Saturday 22 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 3

 “அட நீங்க ஏன் சிரமபட்டுகிட்டு.... நான் செய்திருப்பேனே” என்றாள் அவள். 
“இல்ல பரவாயில்லை, அசலே என்னால உங்களுக்கு சிரமம்.... எனக்கு இரவு உணவு வெறும் பால் இல்ல பழம் இருந்தாலும் போதும் பசிக்கல..... குழைந்தைய வேற வெச்சுகிட்டு, உங்களுக்கு கஷ்டம்” என்றான்.
“அதெல்லாம் ஒன்றுமில்ல சிம்பிளாத்தான் சமைக்கறேன்.... ரொம்ப வசதி எல்லாம் கிடையாது... நீங்கதான் பாவம்..... இன்னிக்கி இங்க வந்து இப்படி கஷ்டப்படணும்னு இருக்கு” என்றாள்.

“அவர் எப்போ வருவார்?” என்று கேட்டான்.
அவள் “யாரு?” என்று கேட்டாள்.
“அதாங்க உங்க கணவர்” என்றான்.
“இல்லை வரமாட்டார்” என்றாள் அவள்.
அவளை ஆராய்ந்தான். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“அப்போ அவரு உயிரோட....” என்று இழுத்தான். மேலும் குடைய கஷ்டப்பட்டுக்கொண்டே.
“இல்லை” என்று மட்டும் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
‘அப்படி என்றால் அவன் உயிரோடு இல்லையா.... நான் சொன்னது போல இல்லையா... அவள் கூறுவதற்கு என்ன பொருள்?’ என்று ஆராய்ந்து மண்டை வலித்தது.

மழை வலுத்து கரண்ட் வந்து வந்து போனது. அவள் ஆங்காங்கு லாந்தர் ஏற்றி வைத்தாள். அந்த இருட்டிலும் சமைத்து முடித்தாள். ஒரு சின்ன மேஜையை அவன் நாற்காலி முன் இழுத்துப் போட்டு அதில் ஒரு தட்டு கொண்டு வைத்தாள்.
“சாதா சமையல்தான் மன்னிக்கணும்.... உங்களப் பார்த்தா பெரிய இடம் மாதிரி இருக்கு” என்றாள்.
“என்னங்க நீங்க, இந்த மழையில இருட்டில நீங்கதான் எனக்கு அவ்ளோ உதவி செஞ்சுகிட்டு இருக்கீங்க.... அதுக்கே பெரிய நன்றி சொல்லணும் நானு” என்றான் அவன் உண்மையான பாராட்டுடன்.
“சாப்பிடுங்க” என்றாள்.

அந்த குளிருக்கு இதமாக சூடான வெண் பொங்கலும் அதற்கு ஏதுவாக கத்திரிக்காய் கொத்சுவும் செய்திருந்தாள். தட்டில் இட்டு ஒரு ஸ்பூனுடன்கொடுத்தாள்.
அதை எடுத்து உண்ண உண்ணத்தான் தெரிந்தது அவன் எவ்வளவு பசியாக இருந்திருக்கிறான் என்று. ஆவலுடன் அந்த எளிமையான ஆனால் ருசியான உணவை நொட்டைவிட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தான்.
“இன்னும் கொஞ்சம் வெச்சுக்குங்க” என்று கொண்டு வந்து கொடுத்தாள்.
‘அவளுக்கே இருக்குதோ இல்லையோ’ என்று அவன் கவலைப்பட்டான்
“நீங்க?” என்று கேட்டான்.
“நான் தோ இவன் தூங்கினதும் சாப்பிடுறேன்... இல்லேன சாப்பிட விட மாட்டான்” என்றாள் குழந்தையை செல்லம் கொஞ்சியபடி. அவன் சாப்பிட்டு முடித்து கை அலம்பி எழுந்தான்.
“குழந்தைய என்கிட்டே கொடுங்க.... வருவானா, இல்ல புது முகம் பார்த்து அழுவானா..... நான் பாத்துக்கறேன் நீங்க போய் சாப்பிடுங்க” என்றான்.
“அதெல்லாம் அழமாட்டான்” என்று அவனிடம் நீட்டினாள். “ஆனாலும் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்” என்றபடி
“அதெல்லாம் ஒண்ணுமேயில்லை... என்ன பேரு?’ என்று கேட்டான்.
“கிருஷ்ணா அனா நான் கண்ணான்னு கூப்பிடுவேன்” என்றாள்.
“ஓ நீ கண்ணனா, மாயக்கண்ணனா, யதுகுல கண்ணனா?” என்று தலைக்குமேல் தூக்கி கொஞ்சினான்.... அதுவும் அந்த கோகுல கண்ணனைப் போலவே சிரித்து மயக்கியது.

