அடிபட்டுகிட்டு வந்து மாயவை கண்டு பிடிச்சு சேர்ந்துட்டீங்க.... ஐ ஆம் சொ ஹாப்பி” என்றான் உளமார. கண்ணில் சின்ன வலி தோன்றி மறைந்தது.

“வெங்கட், மாயாவின் இயற் பெயர் சித்ராங்கி” என்றார் கோபிநாத்.
“ஒ ஐ சி” என்றான் வெங்கட்.

“நான் அவங்கள ஒரு முறை பார்க்கலாமா?” என்றான் ரஞ்சனிடம்,
“ஒ ஸ்யூர், என்ன தயக்கம், வாங்க” என்று அவனுடன் நடக்க, சித்ராங்கி எதிரே வந்தாள்.
“ஹாய் மாயா” என்றான்,
“ஹலோ வெங்கி, எப்படி இருக்கீங்க, இன்னிக்கி என்னென்னமோ நடந்துடுச்சு தெரியுமா” என்றாள் ஆவலாக அவனிடத்தில்.
அவன் புன்னகையுடன் “தெரியும், ஐ ஆம் ஸோ ஹாப்பி பார் யு” என்றான் .
“ஒ டாக்டர்பா சொல்லீட்டாரா, இவர்தான்...” என தயக்கத்துடன் ரஞ்சனை காட்டினாள். மேலே எப்படி அறிமுகம் செய்வது என கூச்சத்துடன் பேசாமல் தலை தாழ்த்திக்கொண்டாள் சித்ராங்கி.
“தெரியும், இப்போதான் சந்திச்சு பேசினோம்” என்றான் வெங்கட்.

“அப்போ நாம கிளம்பலாமா சித்து?” என்றன் ரஞ்சன். சரி என்பதுபோல மெல்ல தலை அசைத்தாள். ஏறெடுத்து வெங்கட்டை பார்த்தாள்.
“நான் வரேன் வெங்கி, தாங்க்ஸ் பார் ஆல் யுவர் ஹெல்ப்.... எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை...” என்று கை கூப்பினாள்.
“ஒ நோ மாயா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், நீங்க, உங்க கணவரோட சேர்ந்து உங்க வீட்டுக்கு போறீங்க... எனக்கு அதுவே போதும்” என்றான் கண்ணில் நீரோ என சந்தேகம் தோன்றியது. பிறர் காணாமல் துடைத்து கொண்டான்.
“வரோம் வெங்கட், இது என் கார்ட்... நீங்க சென்னை வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்” என்று கை கொடுத்தான் ரஞ்சன்,
“யா ஸ்யூர்” என்று வாங்கிக்கொண்டான்.

“தாங்க்ஸ் ரஞ்சன், நீங்க ரொம்ப நல்ல மனிதர்.... அதனாலதான் கடவுள் உங்கள கைவிடலை, உங்க சித்ராங்கிய உங்க கண்ணுல காமிச்சுட்டார். இல்லைனா, அவ கை பைய நானும்தான் குடைஞ்சேன்... ஆனா எந்த துப்பும், பேர் விலாசம் எதுவுமே கிடைக்கலை...... இந்த சின்ன பர்ஸ்.... அதில உங்க போட்டோ.... எதுவுமே என் கண்ணில படலை.... பட்டிருந்தாலும் அதை வெச்சு ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது....“

“நீங்க இங்க வந்ததும், அடிபட்டுகிட்டதும், இங்கேயே சிகிச்சைக்கு வந்ததும், கூட தெய்வாதீனம் தான் போல ரஞ்சன்..... இப்பவும் அவ என் மகள் தான்.... அவளை நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்... பார்த்துக்குங்க.... எந்த நேரத்தில உங்களுக்கு என்ன டவுட் வந்தாலும் அவ கிட்ட என்ன மாறுதல் கண்டாலும் உடனே எனக்கு போன் பண்ணுங்க” என்றார் டாக்டர்.

சித்ராங்கி தன் சிறு பையுடன் அவனை நெருங்கி நடந்து வந்தாள். தன் அறைக்குச் சென்று அவளின் சிகப்பு கைபையை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார். கல்யாண புகைப்படம் இன்னமும் அவள் கையிலேதான் இருந்தது... அதை அவ்வப்போது உறுத்து பார்த்துக்கொண்டாள்.

இப்போது அவன் அந்த கைபையை அவளிடத்தில் தர, அதை வாங்கி அந்த படத்தை அதனுள் வைத்துக்கொண்டாள்.
“வரேன் இந்திரா, எல்லாத்துக்கும் தாங்க்ஸ்” என்றாள் நர்சிடம் அவள் கையை பிடித்து கண்களில் ஒற்றியபடி.
“நான் சொ ஹாப்பி.... உங்க புருஷன் வந்துட்டாரு, உங்கள கூட்டிப்போக” என்று மகிழ்ந்தாள். ஒரு சிறு புன்னகையுடன் முகம் நிறைய குழப்பத்துடன் கோபிநாத்தின் கால் பணிந்து வணங்கி எழுந்தாள்.

“ஐயோ மகளே, என்ன இது... நல்லா இருமா, உன் புருஷனோட நல்லபடி குடித்தனம் பண்ணு, இந்த அப்பாவை மறந்துடாதே கண்மணி” என்றார்.
மறக்க  மாட்டேன் என்று தலை ஆட்டினாள். அவர்களை வழிகூட்டி அனுப்பி வைத்தார்.

அத்யாயம் 4
அன்று மாலை விமானத்தில் இரு டிக்கட்டுகள் போட்டு அவளையும் அழைத்துக்கொண்டு நேரே ஏற்போர்ட்டிற்கே சென்றான். அங்கிருந்து வீட்டை அழைத்து தன் தாயிடம் சுருக்கமாக அவளை கண்டு பிடித்த விஷயத்தை அவளுக்கு நினைவுகள் மயங்கி போயிருப்பதையும் அவளை கண்டதும் கொஞ்சம் ஜாக்ராதையாகவே பழக வேண்டும் என்பதையும் கூறினான். சிவகாமி மகிழ்ந்து போனார்.

“அப்படியா கிடைச்சுட்டாளா, நம்ம சித்ரா அம்புட்டுட்டாளா... ரொம்ப சந்தோஷம்... நிஜம்மாவா சொல்றே.... எப்போ வரே?” என்றார்.
“தோ இப்போ விமான நிலையத்திலேர்ந்துதான் பேசறேன்..... இன்னும் மூணு மணி நேரத்தில வீட்டில இருப்போம்... ரெண்டு பேரும் பார்த்து நடந்துக்குங்க” என்று கூறி வைத்தான்.
சிவகாமி அதை கற்பகத்திடம் கூற அவருக்கு மகிழ்ச்சியில் மயக்கமே வந்தது. கடவுளுக்கு உடன் ஓடி நன்றி கூறினார்.