கொழுக் கன்னங்களில் முத்தம் பதித்தான். மடியில் வைத்துக்கொண்டு என்னமோ பேசினான். என்னமோ புரிந்ததுபோல அவன் வயிற்றில் அமர்ந்துகொண்டு கண்ணனும் சிரித்துக்கொண்டான். அவர்களை மறந்த அந்த நிலையை கண்டு வியந்தாள் அந்தப் பெண், அவள், மதுவந்தி.
சாப்பிட்டு சமையலறை சுத்தம் செய்து வெளியே வந்து கண்ணனை வாங்கிக்கொண்டாள். அவனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றும் நிலை அறிந்து தோளில் சாய்த்து தட்டிக் கொடுக்க அவன் ஐந்து நிமிடங்களில் தூங்கியே போனான்.
திலீபனுக்கும் கண்ணை சொக்கியது சூடான ருசியான சாப்பாடு இதமான இடம் மனசு அமைதியானது.

“நீங்க இங்க ஹால் ல படுங்க” என்று கூறி உள்ளே சென்று கண்ணனை கிடைத்திவிட்டு ஒரு நாடா கட்டிலை இழுத்து வந்தாள். “இதில படுத்துக்கொங்க” என்றாள்.
“ஐயோ நீங்க ஏன்” என்று அவன் விந்தியபடி உதவினான்.
“நீங்க உங்கள கஷ்டபடுத்திக்காதீங்க” என்று அடக்கினாள்.
அவனுக்கு போர்வை தலையணை கொடுத்துவிட்டு உள் வாசல் கதவை தாழிட்டு விட்டு உள்ளே செல்லத் திரும்பினாள். “என்னங்க நீங்க யாரோ என்னமோ.... நானோ முன்பின் தெரியாதவன்.... இங்க இப்படி படுத்தா...” என்று மேலும் கூறத் தயங்கி நிறுத்தினான். “மழை விட்டுடுத்து நான் வேணா காரில் படுக்கிறேனே” என்றான்.
“ஒண்ணும் வேண்டாம்..... நாம நம்புகிறக் கடவுளுக்கு மட்டும்தான் உண்மையா இருக்கணும்.... நான் அவருக்கு மட்டும்தான் பயப்படுவேன்.... நீங்க பேசாம யோசிக்காம படுங்க..... உங்கள நான் அறிய மாட்டேன் உண்மைதான்.... ஆனா என்னை நான் அறிவேனே..... என்னை காத்துக்க எனக்குத் தெரியும்..... தேவைப்பட்டா உங்களை கொல்லவும் எனக்குத் தெரியும்” என்று சிரித்தாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்து அவனும் சிரித்து வைத்தான்.
“குட் நைட்” என்றபடி உள்ளே சென்று அறையை தாளிட்டுக்கொண்டு படுத்துவிட்டாள். சில நொடிகளில் நாள் முழுதுமான அலைச்சலினால் திலீபும் உறங்கிவிட்டான்.

அத்யாயம் ஐந்து
அசந்து தூங்கியவன் பாதி இரவில் கால் வலி எடுத்து தவித்து முழித்தான். “ஐயோ அம்மா” என்று அனத்தினான். எழுந்து கட்டிலில் அமர்ந்து தன் கையால் காலை அமுக்கிவிட்டுக் கொண்டான். லேசாக வீங்கியுள்ளது போலத் தோன்றியது.
‘இப்போது என்ன செய்வது’ என்று குழம்பினான். அந்த சின்ன சலசலப்பு கேட்டு அவள் எழுந்து வந்தாள்.
“என்ன என்னாச்சு?” என்று கேட்டாள்.
“சாரி உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன்.... கால் ரொம்ப வலி தாளல அதான் எழுந்து....” என்றான்.
“ஒ அடப் பாவமே.... இருங்க வரேன்” என்று உள்ளே சென்று சூடாக பானம் கரைத்துக்கொண்டு ஒரு பாராசெடமால் மாத்திரையும் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இது குடிச்சுட்டு இந்த மாத்திரையை போட்டுக்குங்க” என்று கூறிவிட்டு அவன் காலை ஒரு மெல்லிய துவாலையால் பிரஷர் பேண்டேஜ் போல சுற்றி இருக்க கட்டி பின் செய்தாள்.
“இப்போதைக்கு இது பிடிச்சாப்ல இருக்கும்.... மாத்திரை வேலை செய்தா வலி அவ்வளவா தெரியாது.... தூங்க முயற்சி பண்ணுங்க.... ஏதானும் வேணும்னா கூப்பிடுங்க.... என்  பெயர் மதுவந்தி” என்று கூறிச் சென்று படுத்துக்கொண்டாள்.
அதன்படி செய்ய சில நிமிடங்களில் வலி குறைந்து மீண்டும் அயர்ந்து தூங்கிப்போனான் திலீப்.

காலையில் பட்சிகளின் கீச் குரல் கேட்டு கண் விழித்தான். கூடவே அவனை யாரோ தொட்டு தடவுவது போலத் தோன்றி கண் விழித்தான். எங்கே இருக்கிறோம் என்று ஒரு நிமிடம் புரியாமல் விழித்து பின் உணர்ந்தான். அருகில் காண கண்ணன் தவழ்ந்து வந்து அவன் கட்டிலை பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்தான்.
“அட கண்ணா எழுந்துட்டியா” என்று தானும் எழுந்து அவனை வாரி எடுத்துக்கொண்டான். அதுவும் கிகிகி என்று சிரித்துக்கொண்டு அவன் மீசை அவன் மூக்கு என பிடித்துப் பார்த்து விளையாடியது. அந்தச் சின்னஞ்சிறு சிசுவின் ஸ்பரிசம் அவனை எங்கோ கொண்டு சென்றது இருக்கி அணைத்து முத்தமிட்டான்.

“அட உங்கள வந்து எழுப்பீட்டானா, மன்னிச்சுடுங்க.... நான் முகம் கழுவப் போனேன்” என்றபடி வந்தாள் மதுவந்தி.
“இட்ஸ் ஒகே, கண்ணனை எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு” என்று இருக்கிக் கொண்டான்.
“ஆமா இங்க கூட பக்கத்துல எல்லாருக்கும் அவன ரொம்பப் பிடிக்கும்.... எப்போதும் யாராச்சும் வந்து தூக்கி வெச்சுப்பாங்க” என்றாள்.
“அப்படியா கண்ணா, நீ கோகுலத்து கண்ணனா?” என்றான் அவனை கொஞ்சியபடி. புரிந்ததுபோல சிரித்தது.
“கால் வலி தேவலையா?” என்று கேட்டாள்.
“ஆமா ரொம்ப தாங்க்ஸ்... உங்க வைத்தியம் பலிச்சுது” என்றான். “நீங்க நர்சிங் படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டான்.
“இல்ல முதலுதவி ஓரளவு பரிச்சயம்” என்றாள்.
“ஒ குட்” என்றான்

அவன் மெல்ல எழுந்து விந்தியபடி சென்று முகம் கழுவி வந்து அமர்ந்தான். அவள் காபியை நீட்டினாள். குடித்துக்கொண்டே வெளியே பார்த்தான். இன்னமும் இருட்டாக இன்றும் மழை உண்டு என்றது வானம். சில்லென்ற காற்று உய் என்ற ஓசையுடன் வீசிக் கொண்டிருந்தது. இந்த இருட்டில் மழையில் எப்படியும் ரோடை சரி பண்ணி இருக்க முடியாது. என்ன செய்வது என்று யோசித்தான்.
“இன்னிக்கும் மழைதான் போல” என்று அவளும் அதையே கூறினாள். ம்ம் என்றான்

என்ன செய்வது என்று அறியாத நிலையில் அவளிடத்தில் பேச்சு குடுத்தான்.
“என்னைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் அடைக்கலம் கொடுத்தீங்க, ரொம்ப தாங்க்ஸ்..... ஆனாலும் என்னைப்பற்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கேன்.... நான் திலீப், மேலே ஊட்டியில் ‘மிஸ்டீ மெடோஸ்’ எஸ்டேட் எங்களோடதுதான். நான் அந்த குடும்பத்து ஒரே வாரிசு” என்றான்.
“ஓ!” என்றாள் கண்கள் விரிய “அப்போ ‘கோல்டன் ரிசார்ட்’ மற்றும் ஹோட்டல், சில பழ தோட்டங்கள் எல்லாமும்....” என்று இழுக்க
“ஆம் எங்களோடதுதான்” என்றான்.
“ஓ, நான் உங்க குடும்பம் பற்றி தொழில்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கேன்..... நீங்க எவ்வளோ பெரிய மனிதர், நீங்க போய் இப்படி இங்க இந்த வசதி இல்லாத நிலையில தங்கும்படி ஆயிடுச்சு” என்று கூறினாள் தயங்கியபடி.
“நோ நோ, அப்படி சொல்லாதீங்க மதுவந்தி..... இக்கட்டான அந்த நேரத்தில நீங்க மட்டும் அடைக்கலம் குடுத்திராவிட்டால் நான் என்ன ஆகி இருப்பேனோ.... நான் உங்களுக்கு ரொம்பவும் கடமை பட்டிருக்கேன்... ரொம்ப தாங்க்ஸ்.... நான் எங்க அம்மாவோட இருக்கேன்.... அப்பா இறந்துட்டாரு..... நீங்க உங்களப் பற்றி சொல்ல விருப்பப்பட்டா சொல்லலாம்” என்றான்.

“என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இல்லை மிஸ்டர் திலீப்..... நான் பிறக்கும்போதே அனாதை.... என் அம்மா நான் பத்து நாள் சிசுவா இருக்கும்போது இங்கே உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டாளம்.... அங்கேதான் வளர்ந்தேன்.... ஸ்கூல் முடித்தேன்.... பொதுவாக பதினெட்டு வயது வரையில்தான் ஆசிரமத்தில் வைத்துக்கொள்வார்கள்.... ஆனால் எங்கள் தலைவி பூரணி அம்மா எனக்கு தாய்க்கும் மேல..... அவங்களுக்கு நான்னா உயிர்.... அதனால என்னைத் தன் சொந்த செலவில் தனக்கு உதவியாக வைத்துக்கொண்டாங்க..... அவங்களுக்கு வயதானதால அதிகம் நடமாட முடியாது..... அவங்க வேலைகளிலும் வீட்டையும் நான் பராமரித்தேன்.... ஆசிரமத்தில் இருந்தபோது முதலுதவி கைத்தொழில் னு சில பயிற்சிகள் கொடுக்கப்பட்டது..... பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து மாண்டிசோரி ட்ரெய்னிங் எடுத்தேன்.... இங்க ஒரு ப்ரைமரி ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்கிறேன்.... அங்கேயே ஒரு குழந்தை காப்பிடம் இருப்பதால் வேலை செய்யும்போது கண்ணனை அங்கேயே வைத்துக்கொள்வேன்” என்றாள்.
இடைப்பட்ட வாழ்வில் நடந்தவற்றை அவள் குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்தான்.

“உங்க கணவர், கண்ணன் உங்க குழந்தையா?” என்று கேட்டான் ஆவல் தாங்காமல்.
“ஆமாம்” என்றாள்.
“அவன் தந்தை?” என்றான் மீண்டும்
“இல்லை” என்றாள். “ப்ளிஸ் மேற்கொண்டு எதுவும் கேட்காதீங்க” என்று எழுந்து “நான் ஏதானும் டிபன் செய்யறேன் உங்களுக்கு பசிக்கும்” என்று உள்ளே சென்றுவிட்டாள்.
அவன் கண்ணனைக் கையில் வைத்துக்கொண்டு குழம்பிப்போய் அமர்ந்தான்.
‘இவள் விதவையா அல்லது இவளை கைவிட்டு ஓடி விட்டானா இவள் கணவன்.... அல்லாது யாரையேனும் நம்பி ஏமாந்துவிட்டாளா’ என்று தோன்றியது. விடைதான் இல்லை.

சிறிது நேரத்தில் வாசலில் குரல் கேட்டு வெளியே வந்தாள்.
ஒரு சிறுவன் வந்து “அக்கா எங்க அக்கா காலில அடி பட்டிடுச்சுகா ஒரே ரத்தமா வருது.... அம்மாதான் உங்ககிட்ட கேட்கச் சொன்னாங்க... கொஞ்சம் வரீங்களா?” என்று கேட்டான்.
“சரி இருடா அசோக் அஞ்சு நிமிஷத்துல வரேன்....அடுப்பை அணைக்கணும்” என்று உள்ளே சென்று பின்னோடு ஒரு மருந்து பெட்டியுடன் வெளியே வந்தாள்.
கண்ணனையும் தூக்கிக்கொண்டு “நீங்க பேசாம இங்கேயே ரெஸ்டா இருங்க மிஸ்டர் திலீப்.... நான் இதோ பத்து நிமிடத்தில வந்துடறேன்” என்றபடி அந்தச் சிறுவனுடன் வெளியேறிவிட்டாள்.
பத்து நிமிடங்களில் திரும்பி வந்து பெட்டியை வைத்துவிட்டு போய் கை கால் கழுவிக்கொண்டு சமையலை தொடர்ந்தாள். “என்னாச்சு?” என்றான் திலீப்.
“ஒண்ணும் இல்லை அந்தப் பைய்யனோட அக்கா பாவம் மழையில வெளியே போயிருக்காங்க.... தேங்கின சகதிலேர்ந்து ஏதோ குத்திடுச்சு போல.... நிறைய ரத்தம் போனதை பார்த்ததும் பயந்துட்டாங்க... அதான் கழுவி சுத்தம் செய்து கட்டு போட்டேன்” என்றாள் ஒன்றுமே பெரிய விஷயம் இல்லை என்பதுபோல.

“வாங்க டிபன் சாப்பிடலாம், உப்புமா தான் செய்ய முடிஞ்சுது” என்று கூறியபடி பரிமாறினாள். கொஞ்சம் எலுமிச்சை ஊருகாயுடன் அதுவே அவனுக்கு அமிற்தமாய் இருந்தது. அவளும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் வாசலில் யாரோ அழைத்தனர். வெளியே சென்று “வாங்கக்கா” என்று அழைத்து வந்தாள். தயங்கி உள்ளே வந்தவர் ஒரு நடுத்தர வயது மாது. “யாராச்சும் விருந்தாளி வந்திருக்காங்களா மது.... தொந்தரவு செய்துட்டேனா?” என்று கேட்டார் மெல்லிய குரலில்.
“இல்லை அக்கா, இவர் மேலே எஸ்டேட் வெச்சிருக்கார்..... நேற்று இரவு இவர் கார் நின்னு போச்சு.... மலை சரிவு வேற... அதான் இங்க தங்கச் சொன்னேன்..... சேரில வழுக்கி விழுந்து காலில வேற அடி பாவம்” என்றாள்.
“அடப்பாவமே” என்றார் அந்த மாது.
“சொல்லுங்கக்கா என்ன விஷயம்” என்று கேட்டாள்.
“ஒண்ணுமில்ல கண்ணு, மழையில கடை எல்லாம் மூடியே கிடக்கு.... எதாச்சும் காய் இருக்குமா உன் கிட்டன்னு கேட்க வந்தேன்” என்றார் அவர் தயங்கியபடி.
“என்கிட்டேயும் பெரிசா ஒண்ணுமில்லைகா..... வேணும்னா உருளை வெங்காயம் இருக்குது போதுமா” என்று கேட்டபடியே உள்ளவற்றில் சிலதை எடுத்து ஒரு பையில் போட்டு கொடுத்தாள்.
“ரொம்ப தாங்க்ஸ் மா..... நான் கடை திறந்ததும் வாங்கி வந்து கொடுத்துடறேன்” என்றபடி சென்றுவிட்டார் அந்த மாது.

‘இவளுக்குத்தான் என்ன இனிமையான குணம் பிறருக்கு உதவுவதே இவள் பண்பாய் உள்ளதே’ என்று மெச்சிக்கொண்டான்.
‘ஆனால் அழுத்தம், தன்னைப் பற்றி கண்ணனின் தந்தையைப் பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை’ என எண்ணிக்கொண்டான்.

பேன்ட் காய்ந்திருந்தது. அதனால் குளித்தால் தேவலை எனத் தோன்றியது. ஆயினும் அவள் முன்னால் எப்படி என்று கொஞ்சம் கூச்சமாகியது. 

அவன் மனம் அறிந்தவள் போல, “இந்த மழையில ஸ்கூல் இருக்காது..... மலை சரிவு வேற ஆயிருக்கு.... நான் கொஞ்சம் வெளியே என் தோட்டத்தை சுற்றிப்பார்த்து ஏதானும் செப்பனிட வேணுமான்னு பார்த்திட்டு வரேன்.... நீங்க குளிப்பதானால் குளிச்சுடுங்க” என்று கூறி அவள் கண்ணனுடன் வெளியே சென்றுவிட்டாள்.

3 comments: